சார்பட்டா பரம்பரை ரோஷமான குத்துச் சண்டைதானா… படம் பார்க்கலாமா, வேண்டாமா?!

One Line

சார்பட்டா பரம்பரைக்கும் இடியாப்ப பரம்பரைக்கும் நடக்கும் ரோஷமான குத்துச் சண்டை போட்டிதான் `சார்பட்டா பரம்பரை’ படத்தின் கதை. 

Streaming Link

Story Line

சின்ன வயதில் இருந்தே குத்துச் சண்டை விளையாட்டின் மீது தீராத காதல் கொண்டவராக இருக்கிறார் கபிலன் (ஆர்யா). ஆனால், அம்மாவிற்கு பயந்து கையில் களௌவ்ஸ் அணியாமல் தவிர்க்கிறார். சார்பட்டா பரம்பரை குத்துச் சண்டை வீரர்களுக்கு பயிற்சியாளராக இருப்பவர் வாத்தியார் ரங்கன் (பசுபதி). ராமன் (சந்தோஷ் பிரதாப்), வெற்றி (கலையரசன்) ஆகிய இருவரும்தான் வாத்தியாரின் ஃபேவரைட் மாணவர்கள். இதில் வெற்றி, வாத்தியாரின் மகன். இடியாப்ப பரம்பரையுடன் குத்துச் சண்டையில் ஈடுபடும் அனைத்து சின்ன போட்டிகளில் வென்றாலும் மெயின் போர்டு என்று சொல்லப்படும் போட்டியில் சார்பட்டா பரம்பரையால் ஜெயிக்க முடியவில்லை. காரணம், எதிர்த்து நின்று அடிப்பவர் வேம்புலி (ஜான் கொக்கென்). பல ஆண்டுகளாக டான்ஸிங் ரோஸுக்குப் (ஷபீர்) பிறகு இடியாப்ப பரம்பரைக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தவர் வேம்புலி. `கடைசியா ஒரு சண்ட வெச்சிக்கலாம். அதுல நான் தோத்துட்டா சார்பட்டா பரம்பரை இனி எந்த போட்டியிலேயும் கலந்துக்காது’ என்று சவால்விடுகிறார் வாத்தியார். அவரின் இரு ஃபேவரைட் மாணவர்களான ராமன், வெற்றியைத் தாண்டி கபிலன் இந்த சண்டைக்குள் எப்படி வந்தார், என்ன மாதிரியான பிரச்னைகள் எல்லாம் அரங்கேறுகிறது `சார்பட்டா பரம்பரை’யின் மீதிக் கதை.

WoW Moments 🤩

* படத்தின் சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் படத்திற்கு உயிரோட்டம் தரும் ஒன்று. சார்பட்டாவின் சாராம்சமே சண்டையும், குத்துச் சண்டையும்தான். அதனால் கதையின் ஆழத்தை உணர்ந்து படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுத்துள்ளனர் அன்பறிவ். இன்டர்வல் ப்ளாக் சண்டையின் போதும் சரி, க்ளைமாக்ஸ் சண்டையின் போதும் சரி… தரமான சம்பவங்களை செய்துள்ளனர்.

* படத்திற்கு மற்றொரு பலமாக அமைந்தவர் ஆர்யா. ஹீரோ என்பதால் இவருக்குத்தான் சண்டைக் காட்சிகள் அதிகம். அதற்கேற்ப முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டு சண்டைக் காட்சிகளில் நம்மை அசரடிக்கிறார். நிஜ கிக் பாக்ஸிங் வீரர் எப்படி சண்டையிடுவாரோ அதை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆர்யா ப்ரோ.

* படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். ஆர்யாவின் கதாபாத்திரம் தவிர மெயினான மூன்று கதாபாத்திரங்கள் கட்டாயம் நம் மனதில் நிற்கும். ஒன்று வாத்தியார் ரங்கனாக நடித்த பசுபதி. சார்பட்டா பரம்பரையின் தலைவராக மிடுக்காக நடித்திருக்கிறார். நெஞ்சை நிமிர்த்திய இவரின் உடல் மொழியோடு படம் முழுவதும் கவர்வார். அடுத்தது டான்ஸிங் ரோஸ் (ஷபீர்). படத்தில் இவர் சர்ப்ரைஸ் எலிமென்ட். நடனமாடிக் கொண்டே சண்டையிடும் இவரது ஸ்டைல், பார்ப்பவர்களை மிரள வைக்கிறது. ஓரிரு காட்சிகளாக இருந்தால் கூட நிறைய உழைப்பை கொட்டியிருக்கிறார். அடுத்தது டாடி. அதை ஏற்று நடித்தவர் ஜான் விஜய். தனித்தன்மை வாய்ந்த பல கேரக்டர்களில் சார்பட்டாவின் டாடியும் ஒன்று. ஆங்கிலோ இன்டியன் என்பதால் பீட்டர் கலந்து இவர் போடும் கவுன்டர்கள் லூட்டியோ லூட்டி. `மெட்ராஸ்’ பட ஜானி டைப் ஆஃப் கேரக்டர். இவர்வகளைத் தவிர நாயகி துஷரா விஜயன், கலையரசன், காளி வெங்கட், டைகர் தங்கதுரை, ஜான் கொக்கன், அனுபமா குமார், மாறன், சந்தோஷ் பிரதாப் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நேர்த்தியாக நடித்துள்ளனர்.

* சண்டை நடக்கும் அந்த ரிங்கை சுற்றி நாமும் பார்வையாளர்களோடு பார்வையாளர்களாக அந்த சண்டையை வேடிக்கை பார்ப்பது போல் அமைந்திருந்தது முரளியின் ஒளிப்பதிவு. படத்தின் ஆர்ட் ஒர்க் அந்த இடத்துக்கும், காலகட்டத்திற்கும் நம்மை அழைத்துச் செல்கிறது. மணிக்கூண்டு, குடிசை வீடு, கிக் பாக்ஸிங் மைதானத்தில்ஆரம்பித்து போஸ்டர், கட்சிக் கொடி, ரேடியோ என இன்ச் பை இன்ச் ஆர்ட் ஒர்க் மூலம் படத்திற்கு அழகையும் ஆழத்தையும் சேர்த்திருக்கிறார் கலை இயக்குநர் ராமலிங்கம்.

AWW Moments 😫

* படத்தின் முதல் பாதி தரத்தின் உச்சத்தில் இருந்தது. ஒரு இடம் கூட போர் அடிக்காமல் செம க்ரிப்பிங்காக ஸ்க்ரீன்ப்ளே அமைந்திருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் ஏனோ அது மிஸ்ஸாகிவிட்டது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கொண்ட படமாக இது இருக்கிறது. ஆனால், படத்தை இன்னுமே கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் அந்த துளி உறுத்தல் இல்லாமல் ஒரு டாப் நாச் படைப்பாக இருந்திருக்கும். தவிர, ஆர்யா ஒரு காட்சியில் பயிற்சி எடுப்பது போல் கம்பேக் போர்ஷன் இருக்கும். அதில் அவருடைய தொப்பை உடலோடு ஒட்டாமல் இருந்தது.

* வின்டேஜ் சந்தோஷ் நாராயணன் ஏனோ இந்தப் படத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங். எப்பவும் இவர் இசையமைத்த படங்களைப் பார்த்து முடித்தால் முடிந்த பிறகும் இவருடைய பிஜிஎம் மைண்டுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு மேஜிக் இந்தப் படத்தில் நடக்கவில்லை.

Verdict

பொதுவாக ஸ்போர்ட்ஸ் டிராமா படங்களின் கதையை கனித்துவிடுவது ஈஸி. சார்பட்டாவும் அப்படியான ஒரு கதைக்களத்தை கொண்டதுதான். ஆனால், அதை சூப்பரான ஒரு சுவாரஸ்யத்தோடும், நம்பகத்தன்மை நிறைந்த சண்டைக் காட்சிகளோடும் நமக்கு விருந்து வைத்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். மொத்த சார்பட்டா பரம்பரைக்கும் TNN பரம்பரையின் வாழ்த்துகள்!

Similar Movies to Watch

* Bhooloham

Rating

Direction

4/5

Casting

4/5

Music

3/5

Screenplay

3.5/5

Editing

4/5

Overall Rating

4/5