“ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கிய மூன்று பெண்களின் கதை!” – சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் பார்க்கலாமா வேண்டாமா?!

One Line

1980,1995,2007 ஆகிய மூன்று காலகட்டங்களில் குடும்ப உறவுக்குள் சிக்கி பெண்கள் கடந்து வந்த இன்னல்களை பேசியிருக்கிறது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.

Streaming Link

Story Line

அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதையை படமாக இயக்கியிருக்கிறார் வசந்த் சாய். 1980 காலகட்டத்தில் திருமணம் எனும் பந்தத்திற்குள் சிக்கி எதெற்கெடுத்தாலும் எரிந்து விழும் கணவர் சந்திரனை (கருணாகரன்) ஒரே ஒரு சூழ்நிலையின் போது எதிர்த்து என்னவென்று கேட்கிறார் சரஸ்வதி (காளீஸ்வரி சீனிவாசன்). அந்த ஒரு வார்த்தையை தாங்கிக்கொள்ள முடியாமல் சந்திரன் செய்யும் செயல். அதற்கு சரஸ்வதி என்ன செய்கிறார் என்பது முதல் கதை.

இரண்டாவது கதை தேவகியுடையது (பார்வதி திருவோத்து). அவருடைய 1995 காலகட்டத்து கணவராக மணி (சுந்தர் ராமு). தன்னுடைய ஆசைகளை டைரியில் எழுதும் பழக்கம் தேவகிக்கு இருக்கிறது. கூட்டு குடும்பத்தில் வாழும் தேவகியின் டைரி எழுதும் பழக்கத்தை கணவர் மணி உட்பட குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களும் ஏற்க மறுக்கிறார்கள். தேவகி எவ்வளவு தவிர்த்தும் டைரியின் முதல் இரு வரிகளை உறக்க படிக்கிறார் கணவர் மணி. இதை பொறுத்துக் கொள்ள முடியாத தேவகி செய்யும் ஒரு செயல்தான் அவருடைய கதை.

மூன்றாவது கதை சிவரஞ்சனியுடையது (லட்சுமி ப்ரியா சந்திரமௌலி). அவருடைய 2007 காலகட்டத்து கணவராக ஹரி (கார்த்திக் கிருஷ்ணா). கல்லூரியில் தடகள வீராங்கானையாக இருக்கும் சிவரஞ்சனி, கடைசியில் கல்யாணம் ஆகி தன்னுடைய குழந்தை விட்டுச் சென்ற லன்ச் பாக்ஸை கொடுக்க பஸ்ஸை துரத்தி வெறிகொண்டு ஓடுகிறார். இதுதான் சிவரஞ்சனியின் கதை.

WoW Moments 🤩

  • எந்த காலகட்டத்திலும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஒருபோதும் மாறப்போவதில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது படம். நடித்த ஒவ்வொருவரும் எந்தவித அலட்டலும் இல்லாமல் தங்களுடைய கதாபாத்திர தன்மையை உணர்ந்து எளிமையின் உச்சத்தில் நடித்திருக்கிறார்கள். ப்ரொஃபஷனல் நடிகர்கள் நடித்தது ஆச்சர்யத்தை கொடுக்கவில்லை. தேவகியின் கதையில் வரும் சின்ன பையன் ராமு கள்ளங்கபடம் இல்லாத இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார்.
  • டெக்னிக்கலாக இந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்று கதாபாத்திரங்களுக்கும் வைக்கப்பட்ட ஃப்ரேமில் ஆரம்பித்து லைட்டிங் வரை ஒவ்வொன்றுமே கதை சொல்கிறது. முதல் கதையில் சரஸ்வதி ஒரு இடத்தில் சுக்குநூறாக உடைந்து உட்காரும்போது அவரை silhouette-ல் காட்டிய விதம், தேவகி விடுதலை அடைந்த பின்னர் டீக்கடையில் சுதந்திரமாக டீ குடிக்கும் விதம், சிவரஞ்சனி வெறித்தனமாக ஓடும் இடம் என கேமராவும் லைட்டுகளுமே கதைகள் பேசியது. போக, மூவருக்கு ஒரு க்ளோஸப் ஷாட் கூட இல்லை. சொல்லப்போனால் அவர்களின் முகங்கள் கூட முக்கியமான கட்டத்தின்போதுதான் வெளிப்படுகிறது.
  • படத்தில் இசையும் கதையோடு ஒன்றி தனி டிராக்கில் பயணித்து வருகிறது. முக்கியமாக சரஸ்வதியின் வாழ்க்கையின் பிரதிபலிப்பில் ராஜாவின் இசை முக்கிய பங்காற்றியது. படத்தில் துளியும் பிரமாண்டம் இல்லை. இயக்குநர் வசந்த் சாய் தன்னுடைய டைரக்‌ஷனில் கூட இதை வெளிப்படுத்தியிருந்தார். ரயில்வே கேட்டில் நிற்கும் ஒரு காட்சியினை வெறும் சவுண்டையும் ஆட்களையும் வைத்தே அதை கடத்தியிருந்தார்.

AWW Moments 😫

  • சரஸ்வதி கதையில் தனது கணவர் உட்காரும் இருக்கையில் உட்காரும் போது வரும் விடுதலை, தேவகி சுதந்திரமாக தெருவில் நின்று டீ குடிக்கும் போது வெளிப்படும் விடுதலை என இரண்டும் ஒரு வகையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் சிவரஞ்சனி வெறி கொண்டு ஓடும்போது எந்த எமோஷனையும் நம்மால் உணர முடியவில்லை. அவருக்கான தீர்வு அவ்வளவுதானா என்ற கேள்வி எழுகிறது.
  • பொதுவாக எழுத்து வடிவில் இருக்கும் சிறுகதைகளை படைப்பாளிகள் படமாக்கும்போது அவர்களின் எண்ணங்களையும், மாற்றம் செய்ய நினைக்கும் விஷயங்களையும் கொண்டுதான் படம் எடுப்பார்கள். இப்படியான ஒரு முயற்சியை வசந்த் சாய் ஏன் எடுக்க மறுக்கிறார் என்பது தெரியவில்லை. சிறுகதையில் என்ன இருக்கிறதோ அப்படியே அதை எடுத்திருக்கிறார். எந்த ஒரு காலகட்டமாக இருந்தாலும் பெண்கள் ஆணாதிக்கத்தின் பிடியில்தான் சிக்கியிருக்கிறார்கள் என்பதை மீறி அதற்கான தீர்வை இந்த காலகட்டத்தை மனதில் வைத்து மாற்றி இயக்கியிருக்ககலாமோ என்கிற எண்ணம் தோன்றதான் செய்கிறது.

Verdict

வழக்கமான ஒரு வுமன் சென்ட்ரிக் படமாக இல்லாமல் எளிய மனிதிகளின் வாழ்க்கையை பேசியதற்காகவே சிவரஞ்சனியையும் இன்னும் சில பெண்களையும் பார்க்கலாம்.

Similar Movies to Watch

சில்லு கருப்பட்டி

பாவக் கதைகள்

Rating

Direction

4/5

Casting

3.5/5

Music

3.5/5

Screenplay

3/5

Editing

3.5/5

Overall Rating

3.5/5