திட்டம் ஓகே… ஆனா படம்?!… `திட்டம் இரண்டு’ பார்க்கலாமா, வேண்டாமா?

One Line

ஒரு சராசரி த்ரில்லர் படமாக ஆரம்பிக்கும் கதை `என்கிட்ட Plan B இருக்கு’ என்று க்ளைமாக்ஸில் ஒரு டிவிஸ்ட் கலந்த சோசியல் மெசேஜோடு முடிகிறது ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்த `திட்டம் இரண்டு’.

Streaming Link

Story Line

சென்னையின் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் ஆதிரா (ஐஷ்வர்யா ராஜேஷ்). பேருந்தில் இவரோடு பயணிக்கும் அர்ஜூன் (சுபாஷ் செல்வம்) என்பவர் மீது காதல் மலர்கிறது. அதன் பிறகு ஏதேச்சையாக அவ்வப்போது சந்திக்கும் இவர்களுக்குள் காதல் வலுக்கிறது. இப்படியாக ஒரு பக்கம் செல்ல, ஆதிராவின் நெருங்கிய தோழியான தீபா சூர்யா (அனன்யா ராம்பிரசாத்) காரில் எரிந்த நிலையில் விபத்துக்குள்ளாகி இறந்து போய் இருப்பது தெரிய வருகிறது. அது விபத்தா அல்லது கொலையா என்பதை விசாரிக்கும் ஆதிராவுக்கு க்ளைமாக்ஸில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று தெரிய வருகிறது. அது என்ன என்பதே `திட்டம் இரண்டு’.

WoW Moments 🤩

தமிழ் சினிமாவில் புது முயற்சி எதையாவது செய்துகொண்டே இருப்பேன் என்று தனது இரண்டாவது படமான `திட்டம் இரண்டு’ மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். இதற்கு முன் இவர் இயக்கிய `ஏண்டா தலையில எண்ண வெக்கல’ படத்தை  ஃபேன்டசி கலந்த காமெடியில் சொல்ல முயற்சி செய்தார். `திட்டம் இரண்டு’ படத்தில் ரொம்பவே சென்சிட்டிவான ஒரு விஷயத்தை எடுத்துப் பேசியிருக்கிறார் இவர். க்ளாப்ஸ் ப்ரோ!

சராசரியான ஒரு த்ரில்லர் படமாகத்தான் ஆரம்பிக்கிறது. இரவின் அடை மழையில் கத்தியுடன் அண்டர்டேக்கர் ரெயின்கோட் மாட்டி வரும் கொலைகாரன், விபத்துக்குள்ளாகி எரிந்து போன கார், உள்ளே எரிந்த சடலம், அது யாருடையது என்ற விசாரணை… இப்படி மற்ற மொழிகள் மட்டுமல்லாது தமிழ் சினிமாவிலே ஏகப்பட்ட படங்களைப் பார்த்திருப்போம். ஆனால், `அதெல்லாம் எதுவும் இல்லை கடைசியில ஒண்ணு வெச்சிருக்கேன்’ என்ற மோடில் கதை எழுதியிருக்கிறார் விக்னேஷ் கார்த்திக். ஆனால், அதுவே ஒரு கட்டத்தில் சோர்வையும் ஏற்படுத்துகிறது.

எப்பவும் போல் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்த ஐஷ்வர்யா ராஜேஷ், தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், இவர் தனியாக பர்ஃபார்ம் பண்ணும் காட்சிகளில் மட்டுமே கவனம் பெறுகிறார். அதேபோல் ஆரம்பித்தில் ஸ்லோ ஸ்பீடில் நடித்து வந்த சுபாஷ் செல்வம், படம் செல்ல செல்ல ஓகே என்று சொல்லும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தினார்.

AWW Moments 😫

ஐஷ்வர்யா ராஜேஷ் – சுபாஷ் செல்வம் ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் கூட பொருந்தவில்லை. இவர் கேட்கும் க்ளிஷே காதல் கேள்விகள், அதற்கு அவர் ஸ்வீட்டாக சமாளிக்கிறேன் என்று போடும் மொக்கை எல்லாம் ஆதி காலத்து காதல் சீன்ஸ். ஐஷ்வர்யா ராஜேஷின் தோழியாக நடித்த அனன்யா ராம்பிரசாத்தின் நடிப்பு ஆங்காங்கே ஓவர் ஆக்டிங்காக தெரிந்தது. படத்தில் இவரது கதாபாத்திரம்தான் சென்சிடிவானது. வசனங்கள் பெரிய தாக்கத்தை உண்டாக்க தவறியதால் இவரது நடிப்பும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

புதிய முயற்சி என்றாலும் அதை இன்னும் அடர்த்தியாக எடுத்திருக்கலாம் என்கிற எண்ணம் ஏற்படாமல் இல்லை. திருநங்கை, திருநம்பி, அவர்களுக்கு ஏற்படும் பாலுணர்வு, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் அவலம் என பல்வேறு விஷயங்களை பேசியிருக்க வேண்டிய படம், கதையின் போக்கை திசைதிருப்ப வெறும் சினிமாத்தன்மைக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டது போல் தெரிந்தது.

இந்தப் படத்தின் கதை ஒரு குறும்படத்திற்கான ஸ்க்ரிப்ட்தான். 30 நிமிட குறும்படமாக இதை நறுக் சுறுக் என்று எடுத்திருந்தால் பரவலாகப் பேசப்பட்டிருக்கும். இதுபோல் ஒரு முழு நீள படமாக எடுக்கும் பட்சத்தில் அதற்கான நியாயத்தை படத்தில் சேர்த்திருக்க வேண்டும். கடைசி 10 நிமிடங்கள் வேறு கதை, அதற்கு முன்பு வருவது வேறு கதை. இதற்கு இடையில் ஆணவக் கொலை பற்றி எல்லாம் வசனங்கள் இடம்பெற்றிருக்கும். அதற்கு எந்த ஒரு விளக்கமும் தெளிவும் இல்லாமல் வெறுமனே வசனமாக மட்டுமே படத்தில் இடம்பெற்றிருந்தது உறுத்தல்.

Verdict

கடைசி 10 நிமிடங்கள் தீட்டிய திட்டத்தை படம் முழுவதும் தீட்டியிருந்தால் `திட்டம் இரண்டு’ தவிர்க்க முடியாத தமிழ் சினிமாவாகியிருக்கும்!

Similar Movies to Watch

K-13
துருவங்கள் பதினாறு
இரவுக்கு ஆயிரம் கண்கள்

Rating

Direction

3/5

Casting

2.5/5

Music

2.5/5

Screenplay

2/5

Editing

2.5/5

Overall Rating

2.5/5