9-6 என்ற வழக்கமான ஐடி வாழ்க்கைக்கு சொந்தக்காரர் ப்ரகாஷ் (பிரதீப் ஆன்டனி). நண்பர்கள் ஒருவர் கூட இவருக்கு இல்லை. #Netflix #Chill #Beer என்றுதான் தன்னுடைய பொழுதைப் போக்குகிறார். இது தவிர டிக் டாக் செய்யும் டார்ச்சர் காதலியும் இருக்கிறார். ஒரு நாள் இவருடைய அம்மாவும் அப்பாவும் அமெரிக்காவுக்கு செல்ல, இங்கு இவருக்கு ஒரு சொந்தக்காரருடைய இறுதிச் சடங்குக்குப் போக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அங்கு தன்னுடைய தூரத்து உறவினர் யாத்ராம்மாவை (டிஜே பானு) சந்திக்கிறார். அதிலிருந்து தொடரும் பயணம், பல திடுக்கிடும் சம்பவங்களையும் டிவிஸ்ட்டுகளையும் அவிழ்க்கிறது. இவரைத் தவிர இன்டர்வலுக்கு பிறகு பொலிவியாவை சேர்ந்த திவா தவானுடனும் ஒரு பயணம் மேற்கொள்கிறார் பிரதீப். நடுவில் நிகழ்ந்த அந்த சம்பவம் என்ன, இந்த பயணத்தின் வாயிலாக இவருக்குக் கிடைத்த அனுபவம் என்ன என்பதை சொல்கிறது `வாழ்’.
WoW Moments 🤩
பிள்ளையார் சுழியை படத்தின் விஷுவலைப் பாராட்டுவதில் இருந்து ஆரம்பித்தால் சரியாக இருக்கும். இந்தப் படத்துக்காக 171 லொக்கேஷன்கள் சென்று ஷூட் செய்துள்ளது படக்குழு. இவர்களின் இந்த மெனக்கெடல், படத்தைப் பார்கும்போது நன்றாகவே தெரிகிறது. அதுவும் கடைசி 20 நிமிடங்கள் நம்மை வேறு உலகிற்கு அழைத்து செல்கிறது. ப்ரகாஷ், யாத்ராமா, யாத்ரா, ஏகுவேரா ஆகியோரோடு கைகோத்து நாமும் காடு, கரை, வயல், வரப்பு, மலை, செடி, கொடி, அருவிகளுக்கு சென்ற அனுபவத்தைக் கொடுக்கிறது படத்தின் விஷுவல். இதைப் படமாக்க நினைத்த இயக்குநர் அருண் பிரபு, ஒளிப்பதிவாளர் ஷெல்லி இவர்களோடு அதை செமத்தியாக எடிட் செய்த ரேமண்ட்க்கும் `வாழ்’த்துகள்!
படத்தில் மொத்தம் நான்கு கதாபாத்திரங்கள்தான் பிரதானமானதாகக் காட்டப்படுகிறது. ஹீரோ பிரதீப், ஹீரோயின்கள் டிஜே பானு, திவா தவான் மற்றும் குட்டீஸ் ஆரவ். விஷுவல் ஒரு பக்கம் நம்மை மெய் சிலிர்க்க வைத்ததுபோல் இன்னொரு பக்கம் இவர்களும் தங்களுடைய நடிப்பின் மூலம் கவர்கிறார்கள். புதுமுகம் என்கிற உறுத்தலே இல்லாமல் நால்வரும் இயல்பாக நடித்திருந்தார்கள்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் பிரதீப்தான் படத்தின் இன்னொரு ஹீரோ. படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்பே இதற்கான பின்னணி இசையை முடித்துவிட்டார் அவர். தனது இசையின் வாயிலாக சொல்ல நினைப்பதை விஷுவல் பிசிறே இல்லாமல் செய்து முடிக்கிறது. படத்தின் ஒவ்வொரு பாடலையும் படம் பார்த்த பிறகு நீங்கள் கட்டாயம் கேட்பீர்கள். பிரதீப் Musician இல்லை, Magician!
படத்தின் வசனங்களும் இலகுவாக அமைந்திருந்தது. `நம்ம பயணத்தில நம்ம சந்திக்கிற ஒவ்வொரு மனுஷங்களுமே நம்ம வாழ்க்கையை மாத்துற சக்தி படைச்சவங்கதான்’, `வருஷத்துல ஒரு 30 நாளாவது தனியா பயணம் பண்ணனும்’, `நாளைக்கு… நாளைக்கு’ போன்ற வசனங்கள் நம்மை நாம் என அடையாளம் காண வைக்க முயற்சி செய்கிறது, சில விஷயங்களை யோசிக்க வைக்கிறது. என்ன செய்வது, படம் பார்த்து முடித்த கையோடு அதற்கு ரிவ்யூ செய்யும் சூழலில்தான் இங்கு பல பேர் இருக்கிறோம். சர்வைவ் பண்ணணுமே பாஸ்!
AWW Moments 😫
படத்தில் பிரச்னைகளும் இருக்கிறதுதான். சீரியஸான சில இடங்களை `ஜஸ்ட் லைக் தட்’ என டீல் செய்தது உறுத்தலாகவே இருந்தது. கதைக்கு பெரிய மெனக்கெடலை போடாமல் முழுக்க ஒரு பயண அனுபவமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஆரம்பத்தில் பிரதீப்பின் காதலி என வருபவரின் பர்ஃபாமன்ஸ் காமெடியாக வைக்க நினைத்திருந்தாலும் தேவையில்லாத எரிச்சலைத்தான் அந்த கதாபாத்திரம் கொடுத்தது.
போலீஸ் தூங்குகிறதா, எரிந்த காரில் இருந்த பேகிற்கு எதுவும் ஆகாமல் இருப்பது என ஆங்காங்கே லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கிறதுதான்.
Verdict
கதை, திரைக்கதை, லாஜிக் மீறல் என சினிமாவிற்கு தேவைப்படும் விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு பேரனுபவத்திற்காகவே `வாழ்’லலாம்!
0 Comments