அரசியலுக்குள் நுழைந்து தனக்கு மேல் இருக்கும் அரசியல்வாதிகளை காலி செய்துவிட்டு அந்த மேஜையில் உட்கார நினைக்கும் ஒரு சாமானியனின் கதைதான் துக்ளக் தர்பார் படத்தின் ஒன்லைன்.
அரசியல்வாதி ராயப்பன் (பார்த்திபன்) சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கும் இடத்தில் பிறந்தவர் சிங்காரவேலன் என்கிற சிங்கம் (விஜய் சேதுபதி). அதற்குப் பின் சில ஆண்டுகளிலேயே தனது தந்தையையும் தாயையும் இழந்து தங்கை மணிமேகலையுடன் (மஞ்சிமா மோகன்) வாழ்கிறார். இடையில் நடந்த ஒரு சண்டையில் 15 வருடங்கள் தனது தங்கையுடன் பேசாமல் இருக்கிறார். சின்ன வயதில் இருந்து தான் பார்த்து ரசித்து வரும் ராயப்பனைப்போல் ஒரு அரசியல்வாதியாக வேண்டும் என்பதுதான் சிங்கத்தின் கனவு. அதற்கான சந்தர்ப்பத்தை சூசகமாக அவரே ஏற்படுத்திக்கொண்டு அவர் வாழ்ந்த பகுதியின் கவுன்சிலரும் ஆகிறார். இதற்கிடையில் இவருக்கு தலையில் அடிபட்டதால் இன்னொருவராக மாறும் வியாதி இவரைத் தொற்றிக்கொள்கிறது. அதாவது ஒரு சிங்கம் நல்லவர் இன்னொரு சிங்கம் ஏற்கெனவே இருந்தவர். இவருக்கு வில்லன் இவரே என்கிற நிலை ஏற்படுகிறது. அதன் உச்சகட்டமாக ஒரு புராஜெக்டில் ராயப்பன் அவர் பெற்ற 50 கோடி ரூபாயை கெட்ட சிங்கத்திடம் கொடுக்கிறார். இது தெரிந்த நல்ல சிங்கம் கெட்ட சிங்கத்திற்கு தெரியாமல் அதை ஒளித்து வைத்துக் கண்ணாமூச்சி ஆடுகிறார். இதை நம்பாத ராயப்பன் சிங்கத்தை கொல்ல ஆள் அனுப்புகிறார். அதில் இருந்து இரு சிங்கங்களும் என்ன செய்கிறார்கள் என்பதே மீதிக் கதை.
WoW Moments 🤩
* அமைதிப்படை அமாவாசையில் தொடங்கி என்.ஜி.கே நந்தகோபாலன் குமரன் வரை தமிழ் சினிமா பார்த்துவிட்டது. இதில் தனித்துத் தெரிவதற்காக அந்த ஸ்ப்லிட் பர்சனாலிட்டி கான்செப்டைக் கொண்டு வந்திருக்கிறார்கள் அது முக்கால்வாசி ஒர்க்அவுட்டும் ஆகியிருக்கிறது.
* வசனங்கள் சில இடங்களில் அதிக கவனம் பெறுகிறது. பொதுப்படையாக இதுதான் விஷயம் என ஷார்ப்பாய் சில டயலாக்குகள் இடபெற்றிருந்தது. கருணாகரனின் கேரக்டர் படத்தில் சர்ப்ரைஸாக இருந்தது.
* விஜய் சேதுபதி இரு சிங்கமாகவும் தனது நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார். பல இடங்களில் பார்த்து பழகிய நடிப்பை வெளிப்படுத்தினாலும், இன்டர்வல் ப்ளாக் மாதிரியான சில காட்சிகளில் நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கிறார்.
AWW Moments 😫
* வாவ் என்று சொல்லும் அளவிற்கு பெரிதாக எந்த ஒரு விஷயமுமோ மேஜிக்கையோ படம் க்ரியேட் செய்யவில்லை. இதுவரை பார்த்து பழகிய அரசியல் படங்கள், அதில் ஹீரோ மேல்தட்டில் உட்கார்ந்திருக்கும் அதிகார அரசியல்வாதியை கவிழ்க்க செய்யும் செயல்கள் என அமைதிப்படையில் இடம்பெற்ற அதே டாம் அண்ட் ஜெர்ரி அரசியல் வகையறாதான் துக்ளக் தர்பார் படத்திலும் இடம்பெற்றிருந்தது.
* மஞ்சிமா மோகனின் வசன பேப்பர் 3 வரிகளைத் தாண்டியிருக்காது. இறுக்கமான முகத்தோடு அவ்வப்போது சில வசனங்களை பேசியிருக்கிறார், அழுதிருக்கிறார், சிரித்திருக்கிறார். அவ்வளவுதான். ராஷி கண்ணா ஸ்க்ரீனில் வந்து போகும் நேரம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே.
* நானும் ரவுடிதான் படத்தில் விஜய்சேதுபதி – பார்த்திபன் காம்போவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி இந்தப் படத்தில் கொஞ்சமும் எடுபடவில்லை. அதில் இருந்த பார்த்திபன் இந்தப் படத்தின் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போயிருக்கிறார். நானும் ரவுடிதான் படத்தை நினைத்தாலே குறைந்தது அவரது 5 வசனங்களையாவது சொல்லிவிடலாம். அந்தளவிற்கு ரெஜிஸ்டரானது அவரின் கேரக்டர். துக்ளக் தர்பார் அப்படியான ஒரு மேஜிக்கை ஏற்படுத்தத் தவறிவிட்டது.
* இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் மொத்த படத்தையும் மேலோட்டமாக அணுகியிருக்கிறார். எந்த ஒரு தெளிவும் இல்லாமல் நுணுக்கம் இல்லாமல் மிகவும் ஃப்ளாட்டாக எடுத்திருக்கிறார். இதனால்தான் பார்க்கும் நமக்கு திரைக்கதையோடு ஒன்ற முடியவில்லை. காமெடி டிராக்கை எடுத்திருந்தால் முழுக்க அதில் பயணித்திருக்க வேண்டும். பாதி காமெடி பாதி சீரியஸ் என்றால் அதற்கான முயற்சியை திரைக்கதையிலும், வசனங்களிலும் கடத்தியிருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாமல் சுமாரான ஒரு ஃபார்மட்டை ஃபிக்ஸ் செய்து படத்தை டீல் செய்திருக்கிறார்.
Verdict
தெளிவான பார்வையோடு காமெடியாகவே முழு படத்தையும் அணுகியிருந்தால் நானும் ரவுடிதான் படத்தைப் போல் ஒரு டிரேட் மார்க்கை உருவாக்கியிருக்கும்.
0 Comments