* படத்தின் மிகப்பெரிய பலமாக தங்கராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி இருக்கிறார். உருவத்தில் வயது முதிர்ச்சியைக் காட்டியவர், உடல்மொழியிலும் அதைக் கடத்தியிருப்பது; ஒரு அப்பாவி இளைஞன் பாதிக்கப்பட தானும் ஒரு காரணமாக இருப்பதால், அந்தக் குற்றஉணர்வு தனது பணி ஓய்வுக்குப் பிறகும் துரத்தும் என அவர் எடுக்கும் முயற்சிகள் என வழக்கமான தனது பாணியில் இருந்து வெளியே வந்து ஒரு எதார்த்த நாயகனாக சமுத்திரக்கனி அசத்தியிருக்கிறார்.
* சமுத்திரக்கனியைத் தவிர முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்களான ஹரி கிருஷ்ணன் (தேவகுமார்), சுப்ரமணிய சிவா (தேவகுமாரின் அண்ணன் சேவியர்), ஜி.எம்.சுந்தர் (வக்கீல் மருதமுத்து), `மேற்குத்தொடர்ச்சிமலை’ ஆண்டனி, வில்லனாக நடித்த கவின் ஜே பாபு என பலரும் தங்களது கதாபாத்திரம் படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அதிலும், குறிப்பாக அப்பாவி இளைஞன் தேவகுமார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிகிருஷ்ணன், அதிகம் கவனம் பெறுகிறார்.
* இயக்குநர் ஃபிராங்ளின் ஜேக்கப், தனது முதல் படத்திலேயே பல முக்கியமான விஷயங்களைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். காவல்துறையில் இருக்கும் உயர் அதிகாரிகள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால், அடுத்த நிலை காவலர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், இளம் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம், காவல்துறையில் இருக்கும் உயர் அதிகாரிகள் மட்டும் சங்கம் வைத்துக்கொண்டு கடைநிலை காவலர்களுக்கு அந்த உரிமையை கொடுக்காதது, காவல்துறைக்குள் இருக்கும் சாதி பிரச்னைகள் என பல விஷயங்களை மக்களுக்குக் காட்டியிருக்கிறார். `சாணி அள்ளுவது தப்பில்லை; ஆனால், நான் அதைத்தான் பண்ணணும்னு நீ சொல்றதுதான் தப்பு’, `எங்களுக்கு விருது கொடுக்க வேண்டாம்; மனுஷனா மதிச்சாலே போதும்’, ‘போலீஸ்ல அதிகாரத்தில் இல்லாத எல்லாருமே அடியாள்தான்’ என பல இடங்களில் வசனங்களாலும் ஸ்கோர் செய்கிறார்.
* தங்கராஜ் தன்னைவிட வயது குறைந்த உயர் அதிகாரியிடம் அடி வாங்கும் காட்சி, போலீஸ் பிடியில் இருந்து தேவகுமார் தப்பிக்க முயற்சி செய்யும் காட்சி, வக்கீல் மருதமுத்து ஸ்டேஷனில் கோபப்படும் காட்சி என படத்தின் பல முக்கியமான காட்சிகளை சிங்கிள் டேக்கில் எடுத்திருக்கிறார்கள். இது அந்தந்தக் காட்சிகளின் சூழலைப் பார்வையாளர்களுக்கு எளிதாகக் கடத்துகிறது. ஒளிப்பதிவு செய்த பிரதீப் காளிராஜா மற்றும் விறுவிறுப்பாக காட்சியை வெட்டி, வெட்டி காட்டாமல் அதை அப்படியே படத்தில் வைத்த எடிட்டர் மணிகண்டன் சிவகுமாருக்கு வாழ்த்துகள்.
* பல பிரச்னைகளைப் பற்றி பேசும் ராவான கதைதான் என்றாலும் ஒரு படமாக இதை மாற்ற ஸ்கிரிப்ட்டில் அதிகமாகவே வேலை செய்திருக்கிறார்கள். சீரியஸான சீன்களில் ‘மேற்குத்தொடர்ச்சிமலை’ ஆண்டனி அடிக்கும் காமெடி கவுன்ட்டர்கள், கதைக்கு உறுதுணையாக பல கதாபாத்திரங்கள் என ஒரு ஸ்கிரிப்ட்டாக அழகாக மாற்றியிருக்கிறார்கள் இயக்குநர் ஃபிராங்ளின் ஜேக்கப் மற்றும் எழுத்தாளர் சந்தோஷ் நாராயணன்.
0 Comments