வாழ்ந்த கொஞ்ச வருஷத்துலயே இன்னும் நூறு வருஷத்துக்குப் பாடல்களைப் பாடியிருக்கார் சாகுல் ஹமீது. இந்தப் பாடல்கள் எல்லாம் இவர் பாடினதுன்னே தெரியாம 2K kids வைப் பண்ணிகிட்டிருக்காங்க. ஷாகுல் ஹமீத் பற்றியும் அந்தப் பாடல்கள் பற்றியும் பார்ப்போம்.
சில நாள்களுக்கு முன்பு “சரிகமப..” நிகழ்ச்சியில் ஜீவன் என்ற ஓர் இளைஞர் வந்து பாடத் தயாராகி நிற்கிறார். அவர் பாடத் தொடங்கியதுமே ஒரு நொடி “சாகுல் ஹமீது” கண் முன்னால் வந்து போனார். அடுத்த நொடி சாகுல் ஹமீது குரலை இன்னொருவரால் கொண்டு வந்துவிட முடியுமா என்ற சந்தேகம் மின்னலாக வெட்டியது. கடந்த 20 ஆண்டுகளாகவே யாராலும் திரும்ப கொண்டு வர முடியாத ஒரு குரலுக்குச் சொந்தக்காரர் சாகுல் ஹமீது.
ஆனால், அந்த மேடையில் ஓர் அதிசயம் நடந்தது. ஜீவன் அந்தப் பாடலுக்கு உயிரூட்டினார். சில நிமிடங்கள் அங்கு மேடையில் இருந்தவர்களும் சரி, தொலைக்காட்சியில் பார்த்தவர்களும் சரி. உறைந்து போய் இருந்தார்கள். பாடகர் கார்த்திக், நெஞ்சம் நெகிழப் பேசினார். ரஹ்மான் சார், ஷாகுல் ஹமீது குரலைத் தேடிக்கொண்டிருந்தால், இதோ கிடைத்துவிட்டது அந்தக் குரல் என்றார். சாகுல் ஹமீது குடும்பத்தினர் கையாண்டுவரும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜீவனைப் பாராட்டி இருந்தாலும் சாகுலின் குரலை இன்னொரு குரல் பதிலீடு செய்யாது என்று பதிவிட்டார்கள். எத்தனை ஜீவன்கள் வந்தாலும் சாகுல் குரலின் ஜீவனைக் கொண்டு வர முடியாது என சொல்லுமளவுக்கு சாகுலின் குரலில் அப்படி என்ன ஸ்பெஷல்?
சாகுல் பாடிய ஒரு பாடலை பாடியது அவர் தான் என தெரியாமலே இன்றைய இளசுகள் வேறு வெர்ஷனில் ஒரு பாடலைக் பாடிக் கொண்டு திரிகிறார்கள். “எல்லாத்துக்கும் அந்தப் பரணி பய தான் காரணம்” என்பதைப் போல அந்த டிவி பிரபலம் பண்ண வேலைதான் அது. அது என்ன பாட்டுன்னு இப்பவே கண்டுபிடிச்சீங்கன்னா கமெண்ட்ல சொல்லுங்க. கண்டுபிடிக்கலைன்னா கடைசியில் பாக்கலாம்.
ரஹ்மான் இதுவரைக்கும் எங்கேயும் சொல்லியிருக்காரான்னு தெரியலை. சாகுல் ஹமீத் குரல் மேலயும் ஸ்வர்ணலதா குரல் மேலயும் அவருக்கு ஒரு தனிப்பிரியமும் அந்தக் குரல்களை வைத்து எக்ஸ்பிரிமெண்ட் செய்து பார்க்கலாம்னு அவர் யோசிச்சிருக்கலாம். அப்படி அவர் செய்த சோதனைதான் “திருடா திருடா” படத்தில் மேல சொன்ன ராசாத்தி பாடல். உன் குரல் மட்டும் போதும், வேற எதுவும் பெருசா இசைக்கருவிகள் வேண்டாம்னு ரொம்ப மினிமலா, ஒரு அக்காபெல்லா இசைவடிவத்தில் ரஹ்மான் உருவாக்கிய மேஜிக்குக்கு மேலும் ஆச்சர்யத்தைக் கூட்டினார் சாகுல். `ராசாத்தி’ என அவர் ஆரம்பித்து “என் உசுரு என்னுதில்லே…” அவர் முடிக்கும் போது அட ஆமாம்யா… உன் குரலு கொன்னு எடுத்திருச்சுன்னு தான் இருக்கும். அந்தப் பாடலில் வரும் “நான் தந்த மல்லிகையை நட்டாத்தில் போட்டுபுட்டு அழுதபடி அரளிப்பூச் சூடி அழுதபடி போறவளே…” வரிகளுக்கு அப்போதே கண்ணீர் கசிய விட்டவர்கள் ஏராளம். சென்னையிலிருந்து அவருடைய சொந்த ஊருக்கு காரில் போகும் போது ஒரு விபத்தில் அவர் இறந்தபிறகு ஒவ்வொரு முறையும் இந்தப் பாடலைக் கேட்கும் போது இந்த வரிகளில் கொஞ்சம் அதிகமாகவே கண்ணீர் கசியும். “என் உசுரு என்னதில்ல…” வரிகளைக் கேட்கும் போது “யோவ்… உன் குரல் கூட உண்ணுதுல்ல… அது எங்களோடது…” அப்படித்தான்னு தோணும். ஷாகுலின் அகால மரணம் ரஹ்மானை வெகுவாகவே பாதித்திருக்கிறது.
ரஹ்மானின் முதல் படமான ரோஜாவில் சாகுலின் குரல் இடம்பெற வைக்க முடியாமல் போனவருத்தம் ரஹ்மானுக்கு உண்டு. ஜெண்டில்மேன், கிழக்குச் சீமையிலே, உழவன் என அவரின் அடுத்தடுத்த படங்களில் சாகுல் ஹமீது வரிசையாக தன் வித்தையைக் காட்டிக்கொண்டு இருந்தார்.
ரோஜாவின் ஆல்பம் வெளிவந்த போது, ரஹ்மானின் இசையில் இருந்த ஒலியின் தரம் அப்போது புதிதாக இருந்தது. ஜென்டில் மேன் படத்தின் கேசட் வெளியாகி முதல் முறை கேட்கும் போது, 40 நொடிகள் கழித்து “
உசிலம்பட்டி பெண் குட்டி முத்துப்பேச்சி…” என சாகுல் ஹமீது ஆரம்பித்து சில நிமிடங்கள் தமிழ் சினிமாவில் தன் குரலின் வருகையைப் பதிவு செய்தார். “உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு” என அவர் அடுத்த வரியைப் பாடி முடிக்கும் போதே “உன் குரலைக் கேட்டு என் புத்தி பேதலிச்சிருச்சு…” என யோசிக்கும்படியான ஒரு குரல் அவருடையது. இத்தனைக்கும் அந்தப் பாடலில் அவருடன் கூட சேர்ந்து பாடியது, இன்னொரு இசைப் பிசாசு ஸ்வர்ணலதா… ஒரு பக்கம் ரஹ்மான், இன்னொரு பக்கம் ஸ்வர்ணலதா, இரண்டு பேரையும் தூக்கிச்சாப்பிட்டார் சாகுல்.
உசிலம்பட்டி பெண் குட்டி மாதிரி துள்ளலான பாடலையும் பாடுவார், ராசாத்தி என நம்மை உருக வைப்பார். மாரி மழை பெய்யாதோ என கிராமத்துக்கே நம்மைக் கூட்டிப்போவார். செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே என அட்வைஸ் மழை பொழிய ஒரு பக்கம் பாடினால், ஈச்சம்பழம் என காமெடி பண்ணி ஒரு பாடலைப் பாடுவார். ஒரு பக்கம் ஸ்வர்ணலதா, இன்னொரு பக்கம் மனோரமா என கோலோச்சும் பாட்டில் மூன்றாவதாக சாகுல் மெட்ராஸை சுத்திப் பாக்கப்போறேன் என வேற ஒரு ரவுண்ட் அடிப்பார்.
முழுப் பாடல்களையும் பாடி அவர் திறமையைக் காமிச்சதெல்லாம் ஒரு பக்கம்னா, வெறும் நாலே நாலு வரிகள் மட்டுமே பாடி அசத்தினதெல்லாம் உண்டு. காதலன் படத்தில் “ஊர்வசி ஊர்வசி” பாடலில் “பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம் / நீயடி கதியே கதியே ரெண்டு சொல்லடி குறைந்தபட்சம்” என ரெண்டு வரிகளைப் பாடுவார். கொஞ்சம் கேப் விட்டு சில வரிகள் தாண்டி இன்னும் ரெண்டு வரி பாடுவார். ரஹ்மானும் சுரேஷ் பீட்டர்ஸும் அந்தப் பாட்டில் ஒரு ரகளையைக் கூட்டினா வெறும் நாலே வரிகளில் சாகுல் ஹமீது காட்டியது வேற லெவல் மேஜிக். நேருக்கு நேர் படத்தில் “அவள் வருவாளா” என ஹரிஹரன் பாடும் போது ‘அவள் வருவாளே..!’ என ஷாகுல் பாடும் போது “யோவ் மிலிட்டரி நீ எங்க இங்கே…?” என்று இருக்கும்.
Also Read – `சூப்பர் ஸ்டார்’ பட்டம் `வேல்யூ’ என்ன? அந்த இடம் அடுத்து யாருக்கு?
மேடைக்கச்சேரிகளிலும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய இசைத்தென்றல் நிகழ்ச்சியிலும் பல பாடல்களைப் பாடி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார் ஷாகுல். அப்படியான ஒரு மேடைக் கச்சேரியில் தான் ரஹ்மானும் ஷாகுலும் சந்திக்க இசை அவர்களை நெருங்க வைக்குது. அந்த நெருக்கம். ரஹ்மான் விளம்பரங்களுக்கு ஜிங்கிள்ஸ் வாசித்த காலம் முதல் சினிமாவில் கோலோச்சிய காலம் வரைக்குமே தொடர்ந்தது. ஷாகுலின் மரணம் அவரை மறக்க விடாமல் அவர் குரலே ஞாபகப்படுத்திகிட்டிருக்கு. ரோஜாவுக்கு முன்னாடியே ரஹ்மான் வெளியிட்ட “தீன் இசைமாலை” என்ற ஆல்பத்தில் ஷாகுல் “எல்லாப் புகழும் இறைவனுக்கே…” என்ற பாடலையும் மேலும் சில பாடல்களையும் பாடி இருப்பார்.
ரஹ்மானோட நண்பர்ன்றதுனால, வெறும் ரஹ்மான் படங்களில் மட்டுமே அவர் குரலைக் கேட்க முடியும்னு இல்லை, சௌந்தர்யன், தேவா, சிற்பி, வித்யாசாகர்னு அவர் வாழ்ந்த குறைவான காலங்களில் மனதுக்கு நெருக்கமான பல பாடல்களைப் பாடி இருக்கார்.
சிந்து நதிப்பூ எனும் படத்தில் சௌந்தர்யன் இசையமைக்க, ஷாகுல் ஹமீத் “ஆத்தாடி என்ன உடம்பு” என்ற பாடலைப் பாடியிருப்பார். KPY ராமர் அந்தப் பாடலை கொஞ்சம் காமிக்கலாக அவர் பாட அது வைரலானது. ஷாகுல் ஹமீது அந்தப் பாடலைப் பாடும் போது வெறும் நான்கே வயதான ‘ஹிப் ஹாப் ஆதி’ன்னா (அப்போ அந்தப் பாட்டை அண்ணன் கேட்டிருப்பாரான்னே தெரியலை. இந்த ராமர் பண்ண வேலைல…) வளர்ந்து 25 வருடங்கள் கழித்து அந்தப் பாடலின் ரீமிக்ஸை உருவாக்கினார்.
விண்டேஜ் ரஹ்மானின் மாஸ்டர்பீஸ்களில் பல பாடல்களைப் பாடிய ஷாகுல் ஹமீதின் பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை கமெண்ட்டில் குறிப்பிடுங்கள்.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Adrese gelen istanbul istanbul hurdacı firması olarak hizmet veriyoruz fatih hurdacı https://bit.ly/fatih-hurdaci-telefonu