உக்ரைனில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்ட 24 வயது பெண் விமானி – மஹாஸ்வேதாவைத் தெரியுமா?

போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் எல்லைகளில் இருந்து இந்திய மாணவர்கள் 800-க்கும் மேற்பட்டோரை மீட்ட குழுவில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார் கொல்கத்தாவைச் சேர்ந்த 24 வயது பெண் விமானி மஹாஸ்வேதா சக்ரபோர்த்தி… யார் அவர்…

Operation Ganga

இந்திய மாணவர்கள்
இந்திய மாணவர்கள்

உக்ரைனில் புகுந்து ரஷ்ய ராணுவம் கடந்த பிப்ரவரியில் தாக்கத் தொடங்கியது. அந்த நேரத்தில் உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். இந்த நேரத்தில் உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் படித்துக் கொண்டிருந்த தமிழகம் உள்பட இந்திய மாணவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். உணவு, சரியான இருப்பிட வசதியின்றி பதுங்கு குழிகளுக்குள் நாட்களைக் கடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சூழலில், உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை மீட்க `Operation Ganga’ என்கிற பெயரில் மத்திய அரசு நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. இந்திய விமானப் படை விமானங்கள் உக்ரைனை ஒட்டிய போலந்து, ஹங்கேரி எல்லைகள் வழியாக இந்திய மாணவர்களை பத்திரமாக தாயகம் கொண்டு வந்து சேர்த்தன. ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் போன்ற நிறுவனங்களின் விமானங்கள், விமானப் படை விமானங்கள் என 77 விமானங்களில் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

மஹாஸ்வேதா சக்ரபோர்த்தி
மஹாஸ்வேதா சக்ரபோர்த்தி

மஹாஸ்வேதா சக்ரபோர்த்தி

இந்திய மாணவர்களை மீட்கும் இந்தப் பணியில் ஈடுபட்ட விமானிகளில் கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த 24 வயது விமானி மஹாஸ்வேதா சக்ரபோர்த்தியும் ஒருவர். The Indira Gandhi national flying academy-யின் படிப்பை முடிந்த மாஹாஸ்வேதா, பிப்ரவரி 27 – மார்ச் 7 இடைப்பட்ட நாட்களில் 6 டிரிப்களில் சுமார் 800-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களைப் பத்திரமாக தாயகம் அழைத்து வந்திருக்கிறார். இதில், நான்கு முறை போலந்து எல்லையில் இருந்தும் இரண்டு முறை ஹங்கேரி எல்லையிலிருந்தும் மாணவர்களை அழைத்து வந்திருக்கிறார்.

தனது அனுபவம் குறித்து பேசிய மஹாஸ்வேதா, “ஒருநாள் எனது நிறுவனத்தில் இருந்து இரவு நீண்ட நேரம் கழித்து அழைப்பு வந்தது. மாணவர்களை மீட்கும் பயணத்துக்கு நான் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் சொன்னார்கள். அவர்கள் சொன்ன இரண்டு மணி நேரத்தில் நான் தயாராகிவிட்டேன். முதலில் நாங்கள் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சென்றோம். அங்கிருந்து போலந்துக்கு இரண்டரை மணி நேரம் மட்டுமே பயண தூரம். அங்கிருந்து மாணவர்களை மீட்கும் விமானங்களை இயக்கினோம்’’ என்றார்.

மஹாஸ்வேதா சக்ரபோர்த்தி
மஹாஸ்வேதா சக்ரபோர்த்தி

ஏர்பஸ் ஏ-320 விமானத்தை இயக்கிய மஹாஸ்வேதா, ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 13 முதல் 14 மணி நேரம் வரை விமானத்தை ஓட்டியிருக்கிறார். மாணவர்களின் நிலை குறித்து பேசிய அவர், `நம்முடைய மாணவர்கள் பெரும்பாலானோர் சோர்வான நிலையிலேயே காணப்பட்டனர். அவர்களுக்கு உணவும் தண்ணீரும் நாங்கள் கொடுத்தோம். அதில், பலர் தண்ணீர் அருந்துவதில் கூட ஆர்வம் காட்டவில்லை. ஒருமுறை ஹங்கேரியில் இருந்து பயணத்தைத் தொடங்கும் முன்னர், ஒரு மாணவி கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார். திடீரென அவர் சுய நினைவை இழந்துவிட்டார். நாங்கள் அப்போது டேக்-ஆஃப் கூட செய்யவில்லை. நல்லவேளையாக அப்போது விமானத்தில் ஜூனியர் டாக்டர்கள் பலர் இருந்ததால், அவருக்கு சிகிச்சை அளிக்க முடிந்தது. சிகிச்சை அளித்த பின்னர், அங்கிருந்து கிளம்பினோம். அந்த மாணவியின் நிலை என்னைப் புரட்டிப் போட்டுவிட்டது. நம்முடைய மாணவர்களை மீட்கும் பயணத்தில் என்னாலான சிறு உதவி செய்தது மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. இது எனது வாழ்நாளுக்குமான அனுபவத்தை அளித்திருக்கிறது’’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Also Read – தேசிய ஆடை முதல் Tunnel of Love வரை… உக்ரைன் பத்தி இந்த 5 விஷயங்கள் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top