ரேஷன் கடைகள் மூலம் 5 கிலோ எடைகொண்ட சிறிய வகை சிலிண்டர்களை விற்பனை செய்யும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர்
வீட்டு உபயோகம், கடைகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களோடு சில தனியார் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் உயர்ந்து வருகிறது. 900 ரூபாயைக் கடந்து விற்கும் சிலிண்டர் விலை, ஜூலை மாதத்துக்குப் பிறகு மட்டும் ரூ.90 உயர்ந்திருக்கிறது. சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
ரேஷன் கடைகள்
இந்தநிலையில், நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் 14 கிலோவுக்கும் குறைவான சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தலைமையில் மாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் 5 கிலோ எடைகொண்ட சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாடு முழுவதுமுள்ள ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த முடிவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 5.32 லட்சம் ரேஷன் கடைகள் மூலம் சுமார் 80 கோடி பயனாளர்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் சிறிய வகை சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும்போது எளிதாக மக்களை சென்றடைய முடியும் என்று கருதப்படுகிறது. அதேபோல், மத்திய அரசின் முத்ரா கடன் வழங்கும் திட்டம் மூலம் பயனாளிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் கடன் வழங்க மாநில அரசுகள் முன்வந்தால், உரிய உதவிகள் செய்யப்படும் என்றும் மத்திய அரசின் பொதுவிநியோகத் துறை தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.