சீன உளவுக் கப்பலான yuan wang 5 கப்பலை இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசு, அம்பந்தோட்டா துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி அளித்திருக்கிறது. சீன ராணுவத்தின் உளவு வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் yuan wang 5 கப்பல் பற்றிய 5 தகவல்களைத்தான் நாம் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப்போறோம்.
yuan wang 5 கப்பல் – 6 தகவல்கள்!
இலங்கையின் தெற்குப் பகுதியில் இருக்கும் அம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் yuan wang 5 கப்பலை ஆய்வுக் கப்பல் என்கிறது சீனா. ஆனால், இது உளவுக் கப்பல் என்று குற்றம்சாட்டுவதோடு, தேசியப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என்கிறது இந்தியா. உண்மையில், இரண்டுமே உண்மைதான் என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள். ஆய்வுக் கப்பல் என்கிற பெயரில் கடற்பரப்பில் வலம்வரும் yuan wang 5 கப்பலைக் கொண்டு மற்ற நாடுகளை உளவும் பார்க்க முடியும் என்பதுதான் உண்மை.
- சீனாவின் ஜியாங்னான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சீன கடற்படையில் இணைந்தது. இது, சுமார் 222 மீட்டர் நீளமும், 25.2 மீட்டர் அகலமும் கொண்டது.
- சக்திவாய்ந்த அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்தக் கப்பல் மூலம் புவி முதல் விண்வெளி வரை 750 கிலோமீட்டர் சுற்றளவில் நடக்கும் தகவல்களை சேகரிக்கும் திறன் வாய்ந்தது. விண்வெளி, செயற்கைக் கோள்களைக் கண்காணிக்கும் வகையில் அதிநவீன கண்காணிப்பு தொழில்நுட்பங்களையும் கொண்டது.
- யுவான் வாங் 5 கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவ முடியும். பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்திய பெருங்கடல்கள் என உலகின் முக்கியக் கடற்பகுதிகளை இதன்மூலம் கண்காணிக்க முடியும். இந்த வரிசையில், 7 உளவுக் கப்பல்கள் சீனா கடற்படையில் உள்ளன.
- சீன ராணுவத்தின் ஸ்டார்டர்ஜிக் சப்போர்ட் போர்ஸ்(எஸ்.எஸ்.எப்) என்ற பிரிவு விண்வெளி, சைபர், மின்னணு என எதிரி நாடுகளின் முக்கிய நகர்வுகளைக் கண்காணிக்கிறது. இந்த பிரிவின் தலைமையின் கீழ் பீப்பிள் லிபரேஷன் ஆர்மி எனப்படும் சீன ராணுவம்தான் யுவான் வாங்-5 உளவுக் கப்பலை இயக்குகிறது.
- சீனாவின் 708 ஆய்வு நிறுவனத்தால் 3-வது தலைமுறை யுவான் வாங் சீரிஸ் தொழில்நுட்பங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எதிரி நாட்டு ஏவுகணைகளைக் கண்காணிக்க அதிநவீன ஆண்டெனா, தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சீன கப்பலில் எலக்ட்ரானிக் வார்போர் என்றழைக்கப்படும் நவீன போர் தொழில் நுட்பங்களும் பொருத்தப்பட்டுள்ளது. இத்தகைய தொழில்நுட்பங்களைக் கொண்டு மற்றொரு நாட்டின் இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை கண்காணிக்கவும், முடக்கவும் முடியும்.
- சமீபத்தில் ஏவிய லாங் மார்ச் 5பி ராக்கெட்டைக் கண்காணிக்க இந்தக் கப்பலைத்தான் சீனா பயன்படுத்தியது. அதேபோல், விண்வெளியில் சுற்றிவரும் சீனாவின் தியாகாங் விண்வெளி நிலையத்தைப் பூமியில் இருந்தே இந்தக் கப்பல் மூலம் தான் சீனா கண்காணித்து வருகிறது.