தீபா

ஹிமாச்சல் சோகம்… 9 பேர் பலி – நிலச்சரிவுக்கு 25 நிமிடங்கள் முன்பு டாக்டர் பகிர்ந்த போட்டோ! #Viral

ஹிமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால், சில மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள கின்னார் என்ற மாவட்டத்திலும் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 9 சுற்றுலாப் பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களைத்தவிர மேலும் மூன்று பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். சங்லா-சிட்குல் சாலையில் அமைந்துள்ள பஸ்தேரி அருகே தான் இந்த நிலச்சரிவு சம்பவம் நடந்துள்ளது.

மலைகளில் இருந்து பாறைகள் உருண்டோடி வந்து சாலைகளில் விழுவது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான தீபா சர்மா தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக  ஹிமாச்சல் பிரதேசத்துக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகள் தீபா சென்ற வாகனத்தின்மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இவர் கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் பொதுமக்கள் அனுமதிக்கப்படும் கடைசி இடம். இந்த இடத்தில் இருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் திபெத் எல்லை உள்ளது. அந்தப் பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது” என்று தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

மருத்துவர் தீபாவின் மறைவு இந்திய அளவில் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களின் வழியாக பலரும் அவருக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தீபாவுக்கு 34 வயதாகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவத்தில் இறந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். PMNRF-ல் இருந்து தலா ரூபாய் 2 லட்சம் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் மற்ற 8 பேர் மகாராஷ்டிரா மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. 

Also Read : திருப்பூரில் பைக்கில் சடலத்தைக் கொண்டு சென்ற இளைஞர்கள் – கொலையில் முடிந்த முறை தவறிய உறவு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top