தமிழகம் தவிர புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்குமான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அவற்றுக்கான முடிவுகளும் வெளியாகியிருக்கின்றன.
நான்கு மாநிலத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் ஆளுங்கட்சியே ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் சூழலில், புதுச்சேரியில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
நான்கு மாநிலத் தேர்தல்கள் சொல்லும் 4 சேதிகள்!
தனிப்பெரும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ்
புதுச்சேரியில் என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.கவோடு கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களில் வென்ற நிலையில், அந்தக் கூட்டணி மொத்தமுள்ள 30 தொகுதிகளில் ஆட்சியமைக்கத் தேவையான 15 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அதேநேரம், ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையில் அ.தி.மு.கவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது.
வரலாறு படைத்த கம்யூனிஸ்ட்
கேரளாவில் ஆளும்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி 91 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெற்றியைப் பதிவு செய்து, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. அங்கு எமெர்ஜென்ஸிக்குப் பிறகு ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல்முறை. சபரிமலை விவகாரம், தங்கக் கடத்தல் போன்றவை சிபிஎம் கட்சிக்கு பின்னடைவைத் தரும் என்று கூறப்பட்ட நிலையில், அதையெல்லாம் முறியடித்து வரலாறு படைத்திருக்கிறது பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி. அக்கட்சியின் மாநிலச் செயலாளராக 15 ஆண்டுகளாகப் பதவி வகிக்கும் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, 2018 வெள்ளம் மற்றும் கொரோனா பேரிடர் கால செயல்பாடுகளால் தேசிய அளவில் கவனிக்கப்பட்டது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணியால் 41 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி மொத்தமுள்ள 20 இடங்களில் 19-ஐ வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
எழுச்சிபெற்ற மம்தா
மொத்தம் 292 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றது. தமிழகத்தைப் போலவே மேற்குவங்கத் தேர்தல் முடிவுகளும் தேசிய அளவில் கவனம் பெற்றது. தேர்தலுக்கு முன்னதாக சுவேந்து அதிகாரி, முகுல் ராய் உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் பலரும் பா.ஜ.க-வில் இணைந்தனர். இது, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அசைத்துப் பார்த்தது. ஆனால், கடைசி வரை களத்தில் தனியொரு ஆளாகப் போராடிய மம்தா பானர்ஜி தலைமையிலான டி.எம்.சி, 214 இடங்களில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பா.ஜ.க 76 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்த சுவடே தெரியாமல் போனது.
2016 தேர்தலோடு ஒப்பிடுகையில் டி.எம்.சி, 161 தொகுதிகளைத் தக்கவைத்துக்கொண்டது. மீதமுள்ள 53 தொகுதிகள் இடதுசாரி – காங்கிரஸ் வசமிருந்தவை. பா.ஜ.கவைப் பொறுத்தவரை வெற்றிபெற்ற 76 தொகுதிகளில் 24 தொகுதிகள் இடதுசாரி-காங்கிரஸும், 47 தொகுதிகள் டி.எம்.சியும் கடந்த 2016ல் வென்றிருந்த தொகுதிகளாகும்.
திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று பா.ஜ.கவில் இணைந்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார் சுவேந்து அதிகாரி. அவர் விடுத்த சவாலை ஏற்று நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, 1,756 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மேற்குவங்கத்தில் பெருவாரியான வெற்றியைப் பதிவு செய்த மம்தா, நந்திகிராமில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்துமாறு வைத்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.
அசாமில் ஆட்சியைத் தக்கவைத்த பா.ஜ.க!
126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்தது. இதில், ஆளும்கட்சியான பா.ஜ.க தலைமையிலான மித்ரஜோத்’ கூட்டணி 74 இடங்களில் வென்றூ ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. காங்கிரஸ் தலைமையிலான
மஹாஜோத்’ கூட்டணி 50 இடங்களில் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்தது. பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட முதல்வர் சர்பானந்த சோனாவால், நிதியமைச்சர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெற்றனர்.
Also Read – TN Election 2021: ரூ.3,000 கையிருப்பு எம்.எல்.ஏ முதல் 10 அமைச்சர்கள் ஷாக் வரை… ரிசல்ட் சுவாரஸ்யங்கள்