கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு இந்தியாவின் 11 மாநிலங்களில் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது மத்திய அரசின் புள்ளிவிவரங்கள். இதில், தமிழகமும் இருக்கிறது. மகாராஷ்டிராவில் பாதிப்பு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஏப்ரல் 4-ம் தேதி ஒருநாளில் மட்டும் அந்த மாநிலத்தில் புதிதாக 57,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 4 நிலவரப்படி 3,446 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு அதிகம் ஏற்பட முக்கியக் காரணமாக வல்லுநர்கள் சொல்வது மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் கடைபிடிக்காததே. கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கக் காரணமான 4 விஷயங்கள்.
-
1 லாக்டௌன் கொடுத்த அழுத்தம்
கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், கடந்தாண்டு மார்ச் 24 முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பைக் குறைக்கும் வகையில் அரசு எடுத்த இந்த நடவடிக்கையால் கிட்டத்தட்ட ஆறு மாதத்துக்கும் மேல் மக்கள் வீடுகளுக்குள் முடங்க வேண்டி வந்தது. பெருந்தொற்று பாதிப்பு ஒருபுறம் இருக்க, கொரோனா பாதிப்பு பாதுகாப்பு நடைமுறைகளும் மறுபக்கம் நடைமுறைக்கு வந்தன. முகக் கவசம் அணிவது, குறைந்தது 6 அடி சமூக இடைவெளி, அடிக்கடி கைகளைக் கழுவுவது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை அரசு கொண்டுவந்தது. பல இடங்களில் இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்புகள் 2020 செப்டம்பருக்குப் பின்னர் குறையத் தொடங்கிய நிலையில், ஊரடங்கிலும் ஜூலை முதலே படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால், வீடுகளுக்குள் முடங்கியிருந்த மக்கள் மெல்ல வெளிவரத் தொடங்கினர். கொரோனா பாதிப்பு 2021 ஜனவரியில் குறையத் தொடங்கியதால், இயல்பு வாழ்க்கையை நோக்கி நகர்ந்தனர் மக்கள். பொது இடங்களில் உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் கூடத் தொடங்கியது. திருமணம், திருவிழா, இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் அதிக அளவில் கூட்டம் கூடத் தொடங்கினர். பெரும்பாலானோர் கொரோனா என்பது இறந்தகாலமாகவேக் கருதத் தொடங்கினர். டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை நகர மெட்ரோ ரயில்களில் கூட மாஸ்க் அணியாமல் மக்கள் பயணிக்கத் தொடங்கினர். இந்த அலட்சியமே கொரோனா இரண்டாவது அலை முதல் அலையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தக் காரணமாகியது. -
2 அரசு இயந்திரத்தின் குழப்பமான மனநிலை
தினசரி கொரோனா பாதிப்பு 10,000-த்துக்கும் கீழ் குறைந்த நிலையிலும் அதன் பாதிப்பிலிருந்து முழுமையாக நாம் மீளவில்லை என வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருந்தனர். குறைந்தபட்ச தினசரி பாதிப்பாகக் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி 8, 579 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடியும், நாட்டு மக்களிடம் விழிப்புணர்வோடு இருக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், இதை அரசு அதிகாரிகளே கண்டிப்போடு கடைபிடிக்காததை நம்மால் பார்க்க முடிந்தது.
ஆனால், ஐந்து மாநிலத் தேர்தல், அரசியல் கட்சிக் கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் கூடத் தொடங்கினர். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை பா.ஜ.க தொண்டர்களே கண்டுகொள்ளவில்லை. அக்கட்சியின் கூட்டங்களில் ஏராளமானோர் மாஸ்க், உரிய சமூக இடைவெளியின்றி கூடியதை பல தொலைக்காட்சிகள் நேரலை செய்தன. சமீபத்தில் முடிந்த பீகார் தேர்தலின்போதும், இப்போதைய ஐந்து மாநிலத் தேர்தலின்போதும் பல அரசியல் கட்சிகள் நடத்திய கூட்டங்களில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. இதனால், அரசு இயந்திரத்தின் குழப்பமான மனநிலை அப்பட்டமாக வெளிப்பட்டது. அடித்தட்டு மக்கள் வரை கொரோனா விதிமுறைகளைப் பற்றிக் கவலைப்படாமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கினர். -
3 அதிகரிக்கப்பட்ட பரிசோதனை
கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டதும் இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகம் பதிவாக முக்கியமான காரணம். இரண்டாவது அலை பாதிப்பு கண்டறியப்பட்ட நேரத்தில் இந்தியாவில் தினசரி பரிசோதனை மேற்கொள்ளப்படுவதற்கான வசதிகள் அதிகரித்தன. முதல் அலை வீசிய நேரத்தை விட தற்போதைய சூழலில் தினசரி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். அதேபோல், முதல் அலை பாதிப்பின்போது பலர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் தயக்கம் காட்டின. இப்போது அது குறைந்திருக்கிறது. 2021 ஏப்ரல் 4-ம் தேதி மட்டும் சுமார் 12 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
தினசரி கொரோனா பாதிப்பு என்ற வகையில், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், சண்டிகர், குஜராத், மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் ஹரியானா ஆகிய 11 மாநிலங்களில் கவலைப்படும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகச் சொல்கிறது மத்திய சுகாதாரத் துறை.
-
4 உருமாறிய வைரஸ்
கொரோனா பரவலின் ஆரம்பகட்டத்தில் இருந்து தொடர்ந்து இந்த வைரஸ் உருமாற்றம் பெற்று வந்திருக்கிறது. SARS-CoV-2 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸின் பல உருமாற்றம் பெற்ற வைரஸ் மாதிரிகளை விஞ்ஞானிகள் பதிவு செய்திருக்கிறார்கள். இரட்டை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் இந்தியாவில் பல பகுதிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்து வேரியண்ட், தென்னாப்பிரிக்கா வேரியண்ட், பிரேசில் வேரியண்ட் போன்ற உருமாற்றம் பெற்ற வைரஸால் இந்தத் தொற்று அதிவேகமாகப் பரவுவதை விஞ்ஞானிகளின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது.
0 Comments