1995-ல் ஒரு டீயின் விலை ஒரு ரூபாய் இருந்தது. பூமர் பபுள் கம்மின் விலையும் ஒரு ரூபாய்தான். இன்று ஒரு டீ மினிமம் 10 ரூபாய். பூமர் அதே ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது. இது எப்படி? பூமர் பபுள்கம்மின் வரலாறு என்ன? இந்தளவுக்கு பூமர் பிரபலமாக என்ன காரணம்?
90ஸ் கிட்ஸ்களின் நாஸ்டால்ஜியாவில் எப்போதும் இருக்கும் ஒன்று பூமர் பபுள்கம். நாம் சிறு வயதில் பார்த்த அதே கலர், டிசைன், சைஸ், விலை எல்லாமே இன்னமும் மாறாமல் அப்படியே இருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய ஆச்சர்யம். மாறிய ஒரே ஒரு விஷயம் அதன் கவர் டிசைன். அந்த கவரில் பூமர் லோகோவுக்கு மேலே ரிக்லீஸ் (Wrigley’s) என்று இருக்கும். அதே போல சிறுவயதில் நீங்கள் பூமர் கவரில் பார்த்த கார்ட்டூன் இப்போது பூமர் வாங்கினால் இருக்காது. இது இரண்டிற்கும் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது.
1995-ல் அறிமுகம் ஆனது பூமர் பபுள்கம். ஆனால் பூமர் ஏன் இவ்வளவு பாப்புலர் என்று தெரிந்துகொள்ள 100 வருடம் முன்பு போய் 1891-க்கு போக வேண்டும்.
அப்போது அமெரிக்காவில் சோப்பு விற்றுக்கொண்டிருந்தார் ரிக்லீஸ். வெறுமனே விற்றால் வியாபாரம் ஆகாது என்பதை உணர்ந்த ரிக்லீஸ், மார்கெட்டிங்கிற்காக சோப்பு வாங்கினால் பேக்கிங் சோடா இலவசமாகக் கொடுத்தார். வியாபாரம் சூடுபிடிக்க சோப்பைவிட இவருடைய பேக்கிங் சோடா பிரபலமாகிவிட்டது. சரி இனி பேக்கிங் சோடாவையே விற்கலாம் என்று முடிவு செய்து சோப்பை கைவிடுகிறார். பேக்கிங் சோடா வாங்கினால் சுயிங்கம் இலவசமாகக் கொடுத்தார். வழக்கம்போல பேக்கிங் சோடாவைவிட இவருடைய சுயிங்கத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு வந்தது. பிறகு சுயிங்கம் தயாரிப்பதையே தொழிலாக்கினார். இப்படி 1893 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ரிக்லீஸ் நிறுவனம் சுயிங்கம் தயாரித்து வருகிறது. டபுள்மிண்ட், ஆர்பிட் எல்லாம் இவர்களுடைய தயாரிப்புதான். ஆனால் பூமர் இவர்களின் தயாரிப்பல்ல.
ஜாய்கோ (Joyco) என்ற ஸ்பானிஷ் நிறுவனம் 1995 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய பபுள்கம்தான் பூமர். 2004-ல் இந்த ஜாய்கோ நிறுவனத்தை ரிக்லீஸ் வாங்கியதால் பூமர் அவர்களுடைய புராடக்ட் ஆனது. 1890-களிலேயே இலவசங்கள் கொடுத்து வேற லெவல் மார்க்கெட்டிங் செய்த நிறுவனம் பூமரை இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போனது. கிரிக்கெட், சினிமா என்று இந்தியர்களுக்கு எதெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் தன்னுடைய மார்க்கெட்டிங் யுக்திக்குப் பயன்படுத்தியது. அந்தக் காலங்களில் பூமருடன் வரும் ஸ்டிக்கர்களுக்கு 90ஸ் கிட்ஸ் அடிமையாகியிருந்தனர்.
பூம் பூம் பூமர் என்ற அதன் விளம்பரப் பாடலைப் போலவே அதில் வரும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரமும் ரொம்பவே ஃபேமஸ். குழந்தைகளைக் கவர்வதற்காக இந்த கார்ட்டூனை பயன்படுத்தியது ரிக்லீஸ் நிறுவனம். பூமர் விளம்பரங்களிலும் இந்த சூப்பர் ஹீரோ குழந்தைகளைக் காப்பாற்றுவதுபோல் இருக்கும். இப்போது வரும் பூமர்களில் நீங்கள் அந்த கார்ட்டூனைப் பார்க்க முடியாது. காரணம், 2014-க்கு பிறகு தன்னுடைய டார்கெட் ஆடியன்ஸ் இனி குழந்தைகள் இல்லை இளைஞர்கள் என்று முடிவு செய்தது அந்த நிறுவனம். அதற்குப் பிறகு சூப்பர் ஹீரோ கார்ட்டூனை நிறுத்திவிட்டது. அதோடு விளம்பரங்களிலும் இளைஞர்களை மையப்படுத்தியதாக இருந்தது. சில ஆண்டுகள் விளம்பரங்கள் செய்யாமலே மார்க்கெட்டில் நம்பர் #1 சுயிங்கமாக இருந்த பூமர், கடந்த ஆண்டு முதல் மீண்டும் விளம்பரங்கள் செய்யத் தொடங்கியிருக்கிறது.
சரி எப்படி 25 வருடங்களுக்கும் மேலாக ஒரு ரூபாய் விலைக்கே கொடுக்க முடிகிறது?
மூலப் பொருட்களின் விலை கூடினாலும் 1996-ல் தயாரித்த அளவைவிட பல மடங்கு அதிகமாக தயாரிக்கிறது பூமர். ஆட்களே செய்துகொண்டிருந்த பல வேலைகளை நவீன இயந்திரங்கள் கொண்டு ஆட்டோமேட் செய்துள்ளது. 1999-ல் 128 பேர் செய்துகொண்டிருந்த வேலையை இப்போது ஒரே ஒரு இயந்திரம் செய்துகொண்டிருக்கிறது. 1999-ல் ஒரு கிலோ பபுள் கம் செய்ய 50 ரூபாய் அளவில் செலவிட்டது இன்றும் அதே 50 ரூபாய் செலவில் ஒரு கிலோ பபுள்கம் செய்வதால்தான் இன்றுவரை விலை ஏறாமலே இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
அன்றைக்கு 90ஸ் கிட்ஸின் ஃபேவரிட் வார்த்தையாக இருந்த பூமர் இன்று அதே 90ஸ் கிட்ஸை கடுப்பேற்ற சொல்லும் வார்த்தையாக மாறிப்போனது சோகம்.
Also Read – ‘விஜய்ணா முதல் சிவாண்ணா வரை…’ ஆரம்ப காலத்தில் நடித்த அபத்த விளம்பரங்கள்!