டெல்லி உள்பட பல மாநிலங்கள் ஆக்ஸிஜன் தேவையால் திணறிக்கொண்டிருக்கும் சூழலில் கேரளா, மற்ற மாநிலங்களுக்கும் டேங்கர் லாரிகளை அனுப்பி உதவி வருகிறது. எப்படி சாத்தியமானது கேரள மாடல்?
தலைநகர் டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம், தமிழகத்தின் சில இடங்கள் உள்பட பிரணாவாயுவான ஆக்ஸிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், கேரளாவில் ஆக்ஸிஜன் உபரியாக இருக்கிறது. கொரோனா இரண்டாம் அலையில் நோய்த் தாக்குதல் தீவிரமாக இருந்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கான அதன் தேவையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பிராணவாயு இல்லாமல் நோயாளிகள் இறக்கும் அவலநிலையும் இருக்கிறது. `யாசகம் பெற்றோ, கடன் பெற்றோ அல்லது என்ன செய்தாவது மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனைக் கொடுங்கள்’ என டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசைக் கண்டிக்கும் நிலைதான் இருக்கிறது.
கேரள மாடல் எப்படி சாத்தியமானது?
`கடந்த வாரத்தில் மட்டும் 72 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை கோவாவுக்கும், 72 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை தமிழ்நாட்டுக்கும், 36 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை கர்நாடகாவுக்கும் அனுப்பியிருக்கிறோம்’ என்கிறார் கேரள பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (PESO) அமைப்பின் துணைத் தலைவர் ஆர்.வேணுகோபால். லட்சத்தீவு மற்றும் கேரளாவின் பிராண வாயு தேவையைக் கண்காணித்து, பகிர்ந்தளிக்கும் நோடல் ஆபிஸரும் இவரே.
பி.இ.எஸ்.ஓ அமைப்பு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேவையைக் கண்காணிக்கும் அமைப்பாகும். உற்பத்தி, ஸ்டோரோஜ், தேவையான இடங்களுக்கு அனுப்பிவைத்தல் போன்றவை இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும். கேரளாவின் தினசரி ஆக்ஸிஜன் உற்பத்தித் திறன் 204 மெட்ரிக் டன். அதேநேரம் கொரோனா நோயாளிகளுக்கான தினசரி தேவை 35 மெட்ரிக் டன், கொரோனா அல்லாத நோயாளிகளுக்கான தினசரி தேவை 45 மெட்ரிக் டன் என்ற அளவில் இருக்கிறது.
அந்த மாநிலத்தின் முக்கியமான உற்பத்தியாளர் ஐநாக்ஸ் ஏர் புராடக்ட்ஸ் (தினசரி உற்பத்தி 149 மெட்ரிக் டன்), கேரளா மினரல்ஸ் அண்ட் மெட்டல்ஸ் (6 மெட்ரிக் டன்), கொச்சின் ஷிப்யார்டு (5.45 மெட்ரிக் டன்), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (0.322 மெட்ரிக் டன்). இதுதரவி காற்றிலிருந்து ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் ஏர் செப்பரேஷன் யூனிட்டுகள் 11 கேரளாவில் இருக்கின்றன. இவற்றின் அதிகபட்ச உற்பத்தித் திறன் ஒரு நாளைக்கு 204 மெட்ரிக் டன். அதேபோல், பாலக்காட்டில் தினசரி 4 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட ஏர் செப்பரேஷன் யூனிட் உற்பத்தி மையத்தை அமைக்கும் பணியையும் கேரள அரசு மேற்கொண்டு வருகிறது.
அதிகரிக்கும் பயன்பாடு
ஏப்ரல் 18-ம் தேதி கணக்கின்படி அதிகபட்சமாக கேரளாவில் தினசரி ஆக்ஸிஜன் பயன்பாடு 89.75 மெட்ரிக் டன்னாக இருந்தது. பி.இ.எஸ்.ஓ அமைப்பு கொரோனா முதல் அலை தொடங்கிய 2020 மார்ச் முதல் பிராண வாயு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஐநாக்ஸில் தயாரிக்கப்பட்டு வந்த ஆக்ஸிஜனில், 2020-க்கும் முன்பாக 60 சதவிகிதம் வரை பல்வேறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால், அதன்பின்னர், மருத்துவமனைகளின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான ஆக்ஸிஜன் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
கேரளாவில் தினசரி அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1,05,000 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருப்பார்கள் என்ற எதிர்பார்க்கப்படும் சூழலில், தினசரி தேவை 51.45 மெட்ரிக் டன்னாகவும், கொரோனா அல்லாத நோயாளிகளுக்கான தேவையும் 47.16 டன்னாகவும் அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப கையிருப்பு வைக்கவும் மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது.