ஆதார் அட்டையில் இருக்கும் முக்கியமான தகவல்களான பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை எத்தனை முறை மாற்றிக்கொள்ள முடியும்?
ஆதார் அட்டை
மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் பல்வேறு சேவைகளைப் பெற ஆதார் அட்டை முக்கியமான ஆவணமாக மாறியிருக்கிறது. அதனால், ஆதாரில் இருக்கும் தகவல்கள் சரியாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை தவறாக இருக்கும்பட்சத்தில் அவற்றை மாற்றிக்கொள்ளவும் ஆதார் ஆணையம் வழிவகை செய்திருக்கிறது. தேசிய அடையாள ஆணையத்தின் (UIDAI) வழிகாட்டுதல்களின்படி ஆதாரில் இருக்கும் தகவல்களை இரண்டு முறை மாற்றிக்கொள்ளலாம். ஆதார் எண் எனப்படும் 12 இலக்க எண், இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான அடையாள எண்ணைக் கொண்டிருக்கும்.

ஆதாரில் இருக்கும் தகவல்களை எத்தனை முறை மாற்றிக்கொள்ளலாம்?
பெயர்
- பெயரை இரண்டு முறை மாற்றிக்கொள்ளலாம்.
பிறந்த தேதி
- பிறந்த தேதியை மாற்றவே முடியாது.
- தகவல்களை உள்ளீடு செய்யும் டேட்டா என்ட்ரியின்போது பிழை ஏற்பட்டிருந்தால் மட்டுமே பிறந்த தேதியை மாற்ற முடியும்.
முகவரி மற்றும் பாலின மாற்றம்
- முகவரி மற்றும் பாலினத்தை ஒரே ஒருமுறை மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது.
இதைத்தாண்டி மாற்ற என்ன நடைமுறை?
- ஆதார் ஆணையத்தின் வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையைத் தாண்டி, அதிலிருக்கும் தகவல்களை மாற்ற முடியுமா… முடியும் என்பதுதான் பதில். இதற்காக UIDAI மண்டல அலுவலகத்தை நீங்கள் அணுக வேண்டியிருக்கும்.
வழிகாட்டுதல்கள்
- பெயர், முகவரி மற்றும் பாலினம் போன்ற ஆதாரில் இருக்கும் தகவல்களை ஆதார் கேந்திர மையங்களுக்கு நேரில் சென்று மாற்றிக்கொள்ள முடியும்.
- அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையைத் தாண்டி மாற்றம் செய்ய விரும்பினால், ஆதார் கேந்திர மையங்களுக்கு நேரில் சென்று, அதன்மூலம் ஆதாரின் மண்டல அலுவலகத்துக்கு கோரிக்கையாக விண்ணப்பம் ஒன்றை அளிக்க வேண்டும்.
- என்ன காரணத்துக்காக ஆதார் தகவல்களை மாற்ற விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிட்டு, அத்துடன் URN ரசீது, ஆதார் எண் மற்றும் தேவையான சான்றுகளை இணைக்க வேண்டும்.
- உங்கள் விண்ணப்பத்தை help@uidai.gov.in என்கிற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.
- சரிபார்ப்புக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், ஆதார் கேந்திர மையங்களுக்குச் செல்ல வேண்டும்.
- உங்களின் விண்ணப்பம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி, கூடுதல் தகவல்களையும் ஆதார் மண்டல அலுவலகம் திரட்டும்.
- தகவல்கள் சரிபார்ப்புக்குப் பிறகு உங்களின் கோரிக்கை ஏற்கப்படலாம்.

தகவல் மாற்றுவதற்குத் தேவையான ஆவணங்கள்
- பாஸ்போர்ட்
- வங்கிக் கணக்கு விவரங்கள்
- அஞ்சலக சேமிப்புக் கணக்கு பாஸ்புக்
- குடும்ப அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டை
- பொதுப்பணித் துறை நிறுவனங்கள் வழங்கிய புகைப்பட அடையாள அட்டை
- மின் கட்டண ரசீது (3 மாத காலத்துக்கு மிகாமல்)
- தண்ணீர் வரி, சொத்து வரி ரசீதுகள், டெலிபோன் பில் (3 மாத காலத்துக்கு மிகாமல்)
Also Read – சென்னை வீடு/இடம் வாங்குவதற்கு முன்னர் செக் பண்ண வேண்டிய ஆவணங்கள் என்னென்ன?
0 Comments