சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவுடன் இணைய ஹைதராபாத் மறுத்தது. நாட்டின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் எப்படி அந்த மாகாணத்தை இந்தியாவுடன் இணைய வைத்தார்… என்ன நடந்தது?
சுதந்திர இந்தியா
இந்தியாவை, தங்கள் காலனியாதிக்கத்தின் கீழ் வைத்திருந்த பிரிட்டீஷ் படைகள் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நள்ளிரவோடு நாட்டை விட்டு முழுமையாக வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. இந்திய சுதந்திர தினமாக அந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரமடைகையில் மன்னராட்சிக்குட்பட்ட 567 மாகாணங்களாகப் பிரிந்து கிடந்தது. முகமது அலி ஜின்னாவின் முஸ்லீம் லீக் கோரிக்கையால் பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்து சென்ற பிறகு, இந்தியாவில் 522 மாகாணங்கள் இருந்தன.
இவற்றை ஒருங்கிணைக்கும் பொறுப்பு நாட்டின் முதல் துணைப் பிரதமரான சர்தார் வல்லபாய் படேலுக்கு வழங்கப்பட்டது. அவரின் வலது கரமாக செயல்பட்ட மூத்த அதிகாரி வி.பி.மேனன் உதவியோடு அந்த மாகாணங்களை ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிக் காட்டினார். சுதந்திரத்துக்குப் பிறகு தனித்தனி மாகாணங்களாக இருந்தவற்றுக்கு இந்தியாவுடன் இணைவது, பாகிஸ்தானுடன் இணைந்து கொள்வது அல்லது தனி மாகாணமாகவே செயல்படுவது என மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டன. பல்வேறு மாகாணங்கள் படேலின் உறுதியளிப்பை ஏற்று இந்தியாவுடன் இணைய முற்பட்டபோது, திருவாங்கூர் சமஸ்தானம், ஜோத்பூர், போபால், ஹைதராபாத் மற்றும் ஜூனாகத் ஆகியவை இந்தியாவுடன் இணைய மறுத்துவிட்டன. பேச்சுவார்த்தைகள், ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் மூலமாக பின்னர் இவை இந்தியாவோடு இணைந்தன. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய மாகாணங்களுள் ஒன்றாக இருந்த ஹைதராபாத் மாகாணத்தை இந்தியாவுடன் இணைக்க `இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டி இருந்தது.
ஹைதராபாத் மாகாணம்
இந்தியா சுதந்திரமடைந்தபோது ஹைதராபாத் மாகாணத்தை நிஜாம் மிர் உஸ்மான் அலி ஆளுகையின் கீழ் இருந்தது. அந்த மாகாணத்தில் 85% அளவுக்கு இந்துக்கள் இருந்தபோதும், அவர்களுக்கு அரசாங்கப் பதவிகள், ராணுவத்திலோ உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. சுதந்திரத்துக்கு முன்னரே தனியாகப் பணம், தொலைதொடர்பு, ரயில் போக்குவரத்து, தபால் துறை, ரேடியோ ஒலிபரப்பு என தனி அரசாங்கத்தையே உஸ்மான் அலி நிர்மாணித்திருந்தார். அதேபோல், தனியாக ராணுவத்தையும் கட்டமைத்திருந்த அவர், பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தாலும் அங்கிருந்து தூரமாக இருப்பதால் இந்தியாவுடன் இணைய விருப்பமில்லாமல், சுதந்திர நாடாகத் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்பினார். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் அவையில் அவர் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதர உறவுகளைப் பேண தூதர்களையும் அவர் நியமித்தார்.
இந்த நடவடிக்கைகள் நேரு தலைமையில் அமைந்த இந்திய அரசுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இருப்பினும் ஹைதராபாத் நிஜாமுடனான பிரச்னையைப் பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்க்க காந்தியும் நேருவும் விரும்பினர். இதற்காக ஒரு வருட அவகாசமும் அளிக்கப்பட்டு ஒப்பந்தமும் இருதரப்பில் கையெழுத்திடப்பட்டது. அதுவரை ஹைதராபாத்துக்குள் இந்திய ராணுவம் நுழையாது; அதேநேரம் அந்த மாகாணத்தின் வெளியுறவுத் துறையை இந்திய அரசு கவனித்துக் கொள்ளும் என்று முடிவு செய்யப்பட்டது.
சர்தார் வல்லபாய் படேல்
ஆனால், இந்த ஒப்பந்தத்தின் பல்வேறு ஷரத்துகளை மீறிய ஹைதராபாத் நிஜாம் ராணுவத்தைப் பலப்படுத்தினார். அதேபோல், வெளிநாடுகளுடனான பேச்சுவார்த்தையையும் தன்னிச்சையாக ஒருபுறம் தொடர்ந்து வந்தார். இந்த விவகாரம் சர்தார் வல்லபாய் படேலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. 1948 வாக்கில் பிரதமர் நேரு ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில், பிரதமர் என்ற நிலையில் ராணுவ நடவடிக்கைக்கு படேல் உத்தரவிட்டார். இதையடுத்து, Operation Polo திட்டத்தோடு இந்திய ராணுவம் தயாரானது. பிரதமர் நேரு, கவர்னர் ஜெனரல் ராஜாஜி உள்ளிட்ட அரசின் கேபினட்டை செப்டம்பரில் பேசி இந்த முடிவை ஏற்க வைத்தார் வல்லபாய் படேல்.
Operation Polo
ராணுவத்தின் லெப்டினன்ட் இ.என்.கோடாடர்ட் யோசனைப்படி `கோடார்ட் திட்டம்’ (Goddard Plan) திட்டம் தயாரானது. இந்தத் திட்டத்தின் படி கிழக்கே விஜயவாடா வழியாகவும் மேற்கே சோலாப்பூர் வழியாகவும் தாக்குதல் தொடுக்கத் திட்டமிடப்பட்டது. தாக்குதலுக்கான நாளாக 1948 செப்டம்பர் 13-ம் தேதி நாள் குறிக்கப்பட்டது. பல்முனைத் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் திணறிய மேஜர் ஜெனரல் எல் எட்ரூஸ் தலைமையிலான ஹைதராபாத் ராணுவம், 1948-ம் ஆண்டு செப்டம்பர் 18-ல் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தது. 1948 செப்டம்பர் 13-17 வரை நடந்த இந்தப் போரில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதனால், சர்தார் படேல் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத்தைக் கைப்பற்றிய பிறகு நிஜாம் உஸ்மான் அலியோடு பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு அம்மாகாணத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.
Also Read – படுகொலை முதல் ஹார்ன்பில் திருவிழா நின்றுபோனது வரை… நாகாலாந்தில் நடந்தது என்ன?