ரஷ்யா – உக்ரைன் போர் உங்க பாக்கெட்டை எப்படி பதம் பார்க்கும்?

உக்ரைனுக்குள் புகுந்து ரஷ்யப் படைகள் ஆறு நாட்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. எங்கேயோ நடக்குற இந்தப் போர் உங்க பாக்கெட்டையும் பதம் பார்க்கும்… உக்ரைன் போர் இந்தியப் பொருளாதாரம் மட்டுமல்ல உங்க வீட்டு பட்ஜெட்லயும் செலவுகளைக் கூட்டும்… எப்படினு தெரிஞ்சுக்கலாம் வாங்க…

உக்ரைன் போர்

உக்ரைன் போர்
உக்ரைன் போர்

சிதறுண்ட சோவியத் யூனியனின் ஒரு அங்கமாக இருந்த நாடு உக்ரைன். ரஷ்யாவோடு மட்டும் கிட்டத்தட்ட 2,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. நம்மூர் இந்தியா – பாகிஸ்தான் போலவே ரஷ்யா – உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே நெருப்பு கனன்று கொண்டே இருந்தது. தீடீரென இருநாடுகள் இடையே போர் நடக்கலாம் என்று கடந்த பிப்ரவரி இறுதியில் ஒரு இறுக்கமான சூழல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நாங்க அப்படிலாம் இல்லை என அறிவித்த ரஷ்யா, உக்ரன் மீது தாக்குதல் நடத்தப்போவதாகக் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி அறிவித்த கையோடு, உடனடியாகத் தாக்குதலையும் நடத்தத் தொடங்கியது. அத்தோடு, உக்ரைன் மீது சைபர் தாக்குதலையும் ரஷ்ய ஹேக்கர்கள் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா, ஐரோப்பிய யூனியன், நேட்டோ நாடுகள் தொடங்கி அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து என வரிசையாக உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது ஒருபுறம் என்றால், உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளைப் படித்துவந்த வெளிநாட்டு மாணவர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகினர். இந்திய மாணவர்கள் மட்டுமே சுமார் 20,000 பேர் அங்கு பதுங்கு குழிகளுக்குள் வாழ வேண்டிய நிலை. அவர்களைப் பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

போரினால் இப்படியான நேரடி பாதிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், உக்ரைன் போரால் பொருளாதாரரீதியில் பல்வேறு சிக்கல்களை உலக நாடுகள் எதிர்க்கொண்டாக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. உக்ரைன் மீதான போர் குறித்து ரஷ்ய அதிபர் புடின் அறிவித்த நாள் முதலே உலக அளவில் பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்திய பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸும் போன வாரத்தில் 2,000 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.

இதனால் என்ன… எங்களுக்கு என்ன பிரச்னைனு கேக்குறீங்களா… இது சமையல் எண்ணெய் தொடங்கி, எரிவாயு, பெட்ரோல், டீசல், தங்கம்னு நாம பயன்படுத்துற பொருட்களோட விலையையும் பாதிக்கும் என்பதுதான் நிதர்சனம்.

சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெய்

உக்ரன் போர் உங்க பாக்கெட்டை எப்படி பதம்பார்க்கும்?

உக்ரைன் போர் தொடங்குறதுக்கு முன்னாடியே ஐரோப்பிய நாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி இந்தியாவுக்குத் தலைவலியாக மாறியிருந்தது. இந்த பிரச்னையை சமாளிக்கக் கடந்த ஆண்டு மட்டும் செப்டம்பர், டிசம்பர் என இரண்டு முறை இறக்குமதிக்கான வரி உள்ளிட்டவைகளை மத்திய அரசு குறைத்து சமாளிக்க நினைத்தது. ஆனால், திடீரென ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் இந்தப் பிரச்னையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போயிருக்கு. ஏன்னு கேக்குறீங்களா… நாம சமையலுக்குப் பயன்படுத்துற சூரிய காந்தி எண்ணெய் (Sun Flower Oil) 90% அளவுக்கு உக்ரைன்ல இருந்துதான் இறக்குமதி பண்றோம். சமீப ஆண்டுகளில் உக்ரைனில் இருந்து இறக்குமதி இந்த அளவுக்கு அதிகரிச்சிருக்கிறதா சொல்றாங்க. போரால், இறக்குமதி பண்ற சப்ளை செயின் பயங்கரமா அடி வாங்கி, சூரியகாந்தி எண்ணெயோட தட்டுப்பாடு சந்தையில் அதிகரிக்கும். இது செயின் ரியாக்ஷன் மாதிரி மற்ற அத்தியாவசியப் பொருட்களோட விலையையும் உயர வைக்கும் என்று பதறுகிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

கடந்த 2018-19-ல் ரூ.55,000 கோடி அளவுக்கு இருந்த சமையல் எண்ணெய் இறக்குமதி, 2021-22 ஆண்டில் ரூ.1,50,000 கோடி அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் உக்ரைனில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி 28% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த உயர்வு 44% அளவுக்கு அதிகரித்திருந்தது. இந்தியா, மொத்த சமையல் எண்ணெய் பயன்பாட்டில் 55% அளவுக்கு இறக்குமதியையே சார்ந்திருக்கிறது. மொத்த சமையல் எண்ணெய் பயன்பாட்டில் உக்ரைன் சூரியகாந்தி எண்ணெய் 14% ஆகும். Palm Oil மற்றும் Soya Bean oil ஆகியவற்றை நாம் மலேசியா, அர்ஜெண்டினா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கான சூரியகாந்தி எண்ணெயை மொத்தமாக இந்தியா இறக்குமதி செய்கிறது. சமீபத்திய போர் தொடரும்பட்சத்தில் மொத்தமாக இந்த இறக்குமதி பாதிக்கப்படலாம் என்கிறார்கள். இதனால், கனடாவில் இருந்து Canola, வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் இருந்து Ricebran oil போன்ற மாற்று ஏற்பாடுகளை நோக்கி வியாபாரிகள் நகரத் தொடங்கியிருக்கிறார்கள். மார்ச் இரண்டாவது வாரத்துக்குள் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வராவிட்டால், இந்திய சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை உச்சம் தொடும் என்கிறார்கள்.

பெட்ரோல்
பெட்ரோல்

கச்சா எண்ணெய் விலை உயர்வு

இந்தப் போரினால் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கு மேல் எகிறிவிட்டது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உற்பத்தியில் முக்கியமான இந்த கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களின் பட்ஜெட்டிலும் கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். உடனடி எதிர்விளைவாக வணிகரீதியிலான சமையல் எரிவாயுவின் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயரும். அதேபோல், ஏற்கனவே ஒரு லிட்டர் 100 ரூபாயைத் தாண்டி விற்கப்படும் பெட்ரோலின் விலையும் டீசலின் விலையும் உயரலாம் என்பதே களநிலவரம். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் பயணிகள் போக்குவரத்து தொடங்கி சரக்கு வாகனப் போக்குவரத்தும் காஸ்ட்லியாகும் என்பதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயரலாம் என்று கருதப்படுகிறது. இதனால், விலைவாசி உயர்வால் பணவீக்கமும் அதிகரித்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமல்லாது தங்கம் உள்ளிட்டவைகளின் விலையும் எகிறும். தங்கத்தின் விலையில் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில், உள்நாட்டு சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.53,000-த்தைக் கடந்த வாரத்தில் எட்டியது.

மொத்தத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பொருளாதாரரீதியான தாக்கங்கள் உலகின் எல்லா மூலைகளிலும் எதிரொலிக்கும் என்பதே உண்மை.

Also Read – காமெடி கிங் டு உக்ரைன் அதிபர் – யார் இந்த விளாடிமீர் ஜெலன்ஸ்கி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top