Ramesh jarkiholi

கர்நாடக அரசியலும் பாலியல் சர்ச்சைகளும்… அமைச்சர் ராஜினாமா – யார் இந்த ரமேஷ் ஜர்கிஹோலி?

ஆபாச சிடி சர்ச்சையில் கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோளி சிக்கியிருக்கிறார்.

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சியில் இருக்கிறது. எடியூரப்பா அமைச்சரவையில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் ரமேஷ் ஜர்க்கிஹோளி. இவர் வேலைக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக வீடியோ ஆதாரங்களை கர்நாடக லோக்கல் சேனல்கள் ஒளிபரப்பின. கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 4-ம் தேதி தொடங்க இருந்த நிலையில், மார்ச் 2-ம் தேதி வெளியான இந்த விவகாரம் எடியூரப்பா அரசுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியது.

கர்நாடக செய்தி சேனல்கள் ஒளிபரப்பிய வீடியோவில் அமைச்சர் ரமேஷ் ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற அந்தரங்கக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த விவகாரம் கர்நாடக அரசில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தார்மீக அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அமைச்சர் ரமேஷ் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு மார்ச் 3-ல் ராஜினாமா கடிதம் கொடுத்த அவர், தன் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை. அந்த சி.டி 100 சதவிகிதம் போலியானது என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ரமேஷின் சகோதரரும் பா.ஜ.க எம்.எல்.ஏவுமான பாலசந்திர ஜர்கிஹோளி, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும், இல்லையென்றால் சிடியை ஒளிபரப்பியவர்கள் மீது 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், “ஒரு பெண்ணுக்கு அநீதி இழைத்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், அவர் யாரென்றே தெரியவில்லை. யாரோ ஒருவர் அந்தப் பெண்ணின் உறவினர்கள் கேட்டுக்கொண்டதாகப் புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரை ஏற்றுக்கொண்டதே தவறு. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்தான் புகார் கொடுக்க வேண்டும். மாறாகத் தெருவில் போகும் யாரோ ஒருவர் புகார் கொடுக்க முடியாது’’ என்று கொதித்திருக்கிறார்.

போலீஸ் புகார்

இதுதொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சமூக ஆர்வலர் தினேஷ் கலஹள்ளி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்திருக்கிறார்கள். புகாரில், `பாதிக்கப்பட்ட பெண் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அந்தப் பெண்ணின் உறவினர்கள் சிடியை என்னிடம் கொடுத்து புகாரளிக்க வலியுறுத்தினர். அவர்கள் நடந்த சம்பவம் குறித்த தகவல்களை என்னிடம் கூறினர். கர்நாடக பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைகேட்ட அந்த பெண்ணிடம் அமைச்சர் ரமேஷ் அத்துமீறியிருக்கிறார். தன்னுடைய விருப்பத்துக்கு இணங்கினால் வேலைபெற முடியும் என்று அமைச்சர் அந்தப் பெண்ணிடம் கூறியிருக்கிறார்’’ என தினேஷ் குறிப்பிட்டிருக்கிறார். அந்த சிடியைக் கைப்பற்றிய போலீஸார் ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறார்கள். தற்போதைய சூழலில் அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை என்கிறது காவல்துறை வட்டாரம்.

யார் இந்த ரமேஷ் ஜர்கிஹோளி?

எடியூரப்பா அமைச்சரவையின் அதிகாரமிக்க அமைச்சர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் ரமேஷ், காங்கிரஸில் இருந்தவர். ஐக்கிய ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி அரசுக் கவிழ்ந்ததில் முக்கியப் பங்காற்றிய ரமேஷ், வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்தவர். காங்கிரஸில் இருந்து விலகிய 17 எம்.எல்.ஏக்களில் முக்கியமானவரான இவர், பா.ஜ.க-வில் 2019ம் ஆண்டு இணைந்தார். ஆறு முறை எம்.எல்.ஏவான ரமேஷூக்கும் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவராக டி.கே.சிவக்குமாருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னையே கூட்டணி ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். பெலகாவி பகுதியை யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அது மோதல் அளவுக்கு முற்றியதாகச் சொல்கிறார்கள்.

கர்நாடகாவில் இது முதல்முறையல்ல!

கர்நாடக அரசியலில் பாலியல் சர்ச்சை எழுவது இது முதல்முறையல்ல. கடந்த 2012ம் ஆண்டு பா.ஜ.க அமைச்சர்களான லஷ்மண் சவாதி, கிருஷ்ணா பெல்மர், சி.சி.பாட்டீல் ஆகியோர் சட்டப்பேரவையில் ஆபாச வீடியோ பார்த்து கேமராவில் சிக்கினர். இது மிகப்பெரிய சர்ச்சையாக அப்போது உருவெடுத்தது. அந்த சர்ச்சையில் சிக்கிய லஷ்ணம் சவாதி, தற்போதைய எடியூரப்பா அரசில் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். அதேபோல், சி.சி.பாட்டீல் குறு தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சராக இருக்கிறார்.

அதேபோல், காங்கிரஸைச் சேர்ந்த ஹெச்.ஒய்.மேதி, பா.ஜ.க எம்.எல்.ஏவும் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக இப்போது இருக்கும் ரேணுகாச்சார்யா, பா.ஜ.க-வின் எஸ்.ஏ.ராமதாஸ் ஆகியோர் பாலியல் புகாரில் சிக்கியிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top