கேரளாவைச் சேர்ந்த அனுபமா, ஓராண்டாகப் போராடி சட்டவிரோதமாக தத்துக் கொடுக்கப்பட்ட தனது குழந்தையை மீட்டிருக்கிறார். என்ன நடந்தது?
அனுபமா எஸ்.சந்திரன்
கேரள தலைநகர் திருவனந்தபுரம் புறநகர்ப் பகுதியான பேரூர்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் ஆளும்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளராக இருக்கிறார். இவரது மகளான அனுபமா, தனது குழந்தையைக் கடத்திவிட்டதாக தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் மீது பேரூர்கடை போலீஸில் புகார் அளித்தார்.
அனுபமாவுக்கு அப்பகுதியைச் சேர்ந்த DYFI நிர்வாகி அஜித் என்பவரோடு காதல் ஏற்பட்டது. ஏற்கனவே திருமணமான அஜித்துடன் நெருக்கமாக இருந்த அனுபமா, கர்ப்பமடைந்தார். இவர்களது காதலுக்கு அனுபமா வீட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், கடந்த 2020 அக்டோபரில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்தக் குழந்தையை அனுபமாவுக்குத் தெரியாமல் அவரது தந்தை ஜெயச்சந்திரன் உள்ளிட்ட குடும்பத்தினர் சட்டவிரோதமாக தத்துக் கொடுத்ததாகக் குற்றம்சாட்டினார். தனது குழந்தையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று அனுபமா கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையில், ஒரு வயதான அந்த ஆண்குழந்தை அனுபமாவுடையதுதான் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தனது குழந்தையை மீட்பதற்காக அனுபமா ஓராண்டாக நடத்திவந்த போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்குள் குழந்தையை ஒப்படைப்பதாக கேரள குழந்தைகள் நல ஆணையம் அனுபமாவுக்கு உறுதியளித்திருக்கிறது.
அனுபமா வழக்கில் என்ன நடந்தது – டைம்லைன்!
ஆகஸ்ட் 2020 – அஜித்துடனான பழக்கத்தால் அனுபமா கர்ப்பமடைந்த விவகாரம் அவரது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.
செப்டம்பர் 2020 – இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் DYFI மண்டல செயலாளர் பதவியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான அஜித் நீக்கப்பட்டார்.
அக்டோபர் 19, 2020 – அனுபமாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அக்டோபர் 22 – அனுபமாவின் குழந்தையை கேரள குழந்தை நல ஆணையத்தில் அவரது பெற்றோர்கள் ஒப்படைத்தனர்.
ஜனவரி 2021 – தனது முதல் மனைவியிடமிருந்து அஜித் விவாகரத்து கோரினார்.
மார்ச் 2021 – அஜித்தும் அனுபமாவும் ஒன்றாக சேர்ந்து வாழத் தொடங்கினர். அனுபமாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீக்கியது.
ஏப்ரல் 19 – தனது குழந்தையை சட்டவிரோதமாகத் தன்னிடமிருந்து பெற்றோர் பிரித்துவிட்டதாகவும், அதைக் கண்டுபிடித்துத் தருமாறும் பேரூர்கடை போலீஸில் அனுபமா புகாரளித்தார். இதுதொடர்பாக கேரள குழந்தைகள் நல ஆணையத்திலும் வீடியோ காலில் அனுபமா புகாரைப் பதிவு செய்தார்.
ஏப்ரல் 29 – கேரள டிஜிபி-யிடம் இதுகுறித்து அனுபமா புகார் அளித்தார்.
ஜூலை 2021 – குழந்தையைத் தத்தெடுப்பது குறித்து மத்திய தத்தெடுப்பு ஆணைய இணையதளத்தில், அதன் விவரங்கள் வெளியிடப்பட்டன.
ஆகஸ்ட் 7 – தத்தெடுப்பு கமிட்டியின் ஐந்து பேர் கொண்ட குழுவினர் தற்காலிகமாக அந்தக் குழந்தையை ஆந்திர தம்பதியின் பராமரிப்பில் விட முடிவு செய்தனர்.
ஆகஸ்ட் 11 – தனது குழந்தை விவகாரம் தொடர்பாக மாநில குழந்தைகள் நல ஆணையத்துக்கு வந்த அனுபமாவுக்கு, வேறொரு குழந்தையை அதிகாரிகள் காட்டினர். இதையடுத்து, டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
செப்டம்பர் 30 – டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது.
அக்டோபர் 7 – டி.என்.ஏ பரிசோதனை முடிவில், குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் காட்டிய குழந்தை அனுபமாவுடையது இல்லை என்பது தெரியவந்தது.
அக்டோபர் 15 – கேரள ஊடகங்களை சந்தித்த அனுபமா, தனது குழந்தை விவகாரம் குறித்து வெளிப்படையாகக் குற்றம்சாட்டி பேட்டியளித்தார்.
அக்டோபர் 18 – குழந்தைக்கு ஒரு வயதாவதற்கு முந்தைய நாள் இந்த விவகாரத்தில் போலீஸார் முதல்முறையாக வழக்குப் பதிந்தனர்.
அக்டோபர் 21 – கேரள பெண்கள் நல ஆணையம் வழக்குப் பதிந்தது.
நவம்பர் 8 – குழந்தையைக் கண்டுபிடித்துத் தரக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை அனுபமா வாபஸ் பெற்றார்.
நவம்பர் 11 – கேரள குழந்தைகள் நல ஆணைய தலைமை அலுவலகம் முன்பு அனுபமாவும் அஜித்தும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
நவம்பர் 18 – டி.என்.ஏ பரிசோதனை நடத்துவதற்காக அனுபமாவின் குழந்தையை ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரம் கொண்டுவர கேரள குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது.
நவம்பர் 21 – தத்தெடுப்புக்காக ஆந்திரா கொண்டுசெல்லப்பட்ட குழந்தை திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டது.
நவம்பர் 22 – குழந்தை, அனுபமா – அஜித் ஆகியோருக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது.
நவம்பர் 23 – டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் மூலம் குழந்தையின் பெற்றோர் அனுபமா – அஜித் என்பது உறுதியானது.