மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி – மத்திய அரசு இடையிலான மோதல் போக்கு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. தலைமைச் செயலாளர் விவகாரத்தில் என்ன நடந்தது?
மேற்குவங்கத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பா.ஜ.க கொடுத்த டப் ஃபைட்டை சமாளித்து வெற்றிபெற்ற மம்தாவால், தான் போட்டியிட்ட நந்திகிராமில் வெற்றிபெற இயலவில்லை. அவரது கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த சுவேந்து அதிகாரி வெற்றிபெற்றார். தேர்தலுக்கு முன்பிருந்தே மம்தா – மத்திய பா.ஜ.க அரசு இடையே மோதல் இருந்துவந்த நிலையில், கடந்த 28-ம் தேதி நடந்த யாஷ் புயல் ஆய்வுக் கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் மோதலை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தின.
ஆய்வுக் கூட்டத்தில் என்ன நடந்தது?
மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களைப் பாதித்த யாஸ் புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இருந்தவாறு பார்வையிட்டார். பின்னர் மேற்குவங்கத்தின் பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் இருக்கும் கலைகுண்டா பகுதியில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தன்கர், அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த 28-ம் தேதி மதியம் 2.30 – 3.30 வரை இந்த கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், கூட்டத்துக்கு மம்தா அரை மணி நேரம் தாமதமாக வந்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. தலைமைச் செயலாளர் அலப்பன் பந்தோபாத்யாய் உடன் கூட்டம் நடந்த இடத்துக்குத் தாமதமாக வந்த மம்தா, புயல் சேதங்கள் குறித்த ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு உடனே, அந்த இடத்தை விட்டு அடுத்த கூட்டத்துக்காகச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை அந்தக் கூட்டத்துக்கு அழைத்த மோடியின் முடிவில் மம்தா மாறுபட்டு நின்றதாகவும், இதனாலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
அலப்பன் பந்தோபாத்யாய்
இந்தநிலையில், மேற்குவங்க தலைமைச் செயலாளர் அலப்பன் பந்தோபாத்யாயை டெல்லி நார்த் பிளாக்கில் மே 31-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மத்திய பணியாளர் நலத்துறை நோட்டீஸ் அனுப்பியது. மம்தாவின் நம்பிக்கைக்குரியவராக அறியப்படும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அலப்பன் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் மேற்குவங்க முதலமைச்சருக்குப் பதிலடி கொடுக்க மத்திய பா.ஜ.க அரசு நினைத்தது என்கிறார்கள். ஆனால், ஏற்கனவே மூன்று மாதங்கள் பணிநீட்டிப்பில் இருந்துவந்த அலப்பன், மே 31-ம் தேதியோடு ஓய்வுபெறுவதாக இருந்தார். அவருக்குப் பணிநீட்டிப்புக் கேட்க மம்தா திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே ஓய்வுபெறும் முடிவை அவர் எடுத்துவிட்டார். உடனடியாக அவரை முதலமைச்சரின் தலைமை ஆலோசகராக நியமித்து செய்தியாளர்களிடம் அறிவித்தார் மம்தா பானர்ஜி.
ஓய்வுபெற்றுவிட்டதால், அவர் மத்திய அரசின் பணியாளர் நலத்துறையிடம் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என்றும் மம்தா, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “இது பழிவாங்கும் நடவடிக்கை. பிரதமர் இரக்கமில்லாமல் செயல்படுகிறார். முதலமைச்சர் மீது இருக்கும் கோபத்தில், தலைமைச் செயலாளரைத் தாக்குகிறார்கள். அவர் ஓய்வுபெற்றுவிட்டார். கொரோனா சூழலில் அவரது சேவை மேற்குவங்கத்துக்கும் மக்களுக்கும் தேவை’’ என்றார்.
விதிகளின்படி, ஒரு அதிகாரி ஓய்வுபெற்று 4 மாதங்கள் கழித்துகூட அவர் மீது துறைரீதியான விசாரணையை நடத்த முடியும். அதன்படி, `உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று கூறி அலப்பன் பந்தோபாத்யாய்-க்கு மத்திய அரசு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அவர் மாநில அரசுப் பணியில் இருக்கும்போது டெல்லிக்குப் பயணிக்க மாநில அரசு அனுமதிக்கவில்லை என்ற விளக்கமளிக்கலாம் என்றும் இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான் என்கிறார்கள். அதேநேரம், பிரதமர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டத்தைத் தவிர்த்த விவகாரத்தில் அலப்பன் விதிகளை மீறி செயல்பட்டிருக்கிறார். அதற்காக அவர் மீது நடவடிக்கை பாயலாம் என்றும் சொல்லப்படுகிறது. விசாரணை முடிவில் அவரது பென்சன், அபராதம் ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படலாம் என்கிறார்கள். நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் பணியாளர் தீர்ப்பாணையம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அவர் நாடுவார் என்றும் மேற்குவங்க அரசு வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
1987-ம் ஆண்டு மேற்குவங்க கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அலப்பன் பந்தோபாத்யாய், கடந்த 2020-ல் தலைமைச் செயலாளராகப் பதவியேற்றார். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அவரது மனைவி சோனாலி சக்ரவர்த்தி பானர்ஜி, கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கிறார். தலைமைச் செயலாளராகப் பதவியேற்கும் முன்னர், ஹவுரா, வடக்கு, தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியராகப் பணிபுரிந்தவர் அலப்பன். மேலும், போக்குவரத்துத் துறை, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை, வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம், உள்துறை செயலாளர் பதவிகளை வகித்த அனுபவம் வாய்ந்தவர்.
Also Read – அரசியல் வருகைக்குத் தூபம் போடும் சசிகலா… தொண்டர்களிடம் பேசியது என்ன?