கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தங்கள் பெயரில் ஆக்ஸிஜனைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் பங்குகள் ஸ்டாக் மார்க்கெட்டில் ஏறுமுகம் கண்டு வருகின்றன.
கொரோனா முதல் அலையை விட இந்தியாவில் இரண்டாம் அலையில் பாதிப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. முதல் அலையில் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 98,000 என்ற அளவில் இருந்தது. ஆனால், இரண்டாவது அலையில் இந்திய அளவில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தையும் கடந்திருக்கிறது. இறப்பும் தினசரி ஆயிரத்துக்குக் குறையாமல் பதிவாகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் திண்டாடுவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். குறிப்பாக டெல்லி மருத்துவமனைகளில் பெரும்பாலானவை நிரம்பி வழிவதால், உரிய நேரத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதேபோல், ஆக்ஸிஜன் தேவையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் ரத்தம் மற்றும் நுரையீரலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதற்காக, செயற்கையாக சுவாச வாயு அளிக்கப்படும்.
அந்தவகையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும்சூழலில், ஆக்ஸிஜனின் தேவையும் அதிகரித்திருக்கிறது. டெல்லி உள்பட பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் கையிருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், நோயாளிகளின் உறவினர்களே ஆக்ஸிஜன் சிலிண்டர்களோடு ரேஷன் கடையில் வரிசையில் நிற்பது போல நின்று ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களிலிருந்து வாங்கி மருத்துவமனைகளுக்குக் கொடுக்கும் அவல நிலையும் பல இடங்களில் இருக்கிறது. ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் விலையும் இருமடங்காக உயர்ந்திருக்கிறது.
மறுபுறம், மும்பை பங்கு சந்தையில் பட்டியலிட்டப்பட்டுள்ள நிறுவனங்களில் ஆக்ஸிஜன் என்ற வார்த்தையைத் தங்கள் பெயர்களில் கொண்டுள்ள நிறுவனங்களின் பங்கு பல மடங்கு உயர்ந்து வருகிறது. பாம்பே ஆக்ஸிஜன், நேஷனல் ஆக்ஸிஜன் லிமிட்டெட், பகவதி ஆக்ஸிஜன் லிமிட்டெட் போன்ற நிறுவனங்களின் பங்குகள் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 47 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. மும்பை பங்கு சந்தையின் மொத்த மதிப்பு 2 சதவிகிதம் சரிந்த நிலையில், வேறு எந்த பங்கு சந்தைகளிலும் பட்டியலிடப்படாத இந்த சிறு நிறுவனங்களின் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஏற்றம் கண்டிருக்கின்றன.
நேஷனல் ஆக்ஸிஜன், பகவதி ஆக்ஸிஜன் ஆகிய நிறுவனங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் வாயுவை உற்பத்தி செய்து வரும் நிலையில், பாம்பே ஆக்ஸிஜன் நிறுவனம் ஆக்ஸிஜன் உற்பத்தியை 2019ம் ஆண்டே நிறுத்திவிட்டது. அந்த நிறுவனம் தற்போது வங்கித் துறை அல்லாத கடன் கொடுக்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. அதன் பெயரையும் பாம்பே ஆக்ஸிஜன் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிட்டட் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டது. ஆக்ஸிஜன் தயாரிப்புக்கே தொடர்பில்லாத இந்த நிறுவனத்தின் பங்குகள் மட்டும் ஏப்ரல் மாதத்தில் 112 சதவிகிதம் ஏற்றம் கண்ட நிலையில், கடந்த 20ம் தேதி வர்த்தகத்தில் 5% மட்டும் வீழ்ச்சியடைந்தது. நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தேவை சீரான பின்னர், ஏற்றம் கண்ட இந்த நிறுவனங்களின் பங்குகள் மீண்டும் பழைய நிலையையே அடையும் என்கிறார்கள் நிபுணர்கள்.