ஷைலஜா டீச்சர்

கேரள அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடமில்லையா… கட்சி சொல்வது என்ன?

கேரள சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமான நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கேரள அமைச்சரவைப் பட்டியல் வெளியாகியுள்ளது. கொரோனா முதல் அலை தீவிரமாக பரவியபோது அதனை சிறப்பாக கையாண்டதற்காக இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் கவனம் பெற்ற கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவுக்கு தற்போதைய அமைச்சரவையில் இடம் இல்லை என்று வெளியாகியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Shailaja Teacher
Shailaja Teacher

இதுதொடர்பாக சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஷம்ஷீர் என்.டி.டி.வியிடம் பேசும்போது, “முதல்வரைத் தவிர முந்தைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் யாரும் இந்த அமைச்சரவையில் இடம் பெறவில்லை. இது எங்களுடைய கட்சியின் முடிவு. எங்கள் கட்சிக்கு மட்டுமே அவ்வாறு செய்ய தைரியம் உள்ளது. பல சிறந்த கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் போட்டியிட நாங்கள் அனுமதிக்கவில்லை. எங்களுக்கு புதிய முகங்கள் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சசி தரூர் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், கேரள அமைச்சரவையில் ஷைலஜா டீச்சர் இடம்பெறாதது கவலை அளிக்கிறது. புகழ் மற்றும் செயல்திறனைத் தவிர அவர் எப்போதும் எளிதில் அணுகக்கூடியவராகவும் பொறுப்புமிக்கவராகவும், உதவி செய்யக்கூடியவராகவும் இருந்தார். குறிப்பாக கொரோனா தொடர்பான நெருக்கடிகளில் சிறப்பாக பணியாற்றினார். She will be missed” என்று பதிவிட்டுள்ளார். விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனனும் தனது ட்விட்டர் பக்கத்தில்,நமக்கு கிடைத்த மிகச்சிறந்த சுகாதார அமைச்சர்களில் ஒருவரான ஷைலஜா டீச்சர் கொரோனா தொடர்பான நெருக்கடிக்கு மத்தியில் அமைச்சரவையில் இடம்பெறவில்லையா? உண்மையிலேயே என்ன நடந்தது?” என்று இருவரையும் டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இடதுசாரி ஜனநாயக அணியை சமூக வலைதளவாசிகள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கொரோனா முதல் அலையைக் கையாண்டதில் ஷைலஜா டீச்சர் `ராக் ஸ்டார்’ சுகாதார அமைச்சராகக் கொண்டாடப்பட்டார். அவருடைய தலைமையிலான குழு கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் சிறப்பாக கையாண்டதில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தது. கொரோனா மட்டுமல்லாது நிபா வைரஸ் பரவல் சமயத்திலும் அந்த நெருக்கடிகளை சிறப்பாக கையாண்டதற்காக அவர் பாராட்டப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிக்கை ஒன்று 2020-ம் ஆண்டின் சிறந்த சிந்தனையாளராக ஷைலஜா டீச்சரைத் தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் சர்வதேச அளவிலும் அவருக்குக் கவனம் கிடைத்தது.

ஷைலஜா டீச்சர், தான் போட்டியிட்ட மட்டன்னூர் தொகுதியில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. வெற்ற பெற்றபோது பேசிய அவர், “நான் மீண்டும் சுகாதார அமைச்சராக இருப்பேனா என்பது அமைச்சரவை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்போது முடிவு செய்யப்படும். எனவே, நான் இப்போது இதுதொடர்பாக எந்த பதிலையும் நிச்சயமாகக் கூற முடியாது. எங்களுடைய ஆட்சிக் காலத்தில் நாங்கள் பல சவால்களைக் கண்டோம். சூறாவளி, வெள்ளம், நிபா வைரஸ், கொரோனா வைரஸ் என பல பிரச்னைகள் வந்தது. சூழலுக்கு ஏற்றவாறு நாங்கள் செயல்பட்டோம். மக்களும் இதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர். நாங்கள் செய்த பணிக்காகவே மக்கள் எங்களை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

சிபிஎம் கட்சியானது ஷைலஜா டீச்சரை தனிமைப்படுத்துகிறதா என்ற கேள்வி தேவையில்லை என அக்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். குறிப்பாக பொலிட்பீரோ உறுப்பினர் எம்.ஏ.பேபி, “முதன்முறையாக அமைச்சரானவர்கள் இன்னும் பலர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டனர். புதிய அரசாங்கத்தில் அவர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. இது அனைவருக்கும் ஒரே மாதிரியான கொள்கைதான். பல புதிய முகங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்பை இதன்மூலம் பெறுவார்கள். கடந்த பினராயி விஜயன் அரசாங்கத்தில் தாமஸ் ஐசக் மற்றும் ஜி சுதாகரன் ஆகியோரைத் தவிர அனைவரும் புதிய அமைச்சர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று தெரிவித்திருந்தார். கட்சியின் முடிவுக்கு பலரும் வரவேற்பை அளித்தாலும், கே.கே.ஷைலஜா அமைச்சரவையில் இடம்பெறாதது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top