ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் நூறு சதவிகித பங்குகளை வாங்குவதற்கான டெண்டரில் டாடா குழுமத்தின் பெயர் இறுதி செய்யப்பட்டு, மத்திய அமைச்சர் குழுவின் ஒப்புதலைப் பெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 1953-ம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஏர் இந்தியா, டாடா நிறுவனத்துக்கு மீண்டும் சொந்தமாகிறது.
டாடா ஏர்லைன்ஸ்
தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா, இந்தியாவில் விமான சேவையை வழங்கும் நோக்கில் `டாடா ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் விமான நிறுவனம் ஒன்றை 1932-ல் தொடங்கினார். ஒருங்கிணைந்த இந்தியாவின் கராச்சி நகரில் இருக்கும் டிரிக் ரோடு ஏரோடிராமில் இருந்து மும்பையின் ஜுஹூ ஏரோடிராமுக்கு முதல்முறையாக தபால் சேவை அளிக்கும் ஒப்பந்தத்தை டாடா ஏர்லைன்ஸ் பெற்றது. அதன்பின்னர், இந்த சேவை மெட்ராஸ் (சென்னை), அகமதாபாத், பெல்லாரி நகரங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. 1939-ல் திருவனந்தபுரம், டெல்லி, இலங்கையின் கொழும்புவுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1938-ல் முதல்முறையாக உள்நாட்டு பயணிகள் விமான சேவையை இந்த நிறுவனம் மும்பை – திருவனந்தபுரம் இடையே தொடங்கியது. ஆறு பேர் அமரக் கூடிய விமானத்துடன் அந்த சேவை தொடங்கப்பட்டது.
அதன்பிறகு இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டபோது, டாடா ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் பிரிட்டிஷ் துருப்புகளுக்கு உதவின. உலகப் போருக்குப் பின்னர், இந்தியன் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் அரசு வசமானது டாடா ஏர்லைன்ஸ். இதுதொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் 1953-ல் சட்டம் இயற்றப்பட்ட நாட்டில் இருந்த விமான நிறுவனங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.
ஏர் இந்தியா – வளர்ச்சியும் வீழ்ச்சியும்
1953-ல் உள்நாட்டு, சர்வதேச சேவைகளை வழங்கும் வகையில் ஏர் இந்தியா இரண்டு நிறுவனங்களாக அரசுடமையாக்கப்பட்டது. அதேநேரம், அந்த நிறுவனத்தின் தலைவராக 1977-ம் ஆண்டு வரை ஜே.ஆர்.டி.டாடாவே நீடித்தார். 2000-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவின் லாபகரமான விமான நிறுவனமாகத் திகழ்ந்த அந்த நிறுவனம், அதன் பிறகு விமானப் போக்குவரத்துத் துறையில் நுழைந்த தனியார் நிறுவனங்களோடு போட்டி போட முடியாமல் திணறத் தொடங்கியது. 2006-07-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த அந்த நிறுவனத்தின் கடன் 2009 வாக்கில் ரூ.7,200 கோடியாக இருந்தது. இந்தத் தொகை, கொரோனா சூழலால் விமானப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில், ரூ.40,000 கோடிக்கும் மேல் உயர்ந்து நிற்பதாகக் கூறப்படுகிறது.
செலவுகளைக் குறைப்பதற்காக ஏர் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக 2009 முதலே எடுத்து வந்தது. 2010-ல் பயணிகளிடம் வரவேற்புக் குறைந்த இடங்களுக்கு விமான சேவையை நிறுத்தியது. 2012-ல் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகம் நடத்திய ஆய்வில், ஏர் இந்தியாவை பகுதியளவு தனியார் மயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. 2013-ல் அப்போதைய விமானப் போக்குவரத் துறை அமைச்சர் அஜித் சிங், `தனியார்மயமாக்குவதே அந்த நிறுவனம் பிழைப்பதற்கு ஒரே வழி’ என்றார். அதன்பிறகு 2017-ல் இதற்காக அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டது.
முதலில், ஏர் இந்தியாவின் 76% பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. கடனைப் பொறுத்தவரையில், ரூ.33,392 கோடி அளவுக்கு வாங்கும் நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், அதை வாங்க எந்தவொரு தனியார் நிறுவனமும் முன்வரவில்லை. இதையடுத்து, 2019-ம் ஆண்டு இறுதியில் அந்த நிறுவனத்தின் 100% பங்குகளையும் விற்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த முறை வாங்கும் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும் கடன் தொகையும் ரூ.30,000 கோடியாகக் குறைக்கப்பட்டது.
டாடா குழுமம்
இதற்காகக் குறைந்தபட்சத் தொகை ஒன்றையும் மத்திய அரசு நிர்ணயித்திருந்தது. இந்தமுறை, டாடா குழுமம், ஸ்பைஸ்ஜெட்டின் அஜய் சிங் உள்ளிடோர் ஏலத்தில் பங்கெடுத்து, தங்கள் நிறுவனங்கள் சார்பில் டெண்டர் தொகையைக் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அளித்திருந்தனர். இந்தநிலையில், டாடா குழுமம் இதில் வெற்றிபெற்றிருப்பதாகவும், அதற்கு மத்திய அமைச்சரவைக் குழுவும் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஏலத்தில் மத்திய அரசு குறிப்பிட்டிருந்த தொகையை விடக் கூடுதலாக 3,000 கோடி அளவுக்கான தொகையை டாடா குழுமம் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
டாடா குழுமம், தனது நிறுவனரால் தொடங்கப்பட்ட விமான நிறுவனத்தை சுமார் 88 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைப்பற்றியிருக்கிறது. ரூ.40,000 கோடிக்கு மேல் கடனைக் கொண்டிருக்கும் நிறுவனத்தை எப்படி வெற்றிகரமான நிறுவனமாக மாற்றப்போகிறது டாடா என்பதே, அந்த நிறுவனத்தின் முன் இப்போது இருக்கும் மிகப்பெரிய சவால்.
Also Read – உங்களிடம் பழைய ஒரு ரூபாய் நோட்டு இருக்கிறதா… ரூ.45,000 வரை சம்பாதிக்கலாம் – எப்படி?