பொதுவா மும்பைனாலே நமக்கெல்லாம் முதல்ல ஸ்ட்ரைக் ஆகுறது அந்த மாநகரோட நிழல் உலகமும், அதை ஆட்டிப்படைக்குற தாதாக்களும்தான்… மும்பையில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சில டான்களும் கோலோச்சியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து இளம்வயதில் வேலைதேடி மும்பைக்குச் சென்று, பின்னர் தாதாவாக உருவெடுத்தவர்கள் இவர்கள். அப்படி மும்பையில் கொடிகட்டிப்பறந்த தமிழ்நாட்டு தாதாக்களான வரதராஜ முதலியார், திராவிட நாடார் மற்றும் ஹாஜி மஸ்தான் ஆகிய மூன்று பேரைப் பத்திதான் இந்த வீடியோவுல நாம தெரிஞ்சுக்கப் போறோம். கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவான நாயகன், வரதராஜ முதலியாரின் கதைதான் என்று சொல்லப்படுவதுண்டு. அதேபோல், ரஜினி – பா.இரஞ்சித்தின் காலா கேரக்டருக்கு திராவிட நாடார்தான் இன்ஸ்பிரேஷன் என்றும் சொல்கிறார்கள். அதேபோல், ஹாஜிமஸ்தான் கேரக்டரை அடிப்படையாகக் கொண்டு பாலிவுட்டில் சில சினிமாக்களும் வெளிவந்திருக்கிறது. அமிதாப் பச்சன் – சஷிகபூர் கூட்டணியில் வெளியான `தீவார்’, Once Upon a time in Mumbai என்ற பெயரில் அஜய் தேவ்கன் நடித்த படம் ஆகியவை ஹாஜி மாஸ்தான் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்டவை. தாதாக்கள் என்றாலே ஸ்டைலாக கோட், சூட் போட வேண்டும் என்ற ஸ்டைலிஷ் கல்ச்சரை உருவாக்கியது ராம்நாதபுரத்துக்காரரான ஹாஜி மஸ்தான்தான் என்கிறார்கள்.
வரதராஜ முதலியார் டூ வரதா பாய்!
வேலூரைப் பூர்வமாக கொண்டு தூத்துக்குடியில் பிரிட்டிஷ் கப்பல் கழகத்தில் பணி செய்து வந்த குடும்பத்தில் பிறந்தவர். தன் 20-வது வயதில் தெரிந்தவர் ஆலோசனையின் பேரில் தமிழகத்தில் இருந்து மும்பைக்கு வேலை தேடி செல்கிறார்.1945-களில் மும்பை ரயில்வே நிலையத்தில் சுமைதூக்கும் கூலித்தொழிலாளியாக தன்னுடைய ஆரம்ப காலத்தில் வேலை செய்தார். பின்னர் துறைமுகத்திற்கு வேலைக்குச் செல்கிறார். தங்குவதற்கு இடம் இல்லாததால் தமிழர்களின் மற்றும் தென்னிந்திய மக்கள் மிகுந்த பகுதியான மும்பையில் உள்ள தாராவிக்கு ஒரு சிலருடைய உதவியுடன் செல்கிறார். அந்த காலத்தில் வேலைதேடி பஞ்சம் பிழைக்க சென்றவர்களின் பகுதியாக தாராவி இருந்தது. வரதராஜ முதலியார் துறைமுகத்தில் வேலை செய்தால் முதலில் அங்கிருந்து உணவு பொருட்கள் மற்றும் துணிகளைக் கடத்தி கொண்டு வந்து தாராவி மக்களுக்கு கொடுப்பதை முதலில் ஆரம்பித்தார்.

பின்னர் சில வருடங்களுக்கு பிறகு மராட்டிய மொழி வெறியர்கள் மராட்டிய அரசின் துணையுடன் தாராவி மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வரப்போகிறார்கள் என்பது தெரிந்ததும் வரதராஜ முதலியார் தனது தலைமையில் ஒரு குழுவுடன் சென்று அவர்களுடன் ஆயுதங்கள் கொண்டு சண்டை போடுகின்றார். பின்னர் போலீஸிடம் சென்று பிரச்னை முடிகிறது. இந்த இடத்தில்தான் தாராவியில் வரதாவை மக்கள் சின்ன தாதாவாக (Don) பார்க்கின்றனர். இங்கிருந்துதான் வரதராஜ முதலியார் நவீன துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் பெரிய தாதாவாகவே (Gang star) மாறினார். பாம்பே மக்கள் அவரை வரதா பாய் என அழைக்க ஆரம்பித்தனர். தமிழர்களுக்கு பிரச்னை என்றால் நான் இருக்கிறேன் என்ற கொள்கையுடன் வரதராஜ முதலியார் உறுதியுடன் இருந்தார்.
தமிழருக்கு வரதா பாய் இருக்கிறார் என்று மாராட்டிய மாநிலத்தில் எதிரிகள் பயந்தனர். பின்னர் சட்டத்துக்கு புறம்பான போதை பொருட்கள் கடத்துதல் மற்றும் கப்பல் திருட்டு & கட்டப்பஞ்சாயத்து தொழிலை செய்து படிப்படியாக வளர்ந்த வரதாபாய் 1960-களில் மிகப்பெரிய தாதாவாக மும்பையில் உருவானார். அச்சமயத்தில் மும்பையில் மிகப்பெரிய நிழல் உலகதாதாவாக இருந்த கரீம்லாலா, ஹாஜி மஸ்தான் உடனும் உலக தாதாக்களுடனும் வரதா கைகோர்த்தார்.1960 முதல் 1980 காலங்களில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்தார் வரதா பாய். அந்தக் காலத்தில் இவரின் செல்வாக்கை பார்த்து மராட்டிய அரசே அதிர்ந்துதான் போனது.

இவர் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தாராவி மற்றும் மும்பையில் உள்ள தமிழர்களுக்கு தானமாகவே வாழ்நாள் முழுவதும் வழங்கினார். பம்பாயில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு இருந்த காலத்தில் தமிழர்கள் மற்றும் ஏழைகளுக்கு இவர் பெரு உதவி செய்தார். தனது ஒரே மகளுக்கு எந்த சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை.1982-ல் மும்பையில் தாதாக்களை கட்டுப்படுத்த காவல்துறை வரதா பாயின் ஆட்களை என்கவுண்டர் செய்தும், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மும்பையை விட்டு வெளியேற வைத்தது. 1980-பிறகு, இவர் சென்னைக்குத் திரும்ப வந்தார். 1988-ம் ஆண்டு தன்னுடைய 62-ம் வயதில மாரடைப்பால் காலமானார். பின்னர் வரதாவின் இறப்பை அறிந்த நிழல் உலக தாதாவும் நெருங்கிய நண்பருமான ஹாஜி மஸ்தான் வரதாவின் உடல் மும்பை தாராவியில் தான் புதைக்கப்பட வேண்டும் என்று கூறி தனிவிமானம் மூலமாக சென்னையில் இருந்து மும்பைக்கு அவரின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்தார்.
மும்பையின் முதல் ‘ஸ்டைலிஷ்’ தாதா!
ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளத்தில் 1926-ம் ஆண்டு பிறந்தார், மஸ்தான் ஹைதர் மிர்சா. கடலூரில் சிறிது காலம் வாழ்ந்து, பின் பிழைப்பு தேடி தன் தந்தையுடன் பம்பாய் சென்றார். சைக்கிள் பழுது பார்க்கும் வேலை செய்த அவர்களுக்கு வருமானம் போதவில்லை. பம்பாய் துறைமுகத்தில் கூலி வேலை செய்தார், மஸ்தான். அங்கு கிடைத்த தொடர்புகளின் மூலம் சின்ன சின்ன கடத்தல் வேலைகளில் ஈடுபட்டவர் மெல்ல வளர்ந்தார். ஆப்கானிஸ்தானிலிருந்து மும்பைக்கு புலம் பெயர்ந்த கரீம் லாலா என்பவருடன் இணைந்து பல பெரிய வேலைகளைச் செய்து பணம் சம்பாதிக்கத் தொடங்கினார். தங்கக் கடத்தலில் பணம் கொட்ட, எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பல கடத்தல் தொழில்களிலும் ஈடுபட்டு விரைவில் பெரும் புள்ளியானார். வெள்ளை பென்ஸ் கார், வெள்ளை உடை, வெளிநாட்டு சிகரெட், என இவர் தான் மும்பையின் முதல் ‘ஸ்டைலிஷ்’ தாதா. பணப்புழக்கம் அதிகரிக்கவும், புதுப் பழக்கங்களும் அதிகரித்தன. இந்தி திரையுலகிலும் நுழைந்தார். படங்களுக்கு நிதியளித்தார், பின் தயாரிக்கவும் செய்தார். ராஜ் கபூர், திலீப் குமார், தர்மேந்திரா என பாலிவுட் பிரபலங்கள் இவரது நண்பர்களாகினர்.

இவரது தொடர்புகள் வேறு தளங்களில் இருந்தாலும், தமிழரான வரதா பாயின் நட்பு மூலம் மும்பையில் இருந்த தமிழர்களுக்கும் பாதுகாப்பாய் இருந்தார். ஒரு கட்டத்தில், முதலியாரின் கூட்டாளிகள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டு, அவரும் சென்னைக்கு வந்து உயிரிழந்தபோது, அவரது உடலைத் தனி விமானத்தில் மும்பை கொண்டு சென்று அடக்கம் செய்தவர் இந்த ஹாஜி மஸ்தான்தான். அந்த அளவுக்கு நட்புடன் இருந்தனர் ஹாஜி மஸ்தானும், வரதராஜ முதலியாரும்.1984-ல் ‘தலித் முஸ்லீம் சுரக்ஷா மகா சங்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தினார். ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையைத் தழுவி, இந்தியில் ‘தீவார்’ (Deewar), ‘ஒன்ஸ் அபான் அ டைம் இன் மும்பை’ (Once upon a time in Mumbai) ஆகிய படங்கள் வந்தன.
‘வள்ளல்’ திரவிய நாடார்!
வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான் ஆகியோரிடமிருந்து சற்று மாறுபட்டவர் திரவிய நாடார். திருநெல்வேலியில் இருந்து தன் பதினாறு வயதில் சென்னைக்கு சென்று, அங்கு தன் அண்ணன் ஏற்றுக்கொள்ளாததால், ரயிலேறி பம்பாய்க்கு சென்றார். கள்ளச்சாராயத்துக்குத் தேவைப்படும் வெல்லம் விற்கும் வேலையில் ஈடுபட்டு வளர்ந்ததால், ‘ஃகூடு வாலா சேட்’ எனவும் அழைக்கப்பட்டார. ஒரு கட்டத்தில் கடத்தலில் இருந்து விலகி, காலியாக இருந்த நிலங்களைக் கைப்பற்றி கடைகள் கட்டியுள்ளார். அங்கிருந்த தமிழர்களுக்கு உதவியாகவும் இருந்தார். காமராஜரின் தீவிர ஆதரவாளர். ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார் ஆகியோருடனும் நல்ல உறவில் இருந்துள்ளார். ஆரம்பத்தில் சின்னச் சின்ன சட்டவிரோத செயல்கள் செய்தார்.

இவரது தொடக்க காலம் வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான் ஆகியோரைப் போலவே இருந்தாலும், பின்னாட்களில், அவர்கள் அளவுக்கு பிரபலமான நிழலுலக மனிதராக இவர் திகழவில்லை. மாறாக தாராவி மக்களுக்கு அரணாய் அமைந்து, தமிழ்க் குழந்தைகளுக்காக பள்ளி ஒன்றையும் கட்டினார். தாராவியில் இருந்த தனது நிலங்களை பிழைப்பு தேடி வந்த தமிழ் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். இவரின் குரலுக்கு தாராவியே திரண்டு நிற்கும். தன்னுடைய 75 வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அப்போது தாராவி மக்கள் இரண்டு பெரிய டிரக்குகளில் இவரது உடலை ஏற்றி எட்டு மணிநேரம் மும்பையை ஊர்வலமாக வந்தனர். அப்போது சுமார் 30 ஆயிரம் பேர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
Also Read – பம்பாய் படம் ஏன் கல்ட் க்ளாசிக்.. 4 `நச்’ காரணங்கள்!
0 Comments