Bomb

ரெண்டு வெடிகுண்டு பார்சல்! – தேர்தல் முடிவுக்கு ப்ரீ புக்கிங்

மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் சமயத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.

தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி கடந்த பிப்ரவரி 26-ல் அறிவிக்கப்பட்டது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்துமுடிந்த நிலையில், மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. தேர்தல் காலத்தில் மேற்குவங்கத்தில் வெடிகுண்டு தயாரிப்பு குடிசைத் தொழில்போல் நடந்து வருகிறது.

தேர்தல் காலங்களில் வெடிகுண்டுகளை ஆர்டர் கொடுப்பதை மேற்குவங்க அரசியல் கட்சிகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. `தேர்தல் போர் போன்றது. அந்த சமயத்தில் வெடிகுண்டுகளின் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும். தேர்தலுக்கு முன்பாக வெடிகுண்டுகளுக்கான ஆர்டர்கள் குவியும். வெடிகுண்டுகளை வாங்கி தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பே அரசியல் கட்சிகள் ஸ்டாக் வைத்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. பயன்படுத்தப்படாத அரசு கட்டடங்கள், கைவிடப்பட்ட கட்டடங்களில் இவை சேமித்து வைக்கப்படும்’என்று பெயர் குறிப்பிட விரும்பாத வெடிகுண்டு உற்பத்தி செய்யும் நபர் ஒருவர் பிரபல ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.

காவல்துறை தரவுகளின்படி கடந்த ஓராண்டில் மட்டும் 2,000 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அதேநேரம், தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் மேற்குவங்கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றியிருக்கிறார்கள்.

வெடிகுண்டு கலாசாரம்

வெடிகுண்டு (ANI)

மேற்குவங்க கிராமங்களில், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும், தேர்தல் சமயங்களில் மக்களிடம் ஒரு பயத்தை ஏற்படுத்தவும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துகின்றன அரசியல் கட்சிகள். அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் வெடிகுண்டுகள் ஆயுதங்களாகின்றன. சமீபத்தில், முர்ஷிபாத்தை அடுத்த நிம்திதா ரயில் நிலையத்தில் அமைச்சர் ஜாகீர் உசேன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல், 24 நார்த் பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஜகத்தால் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டு, போலீஸ் வைத்திருந்த சிசிடிவி கேமராக்களும் கடந்த மார்ச் 18-ல் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தின் பின்னணியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டியது. இதில், குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

பாஸ்சிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள பினியாதி கிராமத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் சர்பன் சௌத்ரி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க-வும் திரிணாமுல் காங்கிரஸும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்தன. தேர்தல் சமயத்தில் இதுபோன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் மேற்குவங்கத்தில் தொடர்கதையாகிவிட்டன.

வெடிகுண்டு கலாசாரம் மேற்குவங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். மேற்குவங்கத்தை இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிவைத்ததை இன்று திரிணாமுல் காங்கிரஸும் பா.ஜ.கவும் தொடர்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. சி.பி.எம் கட்சியில் இருந்து நூற்றுக்கணக்கான ரௌடிகள் பா.ஜ.க-வில் இப்போது இணைந்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்க்கட்சியினரையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள்’ என்கிறது திரிணாமுல் காங்கிரஸ். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் பா.ஜ.க தரப்பு,கடந்த பத்தாண்டுகள் ஆட்சி, அதிகாரத்தில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ், இந்த முறை எப்படியும் தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் வெடிகுண்டுகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டி வருகிறது. வன்முறையை இந்த மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடுவதே மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான்’ என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. சி.பி.எம் தரப்பிலோ, `எங்கள் கட்சி என்றுமே வன்முறைக்கு இடம் கொடுத்தது கிடையாது’ என்கிறார்கள். எந்த கட்சியும் வெடிகுண்டு பயன்பாட்டை மறுக்காத நிலையில், மற்றகட்சிகள் மீது குற்றச்சாட்டை முன்வைப்பதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கின்றன.

மூன்று வகை வெடிகுண்டுகள்!

வெடிகுண்டு

மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை சுட்லி (sutli), கூட்டோ (kouto), சாக்கெட் (socket) என மூன்று வகை வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். சணல் கயிறுகளால் சுற்றப்பட்டிருக்கும் சுட்லி வெடிகுண்டு ஒன்றில் விலை ரூ.500 என்றும் இரும்பாலான டப்பாவில் அடைக்கப்பட்டிருக்கும் கூட்டோ வெடிகுண்டில் விலை ரூ.600 வாக்கில் இருக்கும் என்றும் தெரியவருகிறது. இரும்பு பைப்பில் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கெட் வகை வெடிகுண்டின் விலை ரூ.1,000-1,200 வரை இருக்கும் என்கிறார்கள். தேர்தல் சமயத்தில் மட்டும் வெடிகுண்டு தயாரிப்பைக் குடிசைத் தொழில் போல சீசனல் பிஸினஸாகச் செய்வதை மேற்குவங்கத்தில் பலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதன்மூலம், 2 – 3 லட்ச ரூபாய் லாபம் பார்த்துவிட முடியும் என்கிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top