பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை ஐபிஓ மூலம் விற்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பலைகள் எழுந்திருக்கின்றன. ஐபிஓ என்றால் என்ன.. எல்.ஐ.சி ஐபிஓ-வின் பின்னணி என்ன… தெரிஞ்சுக்கலாம் வாங்க..
ஐபிஓ (IPO)
Initial Public Offering என்பதே சுருக்கமாக IPO. தனியார் நிறுவனம் பங்குச் சந்தை மூலம், தனது பங்குகளை விற்று அதன் மூலம் நிதி திரட்டும் ஒரு நடைமுறையே ஐபிஓ என்றழைக்கப்படுகிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் அந்த நிறுவனம் தொடங்கி கொஞ்ச நாட்களானதாகவோ அல்லது ஏற்கனவே இயங்கி வரும் பழைய நிறுவனமாகவோ இருக்கலாம். அதேநேரம், நிறுவனங்கள் புதிதாகத் தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்று முதலீடு திரட்டலாம் அல்லது ஏற்கனவே பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள், நிதி திரட்டும் நோக்கில் அல்லாமல் தங்களது பங்குதாரர்கள், பொதுமக்களுக்கு பங்குகளை விற்கலாம்.
பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்கும் நிறுவனங்கள், அவர்களுக்கு அந்த முதலீட்டைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. முதலீட்டுக்குத் துணைபுரியும் வங்கிகள் மூலம் தங்களது பங்குகளை விற்கும் நிறுவனங்கள் `Issuer’ என்றழைக்கப்படுகின்றன. ஐபிஓ மூலம் பங்குகளை விற்ற பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் வியாபாரம் செய்யப்படும். ஐபிஓ மூலம் பங்குகளை வாங்கியவர், அதை மற்றொரு நபருக்கு சந்தை நிலவரத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையில் விற்கலாம்.
எல்.ஐ.சி
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எனப்படும் எல்.ஐ.சி, கடந்த 1956-ல் ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு ரூ.38,04,610 கோடி. கடந்த 2020-21 நிதியாண்டில் மட்டும் ரூ.6,82,205 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. இதில், பிரீமியம் கணக்கில் மட்டும் வருவாயாக ரூ.4,02,844.81 கோடி வருமானம் பெற்றிருக்கிறது. இந்திய ஆயுள் காப்பீட்டுச் சந்தையில் முதன்மை நிறுவனமான மாறியிருக்கும் இந்தப் பொதுத்துறை நிறுவனத்தில் மூலம் தனிநபர் காப்பீடு எடுத்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 28.62 கோடி பேர். குழுக் காப்பீடாக 12 கோடி பேர் எடுத்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40.62 கோடி பேர். இப்படி உலகின் மிகப்பெரிய ஆயுள் காப்பீடு நிறுவனமாக இருக்கிறது எல்.ஐ.சி.
நாடு முழுவதும் 8 மண்டல அலுவலகங்கள், 113 கோட்ட அலுவலகங்கள், 2,048 கிளை அலுவலகங்கள், 1,546 துணை அலுவலகங்கள், 1,08,987 ஊழியர்கள் மற்றும் 13,53,808 முகவர்கள் என மிகப்பெரிய உள்கட்டமைப்பைக் கொண்டது.
எல்.ஐ.சி ஐபிஓ
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி-யின் 100% பங்குகளும் மத்திய அரசின் வசம் இருக்கின்றன. மொத்தமாக 6,32,49,97,701 பங்குகள் மத்திய அரசுக்குச் சொந்தமாக இருக்கின்றன. இதில், 4.99% அதாவது 31,62,49,855 பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது மத்திய அரசு. இதற்கான மசோதா கடந்த 2021 ஆகஸ்ட் 2-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மால சீதாராமன் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. 2021 டிசம்பருக்குள் ஐபிஓ கொண்டுவரப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கணக்கீடுகள் முடிவடையாத நிலையில் அதற்கான காலக்கெடு 2022 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. எல்.ஐ.சி பங்குகளை விற்பதன் மூலம் மட்டுமே மத்திய அரசுக்கு ரூ.50,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரையில் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்ப்பு ஏன்?
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி, பல்வேறு மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்திருக்கிறது. அரசு நிறுவனங்கள் திவாலாகும் சூழலில் காப்பற்றவும் முதல் ஆளாக ஓடோடி வந்திருக்கிறது. ஐடிபிஐ வங்கியை அப்படி ஒரு சூழலில் இருந்து நிதி முதலீடு செய்து காப்பாற்றியதும் எல்.ஐ.சிதான். இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை ஐபிஓ மூலம் தனியாருக்குத் தாரை வார்ப்பது அதன் நம்பகத்தன்மையையும் உள்கட்டமைப்பையும் மெதுவாக நொறுக்கிவிடும் என்பது, இதை எதிர்ப்பவர்களின் வாதமாக இருக்கிறது. அதேபோல், ஐபிஓ-வுக்குப் பிறகு முதலீட்டாளர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலையில் சேவை நோக்கிலிருந்து விலகி லாப நோக்கமாக மட்டுமே செயல்படும் நிறுவனமாக எல்.ஐ.சி மாறும் அபாயம் இருப்பதையும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். இதுவரை, சாலை, ரயில்வசதி போன்றவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த அந்த நிறுவனத்தின் நிதியை இனிமேல் பயன்படுத்தப்படாமல் போகலாம்.
மேலும், `தேசத்தின் சொத்து விற்கப்படுவது, இதுவரை எல்.ஐ.சி பின்பற்றி வந்த கொள்கைகள் சீர்குலையவும் வழிவகுக்கும். பணி வாய்ப்புகள் குறைக்கப்பட்டு அவுட் சோர்ஸிங் முறை அதிகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால், வேலை இழப்பு என்பது ஊழியர்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயமாகலாம்’ என்று அனைந்திந்திய எல்.ஐ.சி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேஷ் குமார் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில் கவலை தெரிவித்திருக்கிறார்.