sonu sood

சோனு சூட் – நிஜ ஹீரோவா.. மக்களுக்கு எப்படி உதவி செய்கிறார் அவர்?

கொரோனா பெருந்தொற்று சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டி வருகிறார் நடிகர் சோனு சூட். பெரிய அளவில் உதவி செய்துவரும் சோனு சூட்டுக்கு இந்த நிதி எங்கிருந்து வருகிறது?

சோனு சூட்

பஞ்சாப் மாநிலம் மோகாவில் 1973ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி பிறந்த சோனு சூட்டின் தந்தை சொந்தமாகத் தொழில் செய்துவருபவர், தாய் பள்ளி ஆசிரியை. மூத்த சகோதரி மோனிகா சூட் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். பள்ளிப் படிப்பை மோகாவில் முடித்த அவர், நாக்பூர் கல்லூரியில் பொறியியலில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். 1996-ல் சோனாலி என்பவரைத் திருமணம் செய்த சோனு, 1999-ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர், நெஞ்சினிலே, சந்தித்த வேளை, மஜ்னு என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். 2001-ம் ஆண்டு ஹேன்ட்ஸ் அப் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான அவர், தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான அருந்ததி படம் மூலம் பரவலாகக் கவனம் பெற்றார்.

உதவிக் கரம்

கொரோனா முதல் அலை பரவல் தீவிரமாக இருந்த 2020 மார்ச் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு உதவிகளைச் செய்துவந்தார். குறிப்பாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டு சொந்த ஊர் திரும்ப முடியாத ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். அதேபோல், மருத்துவ உதவியும் செய்துவந்தார். இதனால், சோனு சூட் பெயர் இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் புகழ்பெற்றது. சிறுவயது முதலே உதவி செய்ய வேண்டும் என்பது தனது ஆசை என்ற சோனு சூட், தொடர்ச்சியாக உதவிகள் செய்துவந்தார்.

குறிப்பாகத் தற்போதைய கொரோனா இரண்டாம் அலையில் அவர் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுவோருக்கு அதை ஏற்பாடு செய்வது, மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களின் சிகிச்சைகளுக்கு உதவுவது போன்றவைகளைச் செய்தார். குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், அவருக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து ஹைதராபாத் மருத்துவமனையில் சேர்த்தது தேசிய அளவில் கவனம் பெற்றது. அதேபோல், கிரிக்கெட்டர்கள் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்றோர் சோசியல் மீடியாவில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவி கேட்க, உடனடியாகக் களமிறங்கினார்.

Sonu Sood

ஒருபுறம் சோனு சூட் உதவி செய்துவரும் நிலையில், மற்றொருபுறம் தனியொரு நபராக அவர் உதவி செய்ய அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று மறுபுறம் விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து அவருக்கு நிதி வருவதாகவும் சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

சூட் அறக்கட்டளை

உதவிகள் செய்வதற்காகவே சூட் அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனத்தை சோனு சூட் நிறுவியிருக்கிறார். இந்த அறக்கட்டளைக்கு பாலிவுட் நடிகர்கள் தொடங்கி, தொழிலதிபர்கள் என பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். அந்த நிதியுதவி மூலம் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இந்த அறக்கட்டளைக்கு நிதியுதவி அளித்த பாலிவுட் நடிகை சாரா அலிகானை ஹீரோ என சோஷியல் மீடியாவில் புகழ்ந்திருந்தார் அவர்.

Sonu sood

அதேபோல், உதவிகள் தேவைப்படுவோருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்றவற்றை அளிக்க ரூ.10 கோடி தேவைப்பட்ட நிலையில், மும்பை ஜூஹூவில் இருக்கும் தனது சொத்துகள் சிலவற்றை அடமானம் வைத்தார் சோனு சூட். இதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அதைப்பற்றி பேசுவதில் தனக்கு விருப்பமில்லை என்று ஒதுங்கியிருக்கிறார். அதேபோல், சோனுவின் நெருங்கிய நண்பர் ஒருவர் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், `அவர், தனது சொந்தப் பணம் மூலமே உதவிகள் செய்துவருகிறார். மாறாக அவருக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாகச் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. சிறுவயது முதலே தொண்டுகள் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், பெற்றோரின் மறைவுக்குப் பிறகு அதைத் தீவிரமாகச் செய்துவருகிறார். அறக்கட்டளை மூலமும் மக்களுக்காக அவர் செய்துவரும் பணிகள் தொடரும்’’ என்று கூறியிருக்கிறார்.

Also Read – இந்தியாவின் டாப் 10 சோலோ யூ டியூப் கிரியேட்டர்ஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top