உலக வரைபடத்தில் சின்ன சிவப்புப் புள்ளியாகக் குறிப்பிடப்படும் சிங்கப்பூர், கடந்த 200 ஆண்டுகளில் தனது நிலப்பரப்பை 25% அதிகரித்திருக்கிறது. இது எப்படி சாத்தியமானது?
சிங்கப்பூர்
உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர், தொடக்கத்தில் பிரிட்டீஷ் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்தது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இது இன்னும் சிறிய நாடாக இருந்தது. மக்கள் தொகைப்பெருக்கம், பருவநிலை மாறுபாடு போன்ற காரணங்களால் நிலப்பரப்பை விரிவாக்கும் பணிகளை சிங்கப்பூர் செய்து வருகிறது. 1819-ல் 578 ச.கி.மீ என்றிருந்த சிங்கப்பூரின் பரப்பளவு இப்போது, 719 ச.கி.மீ ஆக பரந்துவிரிந்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் சிங்கப்பூர் அரசு எடுத்த நிலமீட்பு நடவடிக்கைகள்.

சிங்கப்பூரின் நிலமீட்பு
மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அவர்களுக்குப் புதிய வாழ்விடங்களை ஏற்படுத்தும் வண்ணம் சிங்கப்பூர் தொடர்ச்சியாக எல்லைகளை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் இன்று, நேற்று தொடங்கியதல்ல; முதல்முறையாக 1822-ம் ஆண்டிலேயே எல்லைகள் விரிவாக்கப் பணிகள் தொடங்கிவிட்டன. அப்போதைய பிரிட்டீஷ் அரசு இதைத் தொடங்கி வைத்தது.
1817-ல் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் சிங்கப்பூர் வந்தது. சிங்கப்பூரை நிர்வகித்து வந்த ஆங்கிலேயே அரச பிரதிநிதி ஸ்டாம்போர்டு ரஃபேல்ஸ், 1822 தொடக்கத்திலேயே சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் புதிய துறைமுகம் அமைக்கும் பணிகளைத் தொடங்கினார். ஆற்றின் வாய்ப்பகுதியில் இருக்கும் அந்தப் பகுதி இப்போது Boat Quay என்றழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் அந்தப் பகுதி மரங்களடர்ந்த சதுப்பு நிலப் பகுதியாக இருந்தது. அருகிலிருந்த மலையில் இருந்து மண் எடுக்கப்பட்டு, தாழ்வான நிலப்பகுதிகளை நிரப்பினர். மண் எடுக்கப்பட்டு தரைமட்டமான மலைப்பகுதி இப்போது மத்திய வணிக மாவட்டத்தின் Raffles Place என்றும், மண்ணால் நிரப்பப்பட்ட சதுப்பு நிலப்பகுதி Boat Quay என்றும் அழைக்கப்படுகின்றன. ஹோட்டல்கள், பார்கள் நிறைந்த இப்பகுதி சிங்கப்பூரின் இரவு வாழ்க்கைக்கு முக்கியமானது. 1800-களின் இறுதியில் Telok Ayer நிலமீட்புத் திட்டத்தின் கீழ் Collyer Quay பகுதியில் நிலப்பரப்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம், கடற்கரை ஓரத்தில் இருந்த Thian Hock Keng கோயில், Telok Ayer தெரு போன்றவை தாண்டியும் நிலப்பரப்பு விரிந்தது.

சுதந்திரத்துக்குப் பிறகான எல்லை விரிவாக்கம்
1940-கள் தொடங்கி 1960கள் வரை எல்லை விரிவாக்கப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. சிங்கப்பூரைப் பொறுத்தவரைக் கடந்த 200 ஆண்டுகளில், 1965-ம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகே நிலப்பரப்பு விரிவாக்கம் வேகம் பெற்றது. வணிக மற்றும் குடியிருப்பு தேவைகள் பெருகிய காலத்தில் இந்த நடவடிக்கை அத்திவாசியமானது. ஐம்பது ஆண்டுகளில் 138 ச.கி.மீ அளவுக்கு சிங்கப்பூரின் எல்லைகள் விரிவடைந்திருக்கின்றன. பருவநிலை மாறுபாட்டால் கடல் நீர் மட்டம் 6 அடி வரை உயரக் கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதனால், சிறிய தீவு நாடுகள் பலவும் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கடலில் இருக்கும் தீவு நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பசிபிக் கடலின் மத்தியில் இருக்கும் சிறிய நாடான கிரிபாட்டி, அங்கிருந்து ஆயிரம் மைல் தொலைவில் இருக்கும் பிஜியிடம் இருந்து 6,000 ஏக்கர் காட்டுப் பகுதியை விலைக்கு வாங்கியிருக்கிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்து அதனால் பிரச்னைகள் ஏற்படும் பட்சத்தில் தங்கள் நாட்டின் சுமார் ஒரு லட்சம் மக்களை அங்கு குடியேற்ற அந்நாடு திட்டமிட்டிருக்கிறது. அதேபோல், ஆஸ்திரேலியாவிடமிருந்து நிலப்பரப்பை விலைக்கு வாங்கும் பேச்சுவார்த்தையில் மாலத்தீவு அரசு ஈடுபட்டிருக்கிறது. தென் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் டுவாலு தீவுப் பகுதிகளை விட்டு மக்கள் தொடர்ச்சியாக வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள்.

வணிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிங்கப்பூர் அரசு, தங்களை ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனமாகவே தகவமைத்துக் கொண்டிருக்கிறது. சுமார் 60 லட்சம் மக்கள் வசிக்கும் சிங்கப்பூரில் இருக்கும் 90% ரியல் எஸ்டேட் அரசுக்கே சொந்தமானது. அருகிலிருக்கும் சின்னஞ்சிறு தீவுகளைத் திருத்தி மக்கள் வாழ ஏற்ற வகையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவது, அடிப்படை வசதிகள், வணிக வளாகங்களுடன் கூடிய மிகப்பெரிய கட்டுமானங்களை அந்நாடு தொடர்ச்சியாகக் கட்டி வருகிறது. சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகள் கடல்மட்டத்தில் இருந்து 50 அடி உயரத்திலேயே இருக்கிறது. அதேநேரம், அந்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி 16 அடியிலும் இருக்கின்றன. இதனாலேயே, கடற்கரையோரங்களில் அமைக்கப்படும் சாலைகளை உயரமாக அமைத்து வருகிறது அந்நாடு. விமான நிலையத்தையும் கடல் மட்டத்தில் இருந்து 18 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் பெய்துவரும் மழையின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது இருக்கும் நிலையிலேயே உலக வெப்பமயமாகும் நிகழ்வு தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில் அந்நாட்டின் பல பகுதிகள் நீரில் மூழ்கும் என்பதே நிதர்சனம்.
Also Read – கிரிப்டோ கரன்சி, பிட்காயின்… கான்செப்ட் என்ன – ஓர் எளிய அறிமுகம்!
0 Comments