Queen Elizabeth II மறைவு – இனி என்ன நடக்கும்… Operation London Bridge தெரியுமா?

இங்கிலாந்து அரசியாக 70 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இரண்டாம் எலிசபெத் ராணி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. ராணி மறைவுக்குப் பிறகு என்ன நடக்கும்… அரச குலத்திலும் அரசாங்கத்திலும் அடுத்த நடைமுறைகள் என்ன என்பதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப் போறோம்.

Queen Elizabeth II

இங்கிலாந்து மன்னராக இருந்த நான்காம் ஜார்ஜ் கடந்த 1952-ம் ஆண்டு உயிரிழந்தார். அவருக்குப் பின்னர் இங்கிலாந்து ராணியாக முடிசூடிக் கொண்ட அவரது மகள் இரண்டாம் எலிசபெத், கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் அந்தப் பதவியை அலங்கரித்தார். உலகில் நீண்டகாலம் ஆட்சிபுரிந்த ராணி என்கிற பெருமையையும் அவர் இதன்மூலம் பெற்றார். சமீபகாலமாகவே உடல் நலக் குறைவால் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர், ஸ்காட்லாந்தில் இருக்கும் இங்கிலாந்து அரச குடும்ப அரண்மனையில் செப்டம்பர் 8-ம் தேதி உயிரிழந்தார்.

Queen Elizabeth
Queen Elizabeth

மகாராணி எலிசபெத்தின் மறைவுக்குப் பின்னர் கடைபிடிக்க வேண்டிய புரோட்டாகால்கள் எனப்படும் நடைமுறைகள் குறித்து இங்கிலாந்து அரசு சில, பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு வந்தது. அந்தத் திட்டம் குறித்து கடந்த ஆண்டு Politico இதழில் தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரச குடும்பத்தில் பதவியில் இருக்கும் ஒருவர் உயிரிழந்தால் என்ன நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதை ‘Operation London Bridge’ என்கிற பெயரில் இங்கிலாந்து அரசு விதிகளை வகுத்து வைத்திருந்தது. பொலிட்டிகோ இதழில் வெளியான தகவல்களில், சிலவற்றை தற்போதைய சூழலுக்கு ஏற்ப இங்கிலாந்து அரசு மாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப் பின் பின்பற்றப்பட வேண்டிய புரோட்டாகால்கள் என்னென்ன?

Day Zero

மகாராணி மறைவு குறித்த தகவல் அரச குடும்பம் வாயிலாக அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். அவரது மகன் இளவரசர் சார்லஸ் உடனடியாக அரசராக அறிவிக்கப்படுவார். மூன்றாம் சார்லஸ் என்கிற பெயரோடு இங்கிலாந்து அரியணை ஏறுவார். அவரது மனைவி கமீலா, ராணியாவார். அவர்கள் இருவரும் மகாராணி எலிசபெத் மறைந்த பால்மோரல் அரண்மனையில் இரவு தங்குவர். இங்கிலாந்து கொடி நாடு முழுவதும் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். அதேபோல், இளவரசர் சார்லஸ் மற்றும் பிரதமர் லிஸ் டிரஸ் சார்பில் இரங்கல் செய்திகள் வெளியாகும். எலிசபெத் ராணிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மௌன அஞ்சலி முதல் ராணுவ மரியாதை வரை பல்வேறு இரங்கல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Queen Elizabeth
Queen Elizabeth

Day One

இளவரசர் சார்லஸ் லண்டன் திரும்புவார். பாரம்பரியமாக புனித ஜேம்ஸ் அரண்மனையில் The Accession Council எனப்படும் நிர்வாகக் கூட்டம் கூட்டப்படும். அரச குலத்தின் உயர் பதவியில் இருப்பவர் மறைந்த 24 மணி நேரத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் எலிசபெத் மகாராணியின் மறைவுச் செய்தி உறுதி செய்யப்பட்டு, அடுத்ததாக பட்டத்துக்கு வரும் சார்லஸின் அரச பதவி பற்றிய அறிவிப்பும் வெளியாகும். இங்கிலாந்து நாடாளுமன்றம் சார்பிலும் மகாராணிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவரது இறுதிச் சடங்கு முடியும்வரையில் கூட்டத் தொடரும் ஒத்திவைக்கப்படும்.

முதல் வாரம்

ஸ்காட்லாந்தில் இருந்து மகாராணி எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்குக் கொண்டு வரப்படும். பாரம்பரிய நடைமுறைப்படி உடலானது வெஸ்ட் மினிஸ்டருக்குக் கொண்டு செல்லப்படும். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் மூன்று நாட்கள் வைக்கப்படும். அங்கு, தினசரி 23 மணி நேரம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவர். லண்டனில் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ய ஏற்பாடுகள் நடக்கும் அதேநேரம், பாரம்பரிய வழக்கப்படி இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து அரண்மனையின் ஆளுகையின் கீழ் இருக்கும் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸ் மாகாணங்களுக்குப் பயணம் சென்று வருவார். உலகத் தலைவர் இங்கிலாந்தில் ராணிக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் கூடுவார்கள்.

Queen Elizabeth
Queen Elizabeth

பத்தாவது நாள்

வெஸ்ட் மினிஸ்டரில் ராணிக்கு இங்கிலாந்து அரச குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்படும். அந்த நேரத்தில் இங்கிலாந்து முழுவதும் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துவார்கள். இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு வின்ஸ்டர் அரண்மனையில் உள்ள புனித ஜார்ஜ் கல்லறையில், அவரது கணவர் இளவரசர் பிலிப் கல்லறை அருகே நல்லடக்கம் செய்யப்படுவார். இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் 2021-ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top