காமெடி கிங் டு உக்ரைன் அதிபர் – யார் இந்த விளாடிமீர் ஜெலன்ஸ்கி!

காமெடி நடிகராகத் தனது கரியரைத் தொடங்கி 42 வயதில் உக்ரைன் அதிபராக உயர்ந்த விளாடிமீர் ஜெலன்ஸ்கி-யின் இன்ஸ்பிரேஷனல் ஸ்டோரி தெரியுமா… ரீல் அதிபர் டு ரியல் அதிபரான அவரோட பயணத்தைப் பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

விளாடிமீர் ஜெலன்ஸ்கி

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி

சோவியத் யூனியன் ஒரு அங்கமாக இருந்த உக்ரைனின் Kryvyi Rih பகுதியில் 1978-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி பிறந்தவர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி(Volodymyr Oleksandrovych Zelenskyy). அப்பகுதியில் சிறுபான்மையினராக இருந்த யூத குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளி, கல்லூரி படிப்புகளை Kryvyi Rih நகரில் முடித்தார். சட்டப்படிப்பில் பட்டம்பெற்ற அவர், வழக்கறிஞர் பணி மேற்கொள்ளவில்லை. மாறாக, நாடகம், நடிப்பு என கலைத்துறையை நோக்கி பயணிக்கத் தொடங்கினார். சிறுவயது முதலே ரஷ்ய மொழியில் நிபுணத்துவம் பெற்ற இவர், பின்னாட்களில் உக்ரைன் மற்றும் ஆங்கில மொழிகளிலும் புலமையை வளர்த்துக் கொண்டார்.

சோவியத் யூனியனின் பழைய அங்கம் என்பதால், உக்ரைனில் ரஷ்ய – உக்ரைன் மொழி பேசும் மக்களிடையே பிரிவினை இயல்பாகவே இருக்கும். ஆனால், இரண்டு மொழிகளிலும் சரளமாக மேடையில் பேசும் அளவுக்கு வல்லமை பெற்ற ஜெலன்ஸ்கி, அந்த இடைவெளியைக் குறைத்தால் மட்டுமே நாட்டுக்கு நல்லது என்பதை சிறுவயதிலேயே உணர்ந்திருந்தார்.

Kvartal 95

kvartal 95 குழுவினரோடு
kvartal 95 குழுவினரோடு

நம்மூர் கலக்கப்போவது யாரு பாணியில் உக்ரைனில் பிரபலமான ஷோ KVN. தனது 17 வயதிலேயே அந்தப் போட்டியில் கலந்துகொண்டு கலக்கத் தொடங்கியிருக்கிறார் ஜெலன்ஸ்கி. இவரது காமெடிக்கு அப்போதே பெரும் வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. Zaporizhia-Kryvyi Rih-Transit குழுவில் இணைந்து அந்த போட்டியில் 1997-ம் ஆண்டு வென்றிருக்கிறார். அது, உக்ரைன் மட்டுமல்லாது ரஷ்யாவிலும் இவருக்குப் புகழைப் பெற்றுத் தந்தது. இந்த வெற்றிக்குப் பின்னர், 1998-ம் ஆண்டு வாக்கில் Kvartal 95 என்ற குழுவை உருவாக்கி ரஷ்யா உள்ளிட்ட பழைய சோவியத் யூனியன் நாடுகளில் காமெடி நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்டவற்றை நடத்தத் தொடங்கியிருக்கிறார்.

காமெடி, நாடகங்களில் இருந்து மெதுவாக டிவி ஷோக்களை Kvartal 95 குழு 2003 வாக்கில் தயாரிக்கத் தொடங்கியது. அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்த ஜெலன்ஸ்கி, உக்ரைனின் பிரபலமான 1+1 சேனலுக்காக நிகழ்ச்சிகளைத் தயாரிக்கத் தொடங்கினார். அந்த காலகட்டத்தில் உக்ரைன் கலாசாரத் துறை, ரஷ்ய மொழி பேசும் கலைஞர்களுக்குத் தடை விதித்தது. இந்தத் தடைக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்தார். அதன்பின்னர், Inter என்ற சேனலுக்கு இடம்பெயர்ந்தது இவரது குழு. அந்த சேனலின் முக்கியமான பொறுப்பில் இரண்டு ஆண்டுகள் இருந்த இவர், Love in the Big city சீரிஸ் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

Servant of People

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி

இவரது கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய டிவி ஷோ Servant of People. 2015-ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை உக்ரைன் மீடியாக்களில் பிரைம் டைம் விவாதம் தொடங்கி டிரெண்ட் வரை அதிகம் இடம்பிடித்தது இந்த ஷோதான். கதைப்படி, தனது 30-களின் இறுதியில் இருக்கும் உயர்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரியராக ஜெலன்ஸ்கியின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஊழலுக்கு எதிராகக் கடுமையாகப் பேசிவரும் அந்த ஆசிரியர் கேரக்டரின் ஒரு வீடியோ தேசிய அளவில் வைரல் கண்டெண்டாகவே, அவர் உக்ரைனின் அதிபராகி விடுவார். அதிபரான பின்னர் ஊழலை ஒழிக்க பல்வேறு இடையூறுகளுக்கு இடையே அந்த வரலாற்று ஆசிரியர் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளை அந்தத் தொடர் பேசியிருக்கும். அந்தத் தொடர் மூலம் உக்ரைனின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த ஜெலன்ஸ்கி, அவநம்பிக்கைகளால் துவண்டு கிடந்த உக்ரைன் மக்களுக்கு புது நம்பிக்கையூட்டினார்.

ரியல் அதிபர்

2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி 1+1 சேனலில் ஒளிபரப்பான Kvartal 95 குழுவின் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பெட்ரோ போரோஷோன்கோ (Petro Poroshenko) அழைக்கப்பட்டிருந்தார். அவரது புத்தாண்டு உரையும் இடம்பெற்றிருந்த அந்த நிகழ்ச்சியிலேயே அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதற்கு முன்பு எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாத ஜெலன்ஸ்கி, தனது பேமஸ் ஷோவான Servant of People பெயரிலேயே கட்சியையும் தொடங்கினார். 2019 தேர்தலில் அவர் போட்டியிடுவதாக அறிவிப்பதற்கு முன்பே, பல கருத்துக்கணிப்புகளும் அதிபராக ஜெலன்ஸ்கிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே முடிவுகளை வெளியிட்டிருந்தன.

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி

2019 தேர்தலில் தனது Kvartal 95 குழுவுடனேயே பயணித்த அவர், ஊழல் எதிர்ப்புப் பிரசாரத்தைப் பிரதான கொள்கையாக முன்வைத்தார். தேர்தல் பிரசாரத்தில் மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களைத் தவிர்த்த அவர், உக்ரைனின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக சோசியல் மீடியாக்கள் வழியாக வாக்காளர்களிடம் உரையாடினார். குறிப்பாக, இன்ஸ்டாகிராம், யூ டியூபில் வெளியிடப்பட்ட ஜெலன்ஸ்கியின் வீடியோக்கள் கோடிக்காண வியூஸ்களைப் பெற்றது. நம்மூர் அரசியல் களத்தைப் போல் அல்லாமல் இவருக்கு சோசியல் மீடியாவில் வரவேற்புக் கொடுத்த உக்ரைன் மக்கள், 2019 அதிபர் தேர்தலில் பெருவாரியான வெற்றியை ஜெலன்ஸ்கிக்கு அளித்தனர். அந்தத் தேர்தலில் அவர் சாதாரண வெற்றியை அவர் பதிவு செய்யவில்லை. மொத்த வாக்குகளில் சுமார் 73% வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியோடு, உக்ரைனின் 6-வது அதிபராக அவர் 2019-ல் பதவியேற்றார்.

பதவியேற்றவுடன் நாட்டு மக்களிடம் அவர் ஆற்றிய முதல் உரையில், அரசு அலுவலகங்களில் எனது போட்டோவை வைக்க வேண்டாம் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அதற்குப் பதிலாக உங்கள் குழந்தைகளின் போட்டோக்களை வையுங்கள். அவற்றைப் பார்க்கும் ஒவ்வொருமுறையும் நாட்டுக்கு இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் உங்களுக்கு ஏற்படும்’ என்று கூறி ஆச்சர்யப்படுத்தினார் 42 வயது இளம் அதிபரான விளாடிமீர் ஜெலன்ஸ்கி. தற்போதைய ரஷ்யாவின் திடீர் தாக்குதலின்போது கூட ஜெலன்ஸ்கியைப் பத்திரமாக வெளியேற்ற உதவுவதாக அமெரிக்கா கூறியதை மென்மையாக மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன பதில், ’நாம் எல்லாம் இங்கேதான் இருக்கிறோம். எங்கள் ராணுவமும் இங்குதான் இருக்கிறது. என் மக்கள் இங்குதான் இருக்கிறார்கள். நமது நாட்டையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க நாம் இங்கு இருந்தபடியே போரிடுவோம். அது அப்படியே இருக்கட்டும்’ என்று போல்ட் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார்.

Also Read – வலிமை படத்தின் வில்லன் கேங் – ரியல் Satan’s Slaves பத்தி தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top