செவ்வாய் கிரகத்துல இருந்து ஒரு கிலோ அளவுக்கு மண்ணை பூமிக்கு எடுத்துவர நாசா மூன்று மிஷன்களைத் திட்டமிட்டிருக்கிறது. அதற்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா… அந்த செலவுதான் ஒரு கிலோ செவ்வாய் கிரகத்துக்கு மண்ணை பூமியில் விலை உயர்ந்த பொருளா மாத்துது.
அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா, சிவப்பு கிரகமான செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து மண்ணை சேமித்து பூமிக்குக் கொண்டுவர முடிவு செய்து, அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஒரு வேளை செவ்வாய் கிரகத்து மண் பூமியில் லேண்ட் ஆனால், உலகின் விலை உயர்ந்த பொருள் அதுவாகத்தான் இருக்கும். செவ்வாய் கிரகத்தில் இருந்து 2 பவுண்ட் (சுமார் ஒரு கிலோ) அளவு மண்ணை பூமிக்கு எடுத்துவர நாசா மூன்று மிஷன்களை செயல்படுத்துகிறது. அந்த மண்ணை வைத்து செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு, இதற்கு முன்னர் உயிர்கள் இருந்தனவா போன்ற பல விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட இருக்கிறது.
செவ்வாய் கிரகத்து மண் ஏன் காஸ்ட்லி?
செவ்வாய் கிரகத்து மண்ணை பூமிக்கு எடுத்து வரும் நாசாவின் 3 மிஷன்களுக்கு ஆகும் செலவுதான் காஸ்ட்லிக்குக் காரணம். மூன்று மிஷன்களுக்கும் சேர்த்து நாசா போட்டிருக்கும் பட்ஜெட் 9 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் கொஞ்சம் அதிகம் (தோராயமாக ரூ.65.55 ஆயிரம் கோடி) மக்களே!.
முதல் மிஷனின் நோக்கம் செவ்வாயின் மேற்பரப்பில் இருக்கும் மண் மாதிரிகளை சோதிப்பது மற்றும் அதை சேகரிப்பது. இரண்டாவது மிஷன் மண் மாதிரிகளை சேகரிப்பதுடன் ஒரு லாஞ்சரில் அதை பாதுகாப்பாக வைக்கும். மூன்றாவது மிஷன் அதை பூமிக்குக் கொண்டு வரும். இந்த 3 தொடர்ச்சியான மிஷன்களின் தொடக்கமாகக் கடந்த 2020 ஜூலையில் பெர்சவரன்ஸ் ரோவர் விண்ணில் ஏவப்பட்டது. அது, வெற்றிகரமாக கடந்த பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்தில் லேண்ட் ஆனது. பெர்சவரன்ஸ் ரோவர் தற்போது செவ்வாய் கிரகத்தின் ஜெசீரோ கார்ட்டர் பகுதியில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கிறதா என ஆய்வு செய்துகொண்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த ஏரியே ஜெசீரோ கார்ட்டர் பகுதி என்று நம்பப்படுகிறது. ஒரு இடத்தில் தண்ணீர் இருப்பதே, அந்தப் பகுதியில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான மிகச்சரியான சான்றாக இருக்க முடியும். அதனாலேயே தண்ணீர் இருந்ததாக நம்பப்படும் அந்தப் பகுதியில் முகாமிட்டு பெர்சவரன்ஸ் ரோவர் ஆய்வு செய்து வருகிறது. பெர்சவரன்ஸ் ரோவரில் இருக்கும் கேமராக்கள் மட்டுமே 20 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் மதிப்புடையவை.
நாசாவின் கூற்றுப்படி 2023ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் இருந்து மண்ணை சேகரிக்க முடியும். ஆனால், அதை பூமிக்குக் கொண்டுவர அதன்பிறகு பத்தாண்டுகளுக்கு மேல் ஆகும் என்கிறார்கள். 2கே கிட்ஸ் காலம் முடியுறதுக்குள்ள செவ்வாய் கிரகத்துல மனிதர்கள் இருந்தாங்களா இல்லையா என்கிற கேள்விக்கு நாசா நிச்சயம் விடை சொல்லும்னு நம்புவோம்.
Also Read – Perseverance: நாசாவின் மார்ஸ் ரோவரைக் கட்டுப்படுத்துவது யார் தெரியுமா?