உலக அளவில் இ-கமர்ஸ் உள்ளிட்ட பல துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் அமேசா நிறுவனத்தை நிறுவியதும், அதன் தற்போதைய செயல் அதிகாரியுமாக இருப்பவர்தான் ஜெஃப் பெசோஸ். சகோதரர் மார்க்குடன் இணைந்து ஜூலை 20-ம் தேதி விண்வெளிக்கு டிரிப் அடிக்க இருக்கிறார் ஜெஃப்.
யார் இந்த ஜெஃப் பெசோஸ்
ஜெஃப்ரி பிரஸ்டன் ஜோர்ஜென்ஸன் (Jeffrey Preston Jorgensen) என்ற இயற்பெயருடைய ஜெஃப், அமெரிக்காவின் நியூமெக்ஸிகோவில் இருக்கும் அல்பக்கிர்க்யூ பகுதியில் 1964-ம் ஆண்டு ஜனவரி 12-ல் பிறந்தார். இவர் பிறந்தபோது தந்தை தியோடர் ஜோர்ஜென்ஸனுக்கு 19 வயது. தாய் ஜாக்லின் 17 வயதே ஆன பள்ளி சிறுமி. கஷ்டப்பட்டு பள்ளிப்படிப்பை முடித்த ஜாக்லின், மாலைநேர கல்லூரியில் சேர்ந்து படித்தார். குழந்தையாக இருந்த ஜெஃப்பைத் தன்னுடன் வைத்துக் கொள்வதற்காக அந்த வகுப்பில் அவர் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு ஜெஃபின் தந்தை ஜோர்ஜென்ஸனை விவாகரத்து செய்த ஜாக்குலில், கியூபாவில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்திருந்த மிகைல் மைக் பெசோஸை 1968ல் திருமணம் செய்துகொண்டார். மைக் பெசோஸ், 4 வயது சிறுவனாக இருந்த ஜெஃப்ரி ஜோர்ஜென்ஸனைத் தத்தெடுத்துக் கொண்டார். அதன்பின்னரே அவரது சர் நேமும் பெசோஸ் என்று மாறியது. அதன்பிறகு அவர்களது குடும்பம் டெக்ஸாஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்தது.
ஜெஃப்பின் தாய்வழித் தாத்தாவான லாரன்ஸ் பிரெஸ்டன் ஜீஸ், அமெரிக்க அணுசக்தித் துறையில் மண்டலத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுக்குப் பின்னர், டெக்ஸாஸின் கூட்லா பகுதியில் 25,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யும் பண்ணையை உருவாக்கினார். ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளும் வளர்க்கப்பட்ட அந்தப் பண்ணையில்தான் இளம் வயதில் ஜெஃப் பெசோஸ் விடுமுறை நாட்களைக் கழித்தார். பள்ளி, கல்லூரியில் முதன்மை மாணவராகத் திகழ்ந்த ஜெஃப், அமெரிக்காவில் அறிவியலையும் கலையையும் புரமோட் செய்யும் மிகப்பழமையான மாணவர் கம்யூனிட்டியான பி பேட்டா கப்பாவின் (Phi Beta Kappa) உறுப்பினராக இருந்தார். விண்வெளியில் மனிதர்கள் வசிக்க காலனிகளை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசினார் ஜெஃப் பெசோஸ்.
அமேசான் எனும் ஆலமரம்
1986-ல் கல்லூரியில் பட்டம்பெற்ற பிறகு அவருக்கு இன்டெல், பெல் லேப்ஸ், ஆண்டர்ஸன் கன்சல்டிங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் வேலைக்கான ஆஃபர் கிடைத்தது. ஆனால், அவர் தேர்வு செய்தது டெலி கம்யூனிகேஷன் ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருந்த பிடெல் என்ற நிறுவனத்தை. அதன்பின்னர் வங்கிப் பணியில் சேர்ந்த ஜெஃப், அமெரிக்க பங்குச்சந்தை இருக்கும் வால் ஸ்ட்ரீட்டிலும் சிறிதுகாலம் பணியாற்றினார். 1993-ல் ஆன்லைனில் புத்தகம் விற்கும் நிறுவனமாக அமேசானைத் தொடங்க எண்ணிய ஜெஃப், பங்குச் சந்தை நிறுவனமான டி.இ.ஷா நிறுவனத்தில் இருந்து விலகினார். அதன்பின்னர், 1994-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் கராஜில் அமேசான் நிறுவனத்தைத் தொடங்கினார். அவர் தொடங்கிய நிறுவனத்துக்கு முதலில் Cadbra என்று பெயரிட்டிருந்த நிலையில், ஆல்ஃபெட்டின் முதல் எழுத்தான `A’-யில் தொடங்கும் தென்னமெரிக்க நதியான அமேசானின் பெயரை நிறுவனத்துக்கு சூட்டினார். 1998-ல் புத்தக விற்பனை மட்டுமல்லாது ஆடியோ, வீடியோ விற்பனை பிரிவிலும் கால்பதித்தது அமேசான்.
2002ம் ஆண்டு அமேசானின் அட்சயபாத்திரமாக இருக்கும் அமேசான் வெப் சர்வீஸஸ் பிரிவைத் தொடங்கினார் ஜெஃப். ஆனால், அதே ஆண்டு மற்றொரு பெரிய பிரச்னையில் அவர் சிக்கினார். பொருளாதாரரீதியான பிரச்னைகளால் வருமானம் குறைந்த நிலையில், அமேசான் நிறுவனம் கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால், அந்த நிறுவனத்தின் டிஸ்ட்ரிபியூஷன் செண்டர்களை மூடிய ஜெஃப், மொத்த ஊழியர்களில் 14% பேரை பணிநீக்கம் செய்தார். ஒரு வழியாக அந்த சூழலில் இருந்து மீண்ட அமேசான், 2003ம் ஆண்டு மட்டும் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை லாபமாக ஈட்டியது. 2007-ல் அமேசான் கிண்டில் சேவையைத் தொடங்கிய ஜெஃப், 2013ம் ஆண்டு அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் 600 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அமேசான் வெப் சர்வீஸுக்காகப் பெற்றார். அதே ஆண்டில் அமேசான் வெப்சைட், உலகின் மிகப்பெரிய இ-கமர்ஸ் தளமாக அங்கீகாரம் பெற்றது. அமேசானின் அசுர வளர்ச்சி ஜெஃப் பெசோஸை உலகின் பணக்கார மனிதராக மாற்றியது. மைக்ரோசாஃப் இணை நிறுவனர் பில்கேட்ஸை முந்தி உலகின் பணக்கார மனிதராக முதல்முறையாக 2017ம் ஆண்டு ஜூலை 27-ல் அறிவிக்கப்பட்டார். அப்போது 90 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் கொஞ்சம் கூடுதலாக இருந்த அவரது சொத்து மதிப்பு நவம்பர் 2017-ல் 100 பில்லியனைத் தாண்டியது. 2018 மார்ச் கணக்குப்படி அவரது சொத்து மதிப்பை 112 பில்லியன் என்று கணக்கிட்டுச் சொன்னது ஃபோர்ப்ஸ் இதழ்.
சீனாவைச் சேர்ந்த அலிபாபா இ-கமர்ஸ் தளத்தின் வளர்ச்சி, ஜெஃப் பெசோஸின் கவனம் இந்தியா மீது திரும்ப முக்கியக் காரணமானது. இந்திய மார்க்கெட்டில் கால்பதிக்க நினைத்த அவர், அமேசானின் வைஸ் பிரசிடண்ட் அமித் அகர்வாலை 5.5 பில்லியன் முதலீட்டுடன் இந்தியாவுக்குக் கடந்த 2018 மார்ச்சில் அனுப்பி வைத்தார். அமேசான் நிறுவனத்தின் சப்ளை செயினை வலுப்படுத்துவதிலும் உள்ளூர் வியாபாரத்தைப் பெருக்குவதிலும் அமித் அகர்வால் மூலம் பிரமாண்ட முயற்சிகளை மேற்கொண்டார். 2017ல் மட்டும் அமெரிக்காவில் 1,30,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டதாக அமேசான் சொன்னது. ஆனால், பார்ட் டைம் வொர்க்கர்ஸையும் சேர்த்து அமேசான் கணக்குக் காட்டுகிறது என அமெரிக்க செனட்டரான பெர்னி சாண்டர்ஸ் உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். அதேபோல், வரி கட்டும் விஷயத்தில் அமேசான் பல்வேறு தில்லு முல்லு வேலைகளைச் செய்வதாக 2018-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். இந்த விமர்சனத்தால் அமேசானின் பங்குகள் 9% அளவுக்கு பங்குச் சந்தையில் ஆட்டம் கண்டன. இன்றைய சூழலில் உலக அளவில் பெரும் பணக்காரராக இருக்கும் ஜெஃப் பெசோஸ், அமேசான் நிறுவனத் தலைமை பொறுப்பில் இருந்து ஜூலை 5-ம் தேதி விலகப் போவதாக அறிவித்திருக்கிறார்.
அதன்பின்னர், தனது விண்வெளிக் கனவை நிறைவேற்ற உருவாக்கிய ப்ளூ ஆர்ஜின் நிறுவனப் பணிகளில் அவர் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது. ஜூலை 20-ம் தேதி ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் சார்பில் விண்வெளிக்குப் போகும் ராக்கெட்டில் சகோதரர் மார்க்குடன் சேர்ந்து பறக்க இருக்கிறார் ஜெஃப் பெசோஸ். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நோக்கில் கடந்த 2000-ம் ஆண்டு ஜெஃப் தொடங்கியதுதான் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம்.
Also Read – ஒன் செகண்ட் டிராஃபிக் முதல் மோட்டோ வரை… கூகுள் பற்றி இந்த 9 சுவாரஸ்யங்கள் தெரியுமா?