பாப்லோ எஸ்கோபர்

Pablo Escobar: 35 வயதில் உலகின் 7-வது கோடீஸ்வரன்; போதைப் பொருள் கடத்தல் மன்னன்- யார் இந்த பாப்லோ எஸ்கோபர்?

1980 – 1990களின் தொடக்கம் வரை கோகைன் போதைபொருள் கடத்தலில் கொடிகட்டிப் பறந்த கொலம்பிய கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார். 1989-ல் உலகின் 7-வது கோடீஸ்வரன் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்ட பின்னரே இவரைப் பற்றி உலகம் தெரிந்துகொண்டது… யார் இந்த பாப்லோ எஸ்கோபர்.. வரலாற்றின் பணக்கார, அதேசமயம் இரக்கமற்ற கடத்தல்காரனாக அவர் உருவெடுத்தது எப்படி?

பாப்லோ எஸ்கோபர்

கொலம்பியாவின் ரியோநெர்கோ பகுதியில் ஏழை விவசாயியான ஏபெல் டி எஸ்கோபர் – தொடக்கப் பள்ளி ஆசிரியையான ஹெர்மில்டா காவிரோ பெரியோ தம்பதியின் ஏழு குழந்தைகளின் மூன்றாவது குழந்தையாக 1949 டிசம்பர் 1-ம் தேதி பிறந்தவர் பாப்லோ எஸ்கோபர். டீனேஜிலேயே குற்றசெயல்களில் ஈடுபடத் தொடங்கிய பாப்லோவுக்கு, தனது 22 வயதில் ஒரு மில்லியன் கொலம்பிய டாலர்களைச் சேர்த்து பெரிய பணக்காரனாக வேண்டும் என்பது சிறுவயது லட்சியமாக இருந்திருக்கிறது. அவருக்கு 26 வயது முடிந்தபோது, அவரது வங்கிக் கணக்கில் 100 மில்லியன் கொலம்பிய டாலர்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள்.

பாப்லோ எஸ்கோபர்
பாப்லோ எஸ்கோபர்

ஏழை விவசாயி மகனான பாப்லோ, உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னனாக மாறியது எப்படி?

தொடக்க காலம்

பாப்லோ எஸ்கோபரின் சகோதரான ராபர்டோ எஸ்கோபரின் `The Accountant’s Story’ அவரின் வளர்ச்சி குறித்து விரிவாகப் பேசுகிறது. தொடக்க காலங்களில் தனது நண்பன் ஆஸ்கருடன் இணைந்து ஆள் கடத்தல், கார் திருட்டு, போலி லாட்டரி சீட்டுகள், சிகரெட் விற்பது போன்ற நடவடிக்கைகளில் பாப்லோ ஈடுபட்டிருக்கிறார். 1975-க்குப் பிறகு கொகைன் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடத் தொடங்கிய அவர், கார்லோஸ் லெடருடன் இணைந்துMedalin Cartel’ என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலை உருவாக்கியிருக்கிறார்.

கோகோ இலைகளில் இருந்து பல்வேறு கடுமையான நடைமுறைகளைப் பின்பற்றி பவுடர் வடிவில் உருவாக்கப்படுவது கொகைன் போதைப்பொருள். சர்வதேச சந்தையில் மிகப்பெரிய மதிப்பு கொண்ட கொகைனை அமெரிக்காவுக்குள் முதல்முதலில் கடத்திக் கொண்டுபோய் விற்பனை செய்யும் தொழிலில் 1980கள் தொடங்கி 1990களின் தொடக்கம் வரை மெடலின் கார்ட்டல் கொடிகட்டிப் பறந்தது. கொலம்பியாவில் இருந்து பனாமவுக்குத் தொடர்ச்சியாக விமானங்கள் மூலம் டன் கணக்கில் கொகைனை இவரது கடத்தல் கும்பல் கடத்தியது.

அமெரிக்காவில் தொடர்ச்சியாக கொகைன் தேவை அதிகரிக்கத் தொடங்கவே, ஈகுவடார் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் இருந்து கொகைனின் மூலப்பொருளை கொலம்பியா கொண்டுவந்து, அதை பவுடராக்கி அமெரிக்காவுக்குக் கடத்தத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் மெடலின் கார்ட்டலின் வார வருமானம் மட்டுமே 423 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இன்றைய மதிப்பில் தோராயமாக ரூ.31,69,21,75,200) அளவுக்கு எகிறியிருக்கிறது.

பாப்லோ எஸ்கோபர்
பாப்லோ எஸ்கோபர்

கொகைன் சாம்ராஜ்யம்

1976-ல் ஈகுவடாரில் இருந்து 18 கிலோ கொகைன் பேஸ்டோடு கொலம்பியா வந்த பாப்லோ கைது செய்யப்படுகிறார். லஞ்சம் கொடுத்து வழக்கிலிருந்து அவர் தப்ப முயன்ற நிலையில், அது முடியாமல் போனது. இதையடுத்து, தன்னைக் கைது செய்த இரண்டு அதிகாரிகள், விசாரணை நீதிபதி என வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர். இதனால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து கொலம்பிய அரசாங்கம் பாப்லோவின் லஞ்சப் பணத்தில் ஊறித் திளைத்தது. அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் வருவதைத் தடுக்க அந்நாட்டு அரசு எடுத்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.

பஹாமஸில் இருந்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்கும் தெற்கு ஃபுளோரிடாவின் மிகச்சிறிய விமான நிலையங்களில் மெடலின் கார்ட்டலின் கொகைன் டன் கணக்கில் வந்திறங்கின. ரேடாரில் இருந்து தப்ப அந்த விமானங்கள் மிகவும் தாழ்வாகப் பறந்தன. இதற்காக தெற்கு ஃபுளோரிடாவில் இருந்து 350 கி.மீ தொலைவில் இருக்கும் பஹாமஸின் நார்மன்ஸ் கே என்ற தீவின் பெரும்பாலான பகுதிகளை மெடலின் கார்ட்டல் விலைக்கு வாங்கியது. அங்கிருக்கும் வீடுகள், ஹோட்டல்கள், மதுபானக் கூடங்கள், குறிப்பாக ஒரு கிலோ மீட்டர் நீள விமான ஓடுபாதை உள்ளிட்டவைகள் விலைக்கு வாங்கப்பட்டன. அங்கு மிகப்பெரிய அளவில் குளிர்சாதன வசதிகொண்ட கொகைன் கிடங்கு நிர்மாணிக்கப்பட்டது. அங்கிருந்து 24 மணி நேரமும் அமெரிக்காவுக்கு விமானங்கள் பறந்தபடி இருந்தன. விமானங்கள் மட்டுமல்லாது நீர்மூழ்கிக் கப்பல்கள் வழியாகவும் அமெரிக்காவுக்குள் கொகைன் இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

பணம் கொழித்த போதைப்பொருள் கடத்தல்

தென் அமெரிக்க நாடுகளில் ஒரு கிலோ கொகைனை உற்பத்தி செய்ய 1,000 டாலர்கள் செலவான நிலையில், அவை அமெரிக்க சந்தைகளில் 70,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது. உலக அளவில் தீவிரவாதக் குழுக்களுக்குப் போதைபொருள் கடத்தல் மூலம் பெரிய அளவுக்கு பணம் ஈட்ட முடியும் என்று பாடமெடுத்தது பாப்லோ. ஒரு கட்டத்தில் கொலம்பியாவின் மெடலின் நகரில் இருக்கும் ஒவ்வொருமே பாப்லோவுக்காக வேலை செய்துகொண்டிருக்கும் நிலை ஏற்பட்டது. 1986-ல் கொலம்பிய நாடாளுமன்ற உறுப்பினரானார் பாப்லோ. 1989-ல் உலகின் ஏழாவது பணக்காரராக பாப்லோவை ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டது. இது உலக அளவில் பாப்லோவின் பெயர் பிரபலமடையக் காரணமாகியது. அதுவரை பெரிதாக வெளியில் தெரியாத பாப்லோவின் மெடலின் கார்ட்டல் பற்றிய விவாதம் சர்வதேச நாடுகள் மத்தியில் ஏற்பட்டது. அமெரிக்க அரசின் மோஸ்ட் வாண்டட் லிஸ்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார் பாப்லோ.

பாப்லோ எஸ்கோபர்
பாப்லோ எஸ்கோபர்

பாப்லோவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என அந்நாடு முயற்சித்த நிலையில், லஞ்ச லாவண்யத்தில் திளைத்த கொலம்பிய அரசு பாப்லோவின் கைப்பாவையாக மாறிப்போனது. பாப்லோவுக்கு ஆதரவாக கைதிகளை நாடு கடத்துவதற்கு எதிராக கொலம்பிய நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது. அமெரிக்க சிறைகளில் உயிரிழப்பதை விரும்பாத பாப்லோ, இறுதி மூச்சு வரை கொலம்பியாவை விட்டு வெளியேற மாட்டேன் என்று சூளுரைத்தார்.

அதிபர் வேட்பாளர் கொலை

போதைப் பொருள் கடத்தலுக்குத் தடையாக இருப்பவர்களை லஞ்சம், கடத்தல் அல்லது கொலை என இந்த மூன்று முறைகளில் மெடலின் கார்ட்டல் எதிர்க்கொண்டது. கொலம்பிய போலீஸ் தலைமையகம், உச்ச நீதிமன்றம் என அரசின் முக்கிய இடங்கள் உள்பட பல இடங்களில் இந்த கும்பல் வெடிகுண்டுத் தாக்கல் நடத்தியிருக்கிறது. சுமார் 4,500 பேரின் மரணத்துக்கு பாப்லோ காரணமாக இருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. ஒருபுறம் வன்முறை, ரத்தம் என இயங்கிக் கொண்டிருந்தாலும் உள்ளூரில் தனது இமேஜை வேறுவிதமாகக் கட்டமைக்க விரும்பிய பாப்லோ, புறநகரில் குடிசைப் பகுதி மக்களுக்காக வீடு கட்டிக் கொடுத்தல், போராளிக் குழுக்களுக்கு நிதியுதவி, கால்பந்து மைதானங்கள், பள்ளிகள் உள்ளிட்டவைகளையும் கட்டிக் கொடுத்தார்.

தொடக்கத்தில் கொலம்பிய அரசு பாப்லோவுக்கு ஆதரவாக இருந்தாலும், அவருக்கு எதிரான கலகக்குரல் கனன்றுகொண்டே இருந்தது. குறிப்பாக, 1990 கொலம்பிய அதிபர் தேர்தலில் போட்டியிட்ட லூயிஸ் கார்லோஸ் கலான், வெளிப்படையாகவே பாப்லோவை எதிர்த்தார். குற்றவாளியான பாப்லோவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். இந்தசூழலில், 1989 ஆகஸ்ட் 18-ல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த கலான், துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டார். பாப்லோ எதிர்ப்பில் முக்கியமானவரான கொலம்பிய சட்டத்துறை அமைச்சர் ரோட்ரிகோ லாரா என்பவரும் படுகொலை செய்யப்பட்டார்.

ல கதீட்ரல்
ல கதீட்ரல்

இந்த விவகாரத்தை அடுத்து கொலம்பிய அரசுக்கு எழுந்த சர்வதேச அழுத்தத்தால் பாப்லோவைக் கைது செய்ய அரசு முயன்றது. இதனால், தலைமறைவான பாப்லோ, ஒரு கட்டத்தில் அரசோடு சமாதானம் பேசினார். தன்னை அமெரிக்காவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று நிபந்தனை விதித்த அவர், மெடலின் புறநகர் பகுதியில் தனக்குத் தானே கட்டிக் கொண்ட La Catedral என்று சொகுசு சிறையில் ஐந்து ஆண்டுகள் அடைபட்டுக் கொள்வதாக அரசை சமாதானப்படுத்தினார். சிறை என்று அடையாளப்படுத்தப்பட்ட அந்த காம்பவுண்டில் கால்பந்து மைதான, பொம்மை அருங்காட்சியகம், மதுபானக்கூடம் என பல்வேறு வசதிகள் இருந்ததால், ஹோட்டல் எஸ்கோபர் அல்லது மெடலின் கிளப் என்றும் அழைக்கப்பட்டது. அதேபோல், மெடலின் நகரில் இருக்கும் தனது மகளோடு போனில் பேசுகையில் அவரது வீட்டைப் பார்க்கும் வகையில் டெலஸ்கோப் வசதியும் பாப்லோவுக்காக இந்தக் கட்டடத்தில் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல்கள் ஊடகங்களில் கசிந்த நிலையில், 1992 ஜூலையில் அவரை சாதாரண சிறைக்கு மாற்ற கொலம்பிய அரசு முயற்சித்தது. ஆனால், இதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட பாப்லோ, 1992 ஜூலை 22-ல் லா கதீட்ரல் வளாகத்தில் இருந்து தப்பினார்.

பாப்லோ எஸ்கோபர்
பாப்லோ எஸ்கோபர்

பாப்லோ எஸ்கோபர் – இறுதிக் காலம்

பாப்லோ தப்பிய பின்னர், அவரைப் பிடிப்பதற்காக சிறப்பு அதிரடிப் படையை அமெரிக்கா கட்டமைத்தது. அத்தோடு, அவரின் எதிரிகள் ஒன்றுகூடி Los Pepes என்ற அமைப்பையும் நிறுவினர். இவர்கள் பாப்லோவுக்கு எதிரான வன்முறையைக் கையிலெடுத்தனர். மெடலின் கார்ட்டலுக்கு எதிராக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கலி கார்ட்டல் உள்ளிட்ட கும்பல்கள் இவர்களுக்கு நிதி உதவி அளித்தன. இவர்கள் பாப்லோவுக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள் என 300-க்கும் மேற்பட்டோரைக் கொன்று குவித்தனர். மெடலின் புறநகர்ப் பகுதியில் பதுங்கியிருந்த பாப்லோ, தனது 44-வது பிறந்தநாள் முடிந்த மறுநாள் 1993 டிசம்பர் 2-ல் கொலம்பிய போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உலக வரலாற்றில் பணக்கார கிரிமினலாகக் கருதப்படும் பாப்லோ எஸ்கோபர் வாழ்வு குறித்து பல்வேறு திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் வெளிவந்திருக்கின்றன. நெட்ஃபிளிக்ஸில் வெளியான நார்கோஸ் வெப் சீரிஸ் அந்த வகையில் ரொம்பவே பேமஸானது.

Also Read – ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு ஏற்படுத்திய முருங்கை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top