ரோட்டரி கிளப் – மாவட்டம் 3232
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இவான்ஸ்டோன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரோட்டரி கிளப், உலகம் முழுவதும் 200 நாடுகளில் 14 லட்சம் உறுப்பினர்களோடு செயல்படுவது. ரோட்டரி கிளப்பின் 3232 மாவட்டமானது சென்னையை மையப்புள்ளியாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதன் கவர்னராகக் கடந்த ஜூலை 1-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட Dr.என்.நந்தக்குமார், நாம் வாழும் சென்னை பயன்பெறும் வகையிலும், இந்த சமூக முன்னேற்றத்துக்காக மிகவும் பயனுள்ள திட்டங்களை செயல்படுத்த விரும்புகிறவர். 170-க்கும் மேற்பட்ட ரோட்டரி கிளப்புகளுடன் 8,000-த்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு செயல்படும் ரோட்டரி கிளப் சென்னையில் எடுக்கும் முன்னெடுப்புகள் பரவலாக மக்களுக்குப் பயனளிக்கும். ஒரு முன்மாதிரியான சமுதாயத்தை உருவாக்குவதற்காக ரோட்டரி கிளப் கவனம் செலுத்தும் 7 முக்கியமான விஷயங்களில் முதன்மையானது அமைதியைக் கட்டமைப்பது மற்றும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதாகும் (Peace Building and Conflict Resolution). ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கத்தின்போது ரோட்டரி கிளப் முக்கியமான பங்காற்றியது என்பது ஒவ்வொரு உறுப்பினரும் பெருமை கொள்ளும் விஷயமாகும்.
நீடித்த அமைதி நிலைக்க ரோட்டரி கிளப் கவனம் செலுத்தும் மற்ற 6 விஷயங்கள் – நோய் பரவலைத் தடுத்தல் மற்றும் சிகிச்சை அளித்தல், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான சூழல் இருப்பதை உறுதிப்படுத்தல், பெண்களுக்கான மகப்பேறு ஆரோக்கியம் மற்றும் குழந்தை நலனை மேம்படுத்துதல், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி அளிப்பதை உறுதி செய்தல், சமூகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உறுதுணையாக இருத்தல் ஆகியவையாகும்.
புராஜக்ட் ஐக்கியம்
சென்னை காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் போர் நினைவுச் சின்னத்தில் ஜூலை 9-ம் தேதியன்று புராஜக்ட் ஐக்கியம் நிகழ்வு நடைபெற்றது. சர்வதேச ரோட்டரி கிளப்பின் மாவட்டம் 3232-ன் அமைதி கட்டமைத்தல் மற்றும் மோதல் தடுப்புக் குழுவின் முன்னெடுப்பாகும். இது கவர்னர் Dr.என்.நந்தகுமாரின் சீரிய வழிகாட்டுதலின்கீழ் நடந்தது. நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதில் முக்கியமான பங்காற்றும் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்போடு புதிய ரோட்டரி ஆண்டைத் தொடங்கிய நல்லதொரு நிகழ்வாக அமைந்தது. நாட்டுக்காகத் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு RI Dist 3232 சார்பில் போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக இந்த நிகழ்வில் பல்வேறு புனித நூல்களில் இருந்து வாசகங்களும் வாசிக்கப்பட்டன. ரோட்டரி மாவட்டம் 3232-ஐச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ரோட்டரி கிளப்பின் மாவட்ட ஆலோசகர் ஐ.எஸ்.ஏ.கே.நாஸர், மாவட்டப் பயிற்சியாளர் ஜி.சந்திரமோகன், மாவட்ட கவர்னர் Dr.என்.நந்தகுமார் உள்ளிட்டோர் போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
உலகம் முழுவதும் அமைதியைப் பேணுவதிலும், மோதல் தடுப்பிலும் ரோட்டரி கிளப்பின் துடிப்பான முன்னெடுப்புகள் பற்றி மாவட்ட கவர்னர் உரையாற்றினார். உலக அளவில் அமைதி ஏன் முக்கியம் என்பதிலும் அதை நிலைநாட்டுவதில் ரோட்டரி கிளப் எந்த அளவுக்கு முனைப்போடு பங்கெடுத்துக் கொள்கிறது என்பது பற்றியும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். மோதல், வன்முறை மற்றும் மனித உரிமை மீறல் போன்ற சம்பவங்களால் உலகம் முழுவதும் 7 கோடி பேர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பாதிப்பேர் குழந்தைகளாவார். மோதல்தான் வாழ்க்கை என்பதை எந்தவொரு ரோட்டரி உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குப் புரிதலை ஏற்படுத்தவும், மோதல்களுக்கான தீர்வை ஏற்படுத்தும் திறமைமிக்க ஒரு சமுதாயத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் ரோட்டரி கிளப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு மனிதாபிமான அமைப்பாக, அமைதி என்பதுதான் ரோட்டரி கிளப்பின் முக்கியமான நோக்கம். தங்கள் சமூகத்தில் அமைதியை ஏற்படுத்த மக்கள் உழைக்கத் தொடங்கினால், அந்த மாற்றம் உலக அளவில் மாற்றத்தைக் கொண்டு வரும் ரோட்டரி உறுப்பினர்கள் நம்புகிறோம். அமைதி நிலவுவதற்கான சூழலை ரோட்டரி கிளப் ஏற்படுத்திக் கொடுக்கும்.
இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக தக்ஷின பாரத் கமாண்டிங் ஆபிஸர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் YSM, SM, VSM கலந்துகொண்டார். போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்திய அவர், RI District 3232-ன் ரோட்டரி உறுப்பினர்களின் பணியை வெகுவாகப் பாராட்டினார். குறிப்பாக கொரோனா பெருந்தொற்று சூழலில் சரியான சமயத்தில் ரோட்டரி கிளப் செய்த உதவிகளை சுட்டிக்காட்டினார். அதேபோல, போர் நினைவுச் சின்னத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்த அவர், இந்த நாட்டின் குடிமக்களின் கோயிலான இந்த நினைவிடத்துக்கு ஒவ்வொருவரும் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவரது உரை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
Rotary District 3232-ன் அமைதியை கட்டமைத்தல் குழுவின் தலைவர் Rtn உஷாராணி கண்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மேலும், இந்த நிகழ்வை 45 ரோட்டரி கிளப்கள் இணைந்து நடத்தின.