பருவநிலை மாறுபாடு காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவது சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 இந்திய நகரங்களுக்கு ஆபத்தாக முடியும் என அமெரிக்க விண்வெளி மையமான நாசா எச்சரித்திருக்கிறது.
பருவநிலை மாறுபாடு என்பது எதிர்பார்த்ததை விட வேகமாக நிகழ்ந்து வருவதாக பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச குழு (IPCC) சமீபத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பித்திருந்தது. ஐபிசிசி அமைப்பு பூமியின் பருவநிலை மாறுபாடு குறித்து 1988-ல் இருந்து ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அதன் சமீபத்திய அறிக்கை இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
ஐபிசிசி ஆய்வறிக்கையை வைத்து இந்தியாவில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பகுப்பாய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, மும்பை, சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 12 இந்திய நகரங்கள் இந்த நூற்றாண்டின் முடிவில் கடலில் 3 அடி அளவுக்கு மூழ்கும் அபாயம் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
சென்னை, தூத்துக்குடி!
பருவநிலை மாறுபாட்டால் கடல் நீர் மட்டம் உயர்வது ஆசிய நாடுகளில் மிக வேகமாக நிகழ்ந்து வருவதாக ஐபிசிசி அறிக்கை எச்சரிக்கை செய்திருக்கிறது. முன்னர் 100 ஆண்டுகளில் நடந்த மாறுபாடுகள் என்பது 2050-ம் ஆண்டு வாக்கில் 6 முதல் 9 ஆண்டுகளில் நிகழும் என்கிறது அந்த அறிக்கை. குறிப்பாக, இந்திய கடலோரப் பகுதிகளில் இருக்கும் நகரங்களில் இதனால் பெரிய அளவில் பாதிப்பு நிகழும் என்று நாசாவின் பகுப்பாய்வு சொல்கிறது.
கடல்நீர் மட்டம் உயர்வதால் தாழ்வான கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும். கடற்கரையோரப் பகுதிகளில் கடல் அரிப்பு, கடல் கொந்தளிப்பு உள்ளிட்ட விளைவுகள் ஏற்படும். 2006 – 2018 காலகட்டத்தில் உலக அளவில் இதனால், 3.37 மி.மீ அளவுக்கு கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இமயமலையில் பனிமூடிய பகுதியான இந்துகுஷ் மலைப்பகுதிகளின் உயரமான இடங்களில் பனிப்போர்வையின் அடர்த்தி குறைந்து வருவதோடு, உயரமும் குறைந்து வருகிறது என்கிறார் ஐபிசிசி ஆய்வறிக்கைக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ண அச்சுத ராவ்.
இதன்படி இந்த நூற்றாண்டு முடிவில் கீழ்க்காணும் 12 இந்திய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நாசா எச்சரித்திருக்கிறது.
- காண்ட்லா (குஜராத்) – 1.87 அடி
- ஓக்ஹா (குஜராத்) – 1.96 அடி
- பாவ் நகர் (குஜராத்) – 2.70 அடி
- மும்பை (மகாராஷ்டிரா) – 1.90 அடி
- மோர்முகாவ் (கோவா) – 2.06 அடி
- மங்களூர் (கர்நாடகா) – 1.87 அடி
- கொச்சி (கேரளா) – 2.32 அடி
- பாரதீப் (ஒடிசா) – 1.93 அடி
9 . கிதிர்பூர் (மேற்குவங்கம்) – 0.49 அடி
- விசாகப்பட்டினம் (ஆந்திரா) – 1.77 அடி
- சென்னை (தமிழ்நாடு) – 1.87 அடி
- தூத்துக்குடி (தமிழ்நாடு) – 1.9 அடி.
Also Read – R.Velraj: அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் – யார் இந்த ஆர்.வேல்ராஜ்?