“ராம்நாடு இருக்கு… ஒரத்த நாடு இருக்கு.. இப்படி எத்தனையோ நாடு இருக்கு. நல்லா போய்க்கிட்டிருக்க தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும்’’ என கொங்கு நாடு குறித்த கேள்விக்கு நடிகர் வடிவேலு பதிலளித்திருக்கிறார்.
சமீபகாலமாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருக்கும் நடிகர் வடிவேலு இன்று முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் பங்களிப்பையும் முதல்வரிடம் நேரில் அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் வடிவேலு. அவர் கூறுகையில், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் மக்கள் போற்றக்கூடிய ஆட்சியாக இது இருக்கிறது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், உலகமே உற்றுநோக்கும் வகையில் கொரோனா பரவலைத் தமிழகத்தில் கட்டுப்படுத்தியிருக்கிறார். இன்னும் சிலர் மாஸ்க் போடாமால் சுற்றுகிறார்கள். கேட்டால்,
நம்ம உடம்புலாம் தேக்குண்ணே’னு சொல்லிக்கிட்டு திரியுறாங்க. எந்த தேக்கையும் கொரோனா அரிச்சுடும்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்’’ என்றதுடன் அல்வா வாசுவுடன் தான் நடித்த கிளினிக் காமெடி ஒன்றையும் வடிவேலு நினைவுபடுத்திப் பேசினார்.
அவரிடம் தமிழகத்தைப் பிரித்து கொங்கு நாடு என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட இருப்பதாக சமீபகாலமாக பேச்சு நிலவுகிறதே என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அந்தக் கேள்விக்கு தனக்கே உரிய பாணியில் பதிலளித்த வடிவேலு, `ஒரத்த நாடுனு ஒரு நாடு இருக்கு. ராம்நாடுனு இருக்கு. இன்னும் இப்படி எத்தனையோ நாடுகள் பெயர் இருக்கு. அப்படி எல்லா நாட்டையும் பிரிச்சு கொடுத்துட்டா தமிழ்நாடு என்னத்துக்கு ஆகுறது? நல்லா இருக்க தமிழ்நாட்டைப் பிரிக்காதீர்கள். நாடு, நாடுனு தனியாகப் பிரித்தால் என்ன ஆவது? நான் அரசியல் பேசலை. இதெல்லாம் கேட்கும்போது தலையே சுத்துது.. விட்ருங்க’’ என்று பதிலளித்தார்.
Also Read – சின்னத்தம்பி – லாஜிக் இல்லா மேஜிக் திரைக்கதை!