ADMK Paper ad

பிரசாரத்தின் கடைசி நாள் விளம்பரங்கள்… அ.தி.மு.க ஏற்படுத்திய சர்ச்சை!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரம் 4-ம் தேதி மாலை 7 மணிக்கு முடிவடைந்தது. இந்தநிலையில், தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில் அ.தி.மு.க சார்பில் தமிழகத்தின் முக்கிய நாளிதழ்களின் கொடுக்கப்பட்டிருந்த 4 பக்க விளம்பரங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.

முக்கிய நாளிதழ்களின் முதல் நான்கு பக்கங்களையும் அலங்கரித்திருந்த விளம்பரத்தின் முதல் மூன்று பக்கங்களிலும், அது விளம்பரம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அத்தோடு, ஒவ்வொரு பக்கத்தின் கீழும், இப்பக்கங்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் யாவும் பல்வேறு செய்தித்தாள்களிலும் இணைய செய்தித் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்பட்டவை. எதுவும் கற்பனை அல்ல’ என்ற குறிப்பும் இடம்பெற்றிருந்தது. நான்காவது பக்கத்தைப் புரட்டினாலே அது அ.தி.மு.க கொடுத்த விளம்பரம் என்பது தெரிந்தது. அதில்,பொதுநலன் கருதி வெளியிடுவோர் அ.தி.மு.க’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பல்வேறு செய்திகளையும் தொகுத்து செய்தித்தாள் போன்றே வடிவமைக்கப்பட்டிருந்தன அந்த விளம்பரங்கள்.

விளம்பரம் என்று குறிப்பிடாமல் செய்திகளைப் போன்றே வெளியிடப்பட்டிருந்த அந்த விளம்பரங்கள் தமிழகத்தின் பாரம்பரிய செய்தித்தாள்களின் முதல் பக்கத்திலேயே இடம்பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாளிதழ் விளம்பரஙகளின் தரம் தாழ்ந்துபோய்விட்டனவா என்ற பலமுனையிலிருந்தும் எதிர்க்குரல்கள் எழுந்திருக்கின்றன.

அ.தி.மு.க-வின் நாளிதழ் விளம்பரங்கள்

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் உதயநிதியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து பேசுகையில், “தோல்வி பயத்தில் அ.தி.மு.க தலைவர்கள் உளறி வருகிறார்கள். அ.தி.மு.க ஆட்சிக்குத் தக்க பதிலடி கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். வெற்றியைத் தடுக்கும் வகையில் தி.மு.க மீது குறைகூறி பத்திரிகைகளில் அ.தி.மு.க விளம்பரம் செய்துள்ளது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க-வினர் செய்த குற்றங்கள் குறித்து எந்த விளம்பரமும் இல்லை. நம் மீது தவறு இருந்தால், அது தொடர்பாக வழக்குப் போட்டிருக்கிறார்களா? ஒரு வழக்காவது இருக்கிறதா? நிரூபிக்கப்பட்டிருக்கிறதா?

அ.தி.மு.க-வின் நாளிதழ் விளம்பரம்

விளம்பரங்கள் மூலம் மக்களை திசைதிருப்ப முடியாது. தி.மு.க-வை அச்சுறுத்தவே எனது மகள் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது அதைப்பற்றி சிந்திக்காதவர்கள், நினைக்காதவர்கள் இப்போது தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இப்படி ஒரு விளம்பரத்தைக் கொடுத்து மக்களைத் திசைதிருப்ப நினைக்கிறார்கள். அந்த விளம்பரத்தைப் பார்த்தால் ஏதோ விளம்பரம் போல அமைக்கப்படவில்லை. இன்றைக்கு நேற்றைக்கு நடந்த செய்தியைப் போல வெளியிட்டிருக்கிறார்கள். யாராவது விவரம் தெரியாதவர்கள் படித்தால், அதை செய்தியாகத்தான் பார்ப்பார்கள். விளம்பரமாகப் பார்க்க மாட்டார்கள். இந்த விளம்பரங்கள் அவர்களின் உண்மையான முகத்தைக் காட்டிவிட்டது’’ என்று விமர்சித்திருந்தார். இந்த விளம்பரம் மூலம் அ.தி.மு.க முகாம் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top