கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது அ.தி.மு.க. வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை என முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்திருக்கிறார். 2017-ல் என்ன நடந்தது?
கொடநாடு கொலை, கொள்ளை!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே கொடநாட்டில் இருக்கும் எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ல் ஒரு மர்ம கும்பல் புகுந்தது. காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்துவிட்டு எஸ்டேட் பங்களாவில் இருந்து பல்வேறு பொருட்களைத் திருடியதாகப் புகார் பதிவானது. இந்த கொலை, கொள்ளையில் மூளையாக சயான், கனகராஜ் செயல்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். ஜெயலலிதா உயிரிழந்த நிலையில், சசிகலாவும் சிறையில் இருந்ததால், கொள்ளையடிக்கப்பட்டது என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

கொள்ளை சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்து, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் கார் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தார். சயானும் கார் விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் இருந்து அவர் உயிர் தப்பினார். ஆனால், அவரது மனைவி விபத்தில் உயிரிழந்தார். அதேபோல், கொடநாட்டின் சிசிடிவி பொறுப்பாளராக இருந்தவர் தற்கொலை செய்துகொண்டார். அடுத்தடுத்து நடந்த மரணங்கள் தமிழகத்தை அதிரவைத்தன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன்பிறகு, சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சமீபத்தில் சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைத்தது. உதகை நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது.

ஜாமீனில் வெளிவந்த சயானிடம் நீதிமன்ற அனுமதியோடு நீலகிரி மாவட்ட எஸ்.பி தலைமையிலான போலீஸார் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். போலீஸாரிடம் சயான் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
பேரவையில் சலசலப்பு!

நடந்து வரும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை அ.தி.மு.க எழுப்பியது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்புத் தெரிவித்தது அ.தி.மு.க. பேரவைக் கூட்டத்தொடர் நடந்துவரும் கலைவாணர் அரங்குக்கு வெளியே தரையில் அமர்ந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். கொடநாடு வழக்கில் தம்மை சிக்கவைக்க சதி நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தி.மு.க வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார். உதகை நீதிமன்றத்திலும் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தி.மு.க வழக்கறிஞர்கள் ஆஜராகினர். கொடநாடு வழக்கில் மறுவிசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர்களும் குற்றவாளிகளும் இணைந்து செயல்படுகின்றனர். கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் வாக்குமூலம் அடிப்படையில் என் பெயரை சேர்க்க முயற்சி நடக்கிறது. கொலை, கொள்ளை, போதை மருந்து வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தி.மு.க அரசு ஆதரவு கொடுப்பது ஏன்’’ என்று செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.

இதுபற்றிய கேள்விக்கு பேரவையில் பதிலளித்த முதலமைச்சர்மு.க.ஸ்டாலின், “கொடநாடு கொலை, கொள்ளை விசாரணையைப் பொறுத்தவரையில், தேர்தல் காலத்தில் கொடுத்திருந்த வாக்குறுதியைத்தான் இந்த அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதே தவிர, வேறல்ல. நள்ளிரவில் நடைபெற்ற அந்தக் கொள்ளை சம்பவத்திலே, அடுத்தடுத்து நடைபெற்றிருக்கக் கூடிய மரணங்கள், விபத்து மரணங்கள் போன்றவை மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனால்தான், அந்தக் கொள்ளை, கொலை வழக்குகள் விசாரிக்கப்பட்டு, உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று ஏற்கனவே நாங்கள் தேர்தல் நேரத்திலேயே வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்.
அதனடிப்படையிலே, முறைப்படி நீதிமன்றத்திலே அனுமதி பெற்றுதான் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசியல் நோக்கத்தோடு அல்ல. ஆகவே, அரசியல் தலையீடோ, பழிவாங்குகிற எண்ணமோ நிச்சயம் இல்லை. விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அதிலே கிடைக்கக் கூடிய தகவலின் அடிப்படையில், நிச்சயமாக உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர, வேறு யாரும் இதற்கு அச்சப்பட வேண்டிய பயமோ, அவசியமோ இல்லை’’ என்று விளக்கமளித்திருக்கிறார்.
Also Read – எம்.எல்.ஏ உதயநிதிக்கு வரிசையாக வந்து வணக்கம் சொன்ன அமைச்சர்கள்… பேரவை சர்ச்சை!