OPS EPS

ADMK: 23 அமைச்சர்கள்; 45 எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு… 3 அமைச்சர்களுக்கு `நோ’ சொன்ன அ.தி.மு.க!

171 தொகுதிகளுக்கான அ.தி.மு.க இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக முடித்திருக்கும் ஆளும் அ.தி.மு.க, பா.ம.க-வுக்கு 23, பா.ஜ.க-வுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது. அந்தந்த கட்சிகளுக்கான தொகுதிகளையும் இறுதி செய்து ஒதுக்கியிருக்கும் அ.தி.மு.க, 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 5-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இதுதவிர, ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சண்முகநாதன், நிலக்கோட்டையில் தேன்மொழி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்

இந்தநிலையில், 171 பேர் கொண்ட இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டிருக்கிறது. அதில், 23 அமைச்சர்கள், 45 எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் கே.பி.முனுசாமி வேப்பனப்பள்ளி தொகுதியிலும், ஆர்.வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் களமிறங்குகின்றனர். தற்போதைய அமைச்சர்கள் மூன்று பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. போன தேர்தலில் வாணியம்பாடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில், சிவகங்கையிலிருந்து தேர்வு செய்யப்பட்ட கதர் மற்றும் கிராமத் தொழில் வாரிய அமைச்சர் ஜி.பாஸ்கரன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏவான பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அ.தி.மு.க வெளியிட்டுள்ள 171 பேர் பட்டியலில் 12 பேர் முன்னாள் எம்.பிக்கள், 14 பேர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 12 பேர் முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆவர்.

மீண்டும் போட்டியிடும் 23 அமைச்சர்கள்

அமைச்சர் பாண்டியராஜன் – ஆவடி

அமைச்சர் பென்ஜமின் – மதுரவாயல்

அமைச்சர் கே.சி.வீரமணி – ஜோலார்பேட்டை

அமைச்சர் கே.பி.அன்பழகன் – பாலக்கோடு

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் – ஆரணி

அமைச்சர் சரோஜா – ராசிபுரம் (தனி)

அமைச்சர் தங்கமணி – குமாரபாளையம்

அமைச்சர் கே.சி.கருப்பணன் – பவானி

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் – கோபிச்செட்டிப்பாளையம்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி – தொண்டாமுத்தூர்

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் – உடுமலைப்பேட்டை

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் – திண்டுக்கல்

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் – கரூர்

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் – திருச்சி கிழக்கு

அமைச்சர் எம்.சி.சம்பத் – கடலூர்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் – வேதாரண்யம்

அமைச்சர் காமராஜ் – நன்னிலம்

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் – விராலிமலை

அமைச்சர் செல்லூர் ராஜூ – மதுரை மேற்கு

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – திருமங்கலம்

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி – ராஜபாளையம்

அமைச்சர் கடம்பூர் ராஜூ – கோவில்பட்டி

அமைச்சர் ராஜலெட்சுமி – சங்கரன்கோவில் (தனி)

அ.தி.மு.க நிர்வாகிகள்

இந்தப் பட்டியலில் ஒரே ஒரு அமைச்சர் மட்டும் தொகுதி மாறி போட்டியிடுகிறார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகாசித் தொகுதியிலிருந்து போட்டியிட்ட பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்த முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியை பா.ஜ.க கேட்டுவந்தது. பா.ஜ.க சார்பில் அந்தத் தொகுதியில் நடிகை கௌதமி தேர்தல் வேலைகள் பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க-வின் 171 வேட்பாளர்களில் 14 பேர் பெண் வேட்பாளர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top