அணில்

அணில்களால் மின் தடை ஏற்படுமா… உண்மை என்ன?

திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டுகள் அடிக்கடி ஏற்படும் என்ற கருத்து மக்கள் மத்தியில் பொதுவாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு கரண்ட் கம்பிகளில் அணில் ஓடுவதால் மின்வெட்டு ஏற்படுகிறது என பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், `#அணில்தான்காரணம்’ என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், உண்மையில் அமைச்சர் பேசியது என்ன? அணில்களால் மின்வெட்டு ஏற்படும் வாய்ப்பு உள்ளதா? என்பதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

மின்கம்பங்களின் மீது இருக்கும் மரங்கள்
மின்கம்பங்களின் மீது இருக்கும் மரங்கள்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் மின்வெட்டு தொடர்பாக பேசும்போது, “ஆங்காங்கே மின்வெட்டுகள் உள்ளன என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பிட்டு இந்த இடங்களில் மின்வெட்டு இருக்கிறது என்று சொன்னால் அதற்கான நடவடிக்கைகள் ஏற்படும். தேர்தலால் முந்தைய ஆட்சியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகளை சரியாக செய்யவில்லை. இதனை நான் குற்றச்சாட்டாக சொல்லவில்லை. அந்த பராமரிப்பு பணிகளை செய்யணும். கொரோனா நோய்த்தொற்றால் மக்கள் வீடுகளில் இருப்பதால் அவர்களுக்கு மின்வெட்டு இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். சில இடங்களில் செடிகள் வளர்ந்து மின்கம்பிகளில் மோதும்போது அதில் அணில்கள் ஓடுகின்றன. அப்போது இரண்டு லைன் ஒன்றாகி மின்தடை ஏற்படுகின்றன. இதுபோன்ற நிலைமைகள் வரும்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மற்றபடி ஊரடங்கு முடியும்வரை பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 100 சதவிகித மின்தடைகள் இனி இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

“செடிகள் வளர்ந்து மின்கம்பிகளில் மோதும்போது அதில் அணில்கள் ஓடுகின்றன. அப்போது இரண்டு லைன் ஒன்றாகி மின்தடை ஏற்படுகின்றன” என்று அமைச்சர் கூறியது திரிக்கப்பட்டு “அணில்கள்தான் மின்வெட்டுக்கு காரணம்” என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாகப் பரவ ஆரம்பித்தன. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி – விஞ்ஞானம்…. விஞ்ஞானம்! சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?” என்று ட்வீட் செய்திருந்தார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை – அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட  சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன். அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் ராமதாஸ் அவர்கள் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்! அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்! பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள். எந்த சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று! திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்!” என்று தெரிவித்திருந்தார்.

அணில்களால் மின்வெட்டு ஏற்படும் சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகளவில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த தேர்தலில் வாக்குப் பதிவின்போது கோபி செட்டிபாளையம் பகுதியில் அணில் ஒன்று டிரான்ஃபார்மரில் சிக்கி மின்தடை ஏற்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. அணில்களால் மின்தடை ஏற்படுவது உலக அளவில் முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது. எனவே, அமைச்சர் செந்தில்பாலாஜி அணில்களாலும் மின்தடை ஏற்படும் என எடுத்துக்காட்டாக குறிப்பிட்டு பேசியது உண்மைதான். ஆனால், வீடியோவில் அவர் உண்மையாக பேசியது திரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Also Read : Revenge Shopping என்றால் என்ன… எதைக் குறிப்பிடுகிறார்கள்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top