தேசிய கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதி தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் கோட்டையாகக் கட்டியெழுப்பிய அறிஞர் அண்ணா, தமிழகத்தின் முதல்வராக இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார். காஞ்சிபுரத்தில் எளிமையான நெசவுக் குடும்பத்தில் நடராசன் – பங்காரு தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1969ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி உயிரிழந்தார். பெரியாருடன் இணைந்து அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கிய அண்ணா, இறுதிவரை திராவிடக் கொள்கைகள் மீது தீராப் பற்றுக் கொண்டிருந்தார். அரசியல் தவிர்த்து இலக்கியம், சினிமா, எழுத்து என பல்துறை வித்தகராக விளங்கிய அண்ணாவின், `மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கம் பிரபலமானது.
-
1 ஆரம்பகாலம்
அண்ணாவுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுத்தவர் அவரது சிற்றன்னை ராசாமணி அம்மையார். காஞ்சிபுரம் நகராட்சியில் ஆறு மாதங்கள் எழுத்தராகப் பணியாற்றிய அண்ணா, பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். 1930ல் ராணி அம்மையாரை எளிமையான திருமண நிகழ்வில் கரம்பிடித்தார். எம்.ஏ முடித்து சென்னை கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆறு மாதங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
-
2 முதல் தேர்தல்
1935ம் ஆண்டு திருப்பூர் செங்குந்தர் மாநாட்டில் பெரியாரை முதன்முதலாகச் சந்தித்த அண்ணா, அதே ஆண்டில் சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பெத்துநாயக்கன்பேட்டையில் இருந்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அண்ணா வெற்றிபெறவில்லை. 1937ல் ராஜாஜி அறிவித்த கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடி பெரியார் உள்பட சுயமரியாதை இயக்கத்தினர் 1,200 பேருடன் சிறையிலடைக்கப்பட்டார் அண்ணா.
-
3 பெரியாருடன் கருத்து வேறுபாடு
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் விடுதலையடைந்ததாக அறிவித்தபோது, அதை பெரியார் ஏற்கவில்லை. தற்போது கிடைத்திருப்பது அரசியல் விடுதலை மட்டுமே, சமுதாய விடுதலையே உண்மையான விடுதலை என்று கூறி அந்த நாளை துக்க நாளாக அணுசரிக்க பெரியார் அறிவித்ததற்கு அண்ணா உடன்படவில்லை. அதேபோல், தேர்தல் அரசியலில் பெரியார் ஈடுபாடு காட்டாத நிலையில், புதிதாக திராவிட முன்னேற்றக் கழகத்தை 1949ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் தோற்றுவித்தார் அண்ணா. அப்போது பேசிய அண்ணா, `தி.மு.க தோன்றிவிட்டது. திராவிடர் கழகத்துக்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான். திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கை மீதேதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கை, கருத்துகளில் மோதல் - மாறுதல் எதுவும் கிடையாது’ என்று அறிவித்தார்.
-
4 தி.மு.க ஆட்சி
முதல்முறையாக தமிழக சட்டமன்றத்துக்குள் 1957ம் ஆண்டியேலேயே அடியெடுத்துவைத்த தி.மு.க சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என அந்த ஆண்டு மே 7-ம் தேதி தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால், அது வெற்றிபெறவில்லை. 1962 தேர்தலில் தி.மு.க 50 இடங்களில் வெற்றிபெற்றது. இருப்பினும் காஞ்சிபுரத்தில் அண்ணா அடைந்த தோல்வியால் அக்கட்சியினரால் அதைக் கொண்டாட முடியாத சூழல். அதே ஆண்டில் மாநிலங்களவை எம்.பியானார் அண்ணா.
நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா, `நான் திராவிட மரபுவழி வந்தவன். என்னைத் திராவிடன் எனக் கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். இதற்குப் பொருள் நான் வங்காளிகளுக்கோ, குஜராத்தியருக்கோ, மராட்டியர் முதலானவர்களுக்கோ எதிரானவன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் கூறியதுபோல் மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன்தான்’’ என்று பேசினார். அதன்பிறகு 1967ல் நடைபெற்ற நான்காவதுப் பொதுத்தேர்தலில் 138 இடங்களில் தி.மு.க வென்று அண்ணா முதல்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்புவரை கடவுள் ஆணையாக என்று கூறி பதவியேற்கும் மரபு நடைமுறையிலிருந்த நிலையில், அதை மாற்றி `உளமார’ என்று கூறி தி.மு.க உறுப்பினர்கள் பதவியேற்றனர். 1967 ஜூலை 18-ல் சென்னை மாகாணத்தின் பெயர் தமிழ்நாடு என மாற்றப்பட்டு, அதற்கான சட்டத்தை அண்ணா கொண்டுவந்தார். -
5 கின்னஸ் சாதனை
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அண்ணா, அமெரிக்கா சென்று சிகிச்சையெடுத்துக் கொண்ட பின்னர் 1968ல் நாடு திரும்பினார். உடல் நலக்குறைவால் 1969ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா மறைந்தார். அவர் மறைவு செய்தியறிந்து நாலாபுறங்களிலிருந்து மக்கள் சென்னை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். இதற்காக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 7,000 லாரிகளில் மக்கள் சென்னை நோக்கி வந்தனர். மவுண்ட் ரோடு (இன்றைய அண்ணா சாலை), கதீட்ரல் சாலை, எட்வர்ட் எலியட்ஸ் சாலைகளின் வழியாக 6 கி.மீ தூரம் நடந்த இறுதி ஊர்வலத்தில் சுமார் 1.5 கோடி பேர் கலந்துகொண்டனர். மக்கள் வெள்ளத்தால் தலைவர்கள் பலர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.
ராஜாஜியால் அவரது வீட்டை விட்டே வெளியே வரமுடியவில்லை. ஊர்வலத்தில் காமராஜரின் காலில் காயம் ஏற்பட்டது. மெரினாவில் கம்பர் சிலைக்குப் பின்புறம் அண்ணாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 15 நிமிடங்கள் மட்டுமே நடந்த இறுதிச் சடங்கில் அண்ணாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பேழை மீது அரிசியையும் பூக்களையும் அவரது மனைவி ராணி அண்ணாதுரை தூவினார். முழு ராணுவ மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அண்ணாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் உணர்சிவயத்துடன் காணப்பட்ட அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் கருணாநிதி, `அண்ணா வாழ்க’ என்று முழக்கமிட, கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் அதை பிரதிபலித்தனர். -
6 இலக்கியப் பணி
அண்ணா, 24 குறுநாவல்கள், 5 நாவல்கள், 1,500 கட்டுரைகளை அண்ணா எழுதியிருக்கிறார். 1949ம் ஆண்டு வெளியான நல்ல தம்பி முதல் 1962ம் ஆண்டு வெளியான எதையும் தாங்கும் இதயம் வரை 9 படங்களுக்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் என பல்வேறு வகைகளில் அண்ணா பங்காற்றியிருக்கிறார். தமிழரசு, பெரியாரின் குடி அரசு, பாலபாரதி, விடுதலை, திராவிட இதழ், மாலை மணி போன்ற இதழ்களில் பல்வேறு பொறுப்புகளை அண்ணா வகித்ததோடு, அந்த இதழ்களில் அவரின் கட்டுரை, புதினம், கவிதை போன்றவை வெளியாகின. 1957ல் `Home Rule' என்ற ஆங்கில வார இதழையும் அண்ணா தொடங்கி நடத்தினார்.
0 Comments