துளசி வாண்டையார்

`கல்விக் காவலர்… காந்தி சீடர்’ – துளசி வாண்டையார் மறைவால் கலங்கும் டெல்டா மக்கள்!

டெல்டா மக்களால் அய்யா என்று பாசத்தோடும் கல்வி வள்ளல் என்றும் அழைக்கப்பட்டு வந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி வாண்டையார் வயது மூப்பினால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93.

தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் புகழ்பெற்றது வாண்டையார் குடும்பம். அந்தக் குடும்பத்தில் 1929ம் ஆண்டில் பிறந்தவர் துளசி வாண்டையார். சிறுவயது முதலே விவசாயம் மீதும் பேரார்வம் கொண்ட துளசி வாண்டையார், பல கிராமங்களில் தமது குடும்பத்தினருக்குச் சொந்தமான விவசாய நிலங்களை நேரடியாகப் பராமரித்து வந்தவர். தனது பெரியப்பாவுடன் சேர்ந்து விவசாய நிலங்களைப் பராமரித்து வந்த இவர், சிறுவயது முதலே காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர். இதனால், காந்தியின் சீடராகவேத் தமது இறுதிக் காலம் வரை வாழ்ந்து வந்தார்.

துளசி வாண்டையார்

காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்ட துளசி வாண்டையார் தஞ்சை மாவட்டம் பூண்டியில் புஷ்பம் கலை அறிவியல் கல்லூரியை நிறுவி ஏழை, எளிய மக்களின் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தார். சுமார் 60 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் வாண்டையார் குடும்பம் ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளித்து வருகிறது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த துளசி வாண்டையார், 1991- 1996 காலகட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினரானார். எம்.பியாக இருந்த காலகட்டத்தில் மத்திய அரசு கொடுத்த சலுகைகளை ஏற்க மறுத்த அவர், டெல்லி சென்று திரும்புவது, விமான டிக்கெட், ரயில் டிக்கெட், காருக்கான டீசல் என அனைத்தையும் தனது சொந்த செலவிலேயே கவனித்துக் கொண்டார். காந்தியின் சீடரான இவர், காமராஜர், இந்திராகாந்தி உள்ளிட்டோருடன் நட்பு பாராட்டியவர். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகலுக்குப் பிறகு மவுன விரதம் இருந்து அவருக்கு அஞ்சலி செலுத்திவந்தவர் வாண்டையார்.

துளசி வாண்டையார்

மண்ணை மதித்தால், மண் நம்மை மதிக்கும்’ என்று நம்பும் வாண்டையார், தனது நிலத்தில் எந்தவிதமான செயற்கை உரங்களும் போடாமல் வளர்த்த காய்கறிகளையே கல்லூரி விடுதி மாணவர்களின் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கண்டிப்பாக உத்தரவு போட்டவர். சுத்தமல்லி புராஜக்ட் என்ற பெயரில் பலநூறு ஏக்கர்களில் பயிர்களுக்கு உரிய இடைவெளி விட்டு இவர் விவசாயம் செய்த முறை, இன்றும் பலருக்குப் பாடம்.மண்தான் நமக்கு வேர். மண்ணை விட்டால் நமக்கு வேரில்லை’ என்று சொன்னவர் வாண்டையார். லயோலோ கல்லூரியில் பட்டப்படிப்பு முடிந்த அவர், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இந்தநிலையில், வயது மூப்பு காரணமாக அவரது உயிர் இன்று அதிகாலையில் பிரிந்ததாகக் குடும்பத்தினர் அறிவித்தனர். 93 வயதான வாண்டையாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர், பிரபலங்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

துளசி வாண்டையார்

துளசி வாண்டையாரின் மகன்வழிப் பேரன் ராமநாதன், டி.டி.வி தினகரன் மகள் ஜெயஹரிணியை மணந்திருக்கிறார். துளசி வாண்டையாரின் மகன் கிருஷ்ணசாமி வாண்டையார், தனது தந்தை வழியில் விவசாயம், கல்வி, சமூகப் பணிகளைக் கவனித்து வருகிறார்.

துளசி வாண்டையாரைப் பற்றி டெல்டா பகுதியில், `உச்சி வெயில்ல செல்லாத்தா… நம்ம உச்சந்தலை கருகலை.. கொட்டுற மழையில செல்லாத்தா… நம்ம குடிசை வீடு ஒழுகலை… ஆண்டவனை வேண்டலை… நம்ம வாண்டையார் வடிவத்துல செல்லாத்தா… நம்ம கடவுளை வேண்டுவோமடி செல்லாத்தா…’ என்று நாட்டுப்புறப் பாடல் பாடப்படுவதுண்டு.

Also Read –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top