இந்த ஊர்களையெல்லாம் தெரியுமா… தமிழகத்தின் 8 விநோத கிராமங்கள்!

தமிழகத்தில் சில கிராமங்கள் விநோதமான பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் கொண்டிருப்பார்கள். இது ஊருக்கு ஊர் வேறுவிதமாக இருக்கும். அப்படி தமிழ்நாட்டில் இருக்கும் விநோதமான 8 கிராமங்களைப் பத்திதான் இப்போ நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

கதவுகள் இல்லாத வீடுகள்

மரக்கதவு இருந்தாலும், கிரில் கேட் போடும் வழக்கம், சிசிடிவி கண்காணிப்பு, பெரிய வீடுகளாக இருந்தால் பாதுகாவலர் என வீடுகளுக்குப் பொதுவாகவே கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய நிலை இன்று இருக்கிறது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் பாப்பனம் கிராமத்தில் இருக்கும் வீடுகள் எதற்கும் கதவுகள் என்பதே இல்லை.

பாப்பனம் கிராமம்
பாப்பனம் கிராமம்

தங்கள் வீடுகளை முனியப்பசாமி காவல் காப்பதாக நம்பும் இந்த கிராம மக்கள் புதிய வீடு கட்டினாலும் வாசல் கதவுகள் இல்லாமலேயே கட்டுவதை பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். ஊர் கட்டுப்பாட்டை மீறி வீட்டுக்குக் கதவுகளைப் பொருத்தினால் சாமிக் குற்றத்துக்கு ஆளாகிவிடுவார்கள் என்பது அந்த ஊர் மக்களின் நம்பிக்கை. கதவுகளே இல்லை என்றாலும், இந்த ஊரில் திருட்டு, கொள்ளை என எந்தவொரு சம்பவமும் நடந்ததில்லையாம். பஞ்சம் காரணமாக சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாக விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் இந்த கிராமத்தில் வாழத் தொடங்கியதாகச் சொல்கிறார்கள். இன்றைய சூழலில் இது ஆச்சர்யமான கிராமம்தான்.

மதுவுக்கு நோ; வரதட்சணை கூடவே கூடாது!

சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி கொள்ளிடக் கரையில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 7 குடும்பங்கள் சிவகங்கை – கல்லல் செல்லும் சாலையில் வீடுகளை அமைத்துக் குடியேறியிருக்கிறார்கள். இப்போது, சிறிய கிராமமாக உருவெடுத்திருக்கும் அந்தப் பகுதி ஆலவிளாம்பட்டி என்றழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தின் ஸ்பெஷலே, இந்த ஊரில் இருக்கும் யாரும் மதுவையோ, போதைப் பொருளையோ தொடுவதில்லை என்பதுதான். இதுதவிர, வரதட்சனை கொடுப்பதும் இல்லை; வாங்குவதும் இல்லை என்பதைக் கொள்கையாகவே கடைபிடித்து வருகிறார்கள். வணங்கும் தெய்வங்களான ராமசாமி – பொன்னழகு சாமிகளுக்கு இவர்களின் முன்னோர்கள் செய்து கொடுத்த சத்தியத்தை இன்றுவரை கடைபிடித்து வருவதாகச் சொல்கிறார்கள் அந்த மக்கள். இதை ஊரின் நடுவே கல்வெட்டிலும் பதித்து வைத்திருக்கிறார்கள்.

ஆலவிளாம்பட்டி
ஆலவிளாம்பட்டி

ஊர்க் கட்டுப்பாட்டை மீறினால், அந்தக் குடும்பத்தில் நடக்கும் சுப,துக்க நிகழ்வுகளில் ஊர் மக்கள் எவரும் கலந்துகொள்ள மாட்டார்களாம். இதனாலேயே கிராமத்தில் மது உள்ளிட்ட போதைப் பொருட்களும், வரதட்சனை வாங்கக் கூடாது என்பதையும் கட்டுப்பாட்டோடு தலைமுறைகள் கடந்தும் கடைபிடித்து வருகிறார்களாம்.

ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ஆள்!

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்திருக்கும் கிராமம்தான் மீனாட்சிபுரம். சிட்டிசன் பட அத்திபட்டி கிராமம் போல மேப்பில் இருந்தே காணாமல் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது இந்த கிராமம். ஒரு காலத்துல 300 குடும்பங்களுக்கு மேல வசிச்ச இந்த கிரமாத்தில் இப்போது ஒரே ஒருத்தர் மட்டும்தாங்க வாழ்ந்துட்டு வர்றாரு. சொந்த ஊர் மேல தீராத பாசம் வைச்சிருக்க 73 வயசு கந்தசாமிதான் அவரு. தலைமுறை தலைமுறையா தங்களோட குடும்பம் செழிச்சு வளர்ந்த ஊரை விட்டுப் போக மனசில்லாமல், தன்னந்தனியாக ஒரு நாயின் துணையோடு அங்க வாழ்ந்துட்டு வர்றாரு கந்தசாமி.

மீனாட்சிபுரம்
மீனாட்சிபுரம்

வீடு, வாசல், நிலங்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு மக்கள் இந்த ஊரைக் காலி பண்ணியிருக்கிறார்கள். என்ன காரணம்னு பார்த்தா, கொடுமையான தண்ணீர் பஞ்சமும், ஒரே நம்பிக்கையான விவசாயமும் கைவிடவே வேலையில்லாம தவிச்சிருக்காங்க. ஐந்தாறு வருஷத்துக்கு முன்னாடி கூட 150 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், பஞ்சத்தால் கொஞ்சம் கொஞ்சமா மக்கள் ஊரைக் காலி பண்ணிட்டாங்களாம். சாலை, குடிநீர் வசதினு எந்தவொரு அடிப்படை வசதியும் அரசு இந்த கிராமத்துக்குச் செஞ்சு கொடுக்காததும் ஒரு காரணம்னு சொல்றாங்க. அதேநேரம், ஊரை விட்டு வெளியேறிய மக்கள், மீண்டும் இந்த கிராமத்துக்கு வர வேண்டும் என்ற நோக்கில் தற்போது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, அடி பம்பு உள்ளிட்ட வசதிகளைச் செஞ்சு கொடுத்திருக்காங்களாம். இதை முன்னரே செய்திருந்தால் மக்கள் வெளியேறியிருக்க மாட்டார்கள் என்கிறார் கந்தசாமி. அவரின் மனைவி இறந்துவிட்ட நிலையில், இரண்டு மகன்கள், இரு மகள்களும் வெளியூர்களில் வசிக்கிறார்களாம். அவர்கள் எவ்வளவோ அழைத்தும் சொந்த மண்ணை விட்டு அவர் வெளியேற மறுத்துவிட்டாராம்.

மாடி வீடே இல்லாத கிராமங்கள்!

மாடி மேல் மாடி வைத்து வீடு கட்டி தங்கள் கெத்தைக் காட்டுவது இன்றும் பல கிராமங்களில் தொடரும் வழக்கம். ஆனால், தெய்வக் குத்தமாகிவிடும் என்று கருதி மாடி வீடே இல்லாத கிராமங்களும் தமிழகத்தில் இன்றும் இருக்கின்றன என்பது ஆச்சர்யம்தான். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கும் கருத்தராஜ பாளையத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் ஊரை பெரியசாமி, கருப்பசாமி தெய்வங்கள் இரவில் காவல் காப்பதாக நம்புகிறார்கள். அந்த ஊரில் மாடி கட்டி, மாடியில் இருந்து சாமியைப் பார்த்தால் தெய்வக் குற்றமாகிவிடும் என்று நம்புகிறார்கள். இதனால், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இதனால், அரசின் தொகுப்பு வீடுகள் திட்டத்தையும் வேண்டாம் என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

இதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலத்துக்கு அருகே இருக்கும் புன்னையன் பட்டி கிராமத்திலும் மாடி வீடுகளே இல்லை. கிராமத்தின் எல்லையில் இருக்கும் கருப்புசாமி கோயிலை விட உயரமாக வீடு கட்டக் கூடாது என்ற வழக்கத்தை இம்மக்கள் காலம்காலமாகப் பின்பற்றி வருகிறார்கள். இதே வழக்கத்தைத்தான் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் எஸ்.கோவில்பட்டி மக்களும் பின்பற்றி வருகிறார்கள்.

காங்கேயநத்தம்
காங்கேயநத்தம்

செருப்புக்குக் கட்டுப்பாடு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காங்கேயநத்தம் என்ற கிராமத்தின் விநோதமான ஒரு பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இந்த ஊருக்கு வரும் வெளியூர் நபர்கள் கிராமத்துக்குள் செருப்பு அணியக் கூடாது, வேட்டியை மடித்துக் கட்டக் கூடாது மற்றும் குடைபிடிக்கக் கூடாது என்ற கட்டுபாடுகளை விதித்திருக்கிறார்கள் கிராம மக்கள். கலெக்டரே எங்க கிராமத்துக்கு வந்தாலும், ஊருக்கு வெளியே செருப்பைக் கழற்றி வைத்துவிட்டுதான் வருவாராம். அதேபோல், ஓட்டுக் கேட்டு வரும் அரசியல்வாதிகள், போலீஸார் கூட செருப்பு, ஷூவைக் கழற்றி வைத்துவிட்டுதான் வருவார்களாம். ஊரில் இருக்கும் அழகுமலையான் சாமிக்குக் கட்டுப்பட்டே இந்த வழக்கத்தை அவர்கள் காலம் காலமாகக் கடைபிடித்து வருவதாகச் சொல்கிறார்கள்.

ஒற்றுமையே பலம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இருக்கும் பெரிய நாயகபுரம் மக்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் வாழ்ந்து வருபவர்கள். பொதுவாக கிராமங்கள் இறப்பு நிகழும்போது, அந்தக் குடும்பத்தினர் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு துக்கம் அனுசரிப்பார்கள். மற்றவர்கள் இயல்பாகத் தங்கள் வேலைகளைப் பார்ப்பார்கள். ஆனால், இந்த கிராமத்தில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால், கிராமமே துக்கம் அனுஷ்டிக்கிறது. இறந்தவரின் இறுதிச் சடங்குக்காக ஊர் சார்பில் ஆயிரம் ரூபாயும், ஒவ்வொரு வீட்டினரும் பத்து ரூபாய் வீதமும் கொடுக்கிறார்கள். அத்தோடு, ஊரில் இருக்கும் யாரும் அன்றைய தினம் வேலைக்குப் போக மாட்டார்களாம்.

அதேபோல், ஊரில் எந்தவொரு கட்சிக் கொடியேற்றுவதற்கோ, போஸ்டர்கள் ஒட்டுவதற்க்கோ அந்த ஊர் மக்கள் அனுமதிக்க மாட்டார்களாம். வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளுக்கு ஊர்ப் பொதுவிலேயே வரவேற்புக் கொடுப்பார்களாம், தனிப்பட்ட முறையில் எந்தவொரு வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை என்ற வழக்கத்தையும் கடைபிடித்து வருகிறார்கள்.

வெள்ளகவி
வெள்ளகவி

25 கோயில்களைக் கொண்ட கிராமம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் இருக்கும் சின்னஞ்சிறு கிராமம் வெள்ளகவி. வாகனப் போக்குவரத்து வசதி எதுவும் இல்லாத இந்த கிராமத்தில் சுமார் 150 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள். சின்ன கிராமமான வெள்ளகவியில் 25-க்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றன. இதனாலேயே, கிராமம் முழுவதையும் புனிதமாகக் கருதும் மக்கள் ஊருக்குள் யாரும் செருப்புகளை அணிந்து நடப்பதில்லையாம். சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கிராமம் கொடைக்கானலுக்கு மூத்ததாகக் கருதப்பட்டாலும், எந்தவொரு அடிப்படை வசதியுமே இல்லாமல் இந்த மக்கள் ரொம்பவே திண்டாடுகிறார்கள். ஆரம்பப் பள்ளி மட்டுமே ஊரில் இருக்கிறது. அதன்பிறகு, இந்த ஊர் குழந்தைகள் கொடைக்கானல் உள்ளிட்ட நகரப் பகுதிகளையே கல்விக்காக சார்ந்திருக்க வேண்டிய நிலை இன்றும் தொடர்கிறது.

மெய்வழிச்சாலை கிராமம்

மெய்வழிச்சாலை
மெய்வழிச்சாலை

புதுக்கோட்டை மாவட்டன் அன்னவாசல் அருகே இருக்கும் மெய்வழிச்சாலை கிராம மக்கள் வித்தியாசமான பழக்க வழக்கங்கள் கொண்டவர்கள். 1940-ல் மதுரையிலிருந்து வந்த காதர்பாட்சா என்பவர் புதுக்கோட்டை சமஸ்தான மன்னரிடமிருந்து 99 ஏக்கர் நிலத்தை வாங்கி, மெய்வழிச்சாலை கிராமத்தை உருவாக்கினார். அவர் புதிதாக ‘மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம்’ என்ற ஒரு புதிய மதத்தையும் தோற்றுவித்தார். ஆண்கள் அனந்தர்கள் என்றும் பெண்கள் அனந்தகிகள் என்று அழைக்கப்படுவார்கள். ஊருக்குள் மின்சாரம் பயன்படுத்துவதில்லை. தொழில்,வேலை நிமித்தம் வெளியூரில் இருப்பவர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கிராமத்துக்கு வந்துவிட்டால் மின்சாரம் இல்லாமல்தான் இருக்க வேண்டும். ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை மக்களின் வீடுகள் குடிசைகள்தான். மணல் தரை; ஐந்தடி உயரமுள்ள சுவர் மட்டுமே இருக்கும். குடிசைகளுக்குக் கதவுகள் போடுவதில்லை; அப்படியே கதவுகள் இருந்தாலும் பூட்டு போட மாட்டார்கள். மெய்வழிச்சாலைக்குள் அரசு மின் இணைப்பு தர முன்வந்தது. நாங்கள் மறுத்து விட்டோம். இப்போதுதான் கிராம நலன் கருதி தெருக்களில் சோலார் மின் விளக்கு இணைத்திருக்கிறோம். உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும், பொங்கல் அன்று அத்தனை சாலை அனந்தர்களும் இங்கு கூடி பொன்னரங்க ஆலயத்தில் பொங்கல் வைப்பது வழக்கம்.

Also Read – இந்தியாவின் கடைசி `சதிர்’ நடனக் கலைஞர் – பத்மஸ்ரீ விருதுபெறும் முத்துக்கண்ணம்மாள் யார்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top