`50 நாள் திருவிழா’ – சென்னையைக் கொண்டாடும் ’என் சென்னை யங் சென்னை!’

சென்னை தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை தினத்தை 50 நாட்கள் கொண்டாட என் சென்னை யங் சென்னை அமைப்பு திட்டமிட்டு, அதற்கான கொண்டாட்டங்களைத் தொடங்கியிருக்கிறது.

ஆண்டுதோறும் தன் வசீகரத் தோற்றத்தாலும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தாலும் சென்னை இளமையாகி வருகிறது. இந்தப் பெருநகரமும் இங்குள்ள வாழ்க்கைச் சூழல்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்று சேர்ந்து உழைக்கும் சென்னை இதயங்களின் உணர்வைக் கொண்டாடும் ஒரு முயற்சியே ‘என் சென்னை யங் சென்னை’. இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் என் சென்னை யங் சென்னை கொண்டாட்டங்களை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கடந்த ஜூன் 25-ம் தேதி தொடங்கி வைத்தார்.

en chennai young chennai
en chennai young chennai

சரி, வழக்கமா சென்னை தினம்னா என்ன பண்ணுவோம். சென்னையோட பாரம்பரியம், வரலாறு பற்றிப் பேசுவதும் ‘சென்னை நடைகள்’ மேற்கொள்வதும், உரைகள் நிகழ்த்துவதும் வழக்கமான செயல்பாடுகளாக இருக்கும். ஆனால், என் சென்னை யங் சென்னை அமைப்பைப் பொறுத்தவரையில், ‘சென்னை என்பது அதன் பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் மட்டுமே அல்ல. இளம் சென்னையின் உணர்வானது சமூகத்தின் நலனுக்காக தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படும் இதயங்களால்தானே உருவாக்கப்பட வேண்டும்!’ என்கிறார்கள்.

இதற்காகக் கடந்த 2021-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘என் சென்னை யங் சென்னை’ கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம் இதுதான். சென்னையின் நினைவுச் சின்னங்களையும், சென்னையின் எழிலையும் கொண்டாடுவது அவசியம்தான். அதைவிடவும் சென்னை மனிதர்களைக் கொண்டாடவே அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இந்தப் பின்னணியில்தான் சென்னையை ரசித்து நேசித்து வாழ்ந்து வரும் மக்களுடன் இணைந்து சென்னைக்கு சிறப்பு செய்யும் திருவிழாவாக ‘என் சென்னை யங் சென்னை’ உருவெடுத்திருக்கிறது.

en chennai young chennai
en chennai young chennai

கடந்த ஆண்டு, வந்தாரை வாழவைக்கும் சென்னையின் பெருமையைக் கூறும் ’சென்னை கீதத்தை’ அறிமுகப்படுத்தினார்கள். அதோடு, ஆக்கமும் ஊக்கமும் நிறைந்த சென்னை இளைஞர்களின் துடிப்பான செயல்பாடுகளைப் போற்றும் விதமாக விருதுகளையும் வழங்கி கௌரவித்தனர். சென்னையின் உதவிக்கரமாக நீளும் இந்த இளைஞர்களுக்கு மரியாதை செய்யும் விருதுகள் சென்னைக்காக – சென்னையால் – சென்னைக்கு என்கிற கோணத்தில் அளிக்கப்பட்டன. கடந்த பத்தாண்டுகளில் உரிமைகளுக்காக போராடுவது, சுற்றுச்சூழல் காப்பது, இயற்கைச் சீற்றங்கள், தொற்றுநோய் போன்ற எதிர்பாராத சூழல்களின்போது சவால்களை எதிர்கொண்டு, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டுவதன் மூலம், மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தி, சென்னையை மீட்டெடுத்தவர்களை இந்த விருதுகள் மூலம் அடையாளப்படுத்தும் நல்வாய்ப்பாகக் கருதி விருதுகளை வழங்கியதாக அந்த அமைப்பு பெருமிதப்பட்டது.

இந்த ஆண்டு ஜூன் 25-ம் தேதி தொடங்கிய ‘என் சென்னை யங் சென்னை’ விழாவை, 50 நாள்களுக்குத் தொடர்ந்து நடத்த இருக்கிறார்கள். சென்னையின் மனித மதிப்பீடுகளை (Human Values) உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் அந்த அமைப்பினர். சென்னையின் பல்வேறு குடியிருப்புகளிலும் ‘என் சென்னை யங் சென்னை’ இடம் பிடிக்கும். ஒரு மாபெரும் நிகழ்வாக இன்டோர் ஸ்டேடியத்தில் நடக்கும் மாரத்தான் போட்டியும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதேபோல், பெருமைமிக்க விருது விழா ஒன்றும் திட்டமிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டைப் போலவே சமூகப் பணிக்கான விருதுகளோடு, இந்த ஆண்டு இன்னும் இரு பிரிவுகளும் இடம்பெறுகின்றன. வணிகத் துறை சாதனையாளர்கள் மற்றும் பொழுதுபோக்கின் புதிய முகங்களும் இந்த ஆண்டு கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.

en chennai young chennai
en chennai young chennai

சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ் இந்த ஆண்டின் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதன்மையாகத் திகழ்கிறது. எவ்வித அச்ச உணர்வும் இன்றி மக்கள் மகிழ்ச்சியாகவும் பத்திரமாகவும் வாழ்வதற்கு காவல்துறையின் சீரிய பணியே காரணம் என்கிற நிலையில், சென்னையை பாதுகாக்கும் காவல் துறை ஆணையர் இந்தக் கொண்டாட்டத்தைத் தொடங்குவது மிகவும் பொருத்தமானது. இதனால், சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு ‘என் சென்னை யங் சென்னை’ குழு நன்றியையும் தெரிவித்திருக்கிறது.

Also Read – ஸ்டைல் ஐகான்… விஜய்யோட ஃபேவரைட் காஸ்டியூம் என்ன தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top