மாதிரிப்படம்

தமிழகத்தில் முதல்முறை.. பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்!

நீலகிரி மாவட்டத்தில் 2001-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 7.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை சுமார் 3.7 சதவிகிதம் ஆகும். அதாவது கிட்டத்தட்ட 29,000 பேர் வசித்து வருகின்றனர். கோத்தர், தோடர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் மற்றும் பணியர் என ஆறு வகையான மக்கள் இதில் அடங்குவர். இந்த பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பழங்குடியினர் ஆராய்ச்சி மையமானது பழங்குடி பெண்கள் மட்டுமே நடத்தும் பெட்ரோல் பங்க் ஒன்றை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பழங்குடி மக்களால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது.  

கோத்தர், தோடர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் மற்றும் பணியர் ஆகிய ஆறு வகையான பழங்குடி மக்களில் தோடர் மற்றும் கோத்தர் இன மக்கள் நிலங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மற்ற பழங்குடி இன மக்கள் போதிய முன்னேற்றத்தை இன்னும் அடையவில்லை என்கிறார்கள். இவர்கள் இன்று பெரும்பாலும் விவசாயக் கூலியாகவே இருந்து வருகின்றனர். மற்ற மக்களின் வாழ்க்கையை ஒப்பிடும்போது இவர்களின் நிலை மிகவும் பின்தங்கிய அளவில் உள்ளது. இதனால், இவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பழங்குடி ஆராய்ச்சி மையம் இந்த பெட்ரோல் பங்கை திறந்துள்ளது.

பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்

உதகை அருகே பாலாடாவில் அமைந்துள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் அருகிலேயே இந்த பெட்ரோல் பங்கானது திறக்கப்பட்டுள்ளது. கோத்தர், தோடர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் மற்றும் பணியர் ஆகிய ஆறு பழங்குடியின மக்களைச் சேர்ந்த பெண்களும் இந்த பெட்ரோல் பங்கில் வேலைக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பழங்குடியினங்களில் இருந்தும் தலா இரண்டு பெண்கள் வீதம் 12 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஷிஃப்ட் முறையில் தங்களது வேலைகளை செய்து வருகின்றனர். 8 மணி நேரம் இவர்களுக்கு பணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வேலை பார்த்தால் ஊக்கத்தொகையும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. மற்ற பெட்ரோல் பங்குகளை ஒப்பிடுகையில் இங்கு 87 பைசா குறைவாக பெட்ரோல் விற்கப்படுகிறது.

இதுதொடர்பாக பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் ச. உதயகுமார் பேசும்போது, “மத்தியப் பழங்குடியின நல அமைச்சகம் மற்றும் மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த பெட்ரோல் பங்கானது தொடங்கப்பட்டுள்ளது. கோத்தர் மற்றும் தோடர் பழங்குடியின மக்கள் அரசின் சலுகைகளைப் பெற்று சில முன்னேற்றங்களை அடைந்துள்ளனர். ஆனால், கூடலூர், பந்தலூர் பகுதிகளைச் சேர்ந்த பணியர், காட்டு நாயக்கர் ஆகிய பழங்குடியின மக்கள் இன்றும் விவசாயக் கூலிகளாகவே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் வெளியில்கூட வருவதில்லை. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அம்மக்களின் தலைவர்களுடன் பேசி பெட்ரோல் பங்கில் பணிக்கு வரச் சம்மதிக்க வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண்களுக்கு மாதம் ரூ.8,500 சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களது சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை ஆகியவை வங்கிக் கணக்குகளில் பதிவு செய்யப்படும். கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடி மக்கள் தங்குவதற்காக பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திலேயே தங்கும் வசதி ஏற்படுத்தப்படுள்ளது. ஊரடங்கால் கடுமையாக பாதிப்படைந்த பழங்குடி இன மக்களின் குடும்பங்களுக்கு பெட்ரோல் பங்க் பணியானது மிகப்பெரிய அளவில் உதவியாக இருப்பதாகவு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவர்களது வாழ்க்கைப் பாதையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அதிகாரிகளால் நம்பப்படுகிறது.

Also Read : சின்னத்திரை நட்சத்திரங்களின் யூடியூப் சேனல்களில் என்ன ஸ்பெஷல்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top