சட்ராஸ்

மெட்ராஸ் மாதிரி சட்ராஸ்… சதுரங்கப்பட்டினத்தின் வரலாறு தெரியுமா?

சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சதுரங்கப்பட்டினம் எனும் சட்ராஸைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தில் இருக்கும் ஒரே டச்சுக் கோட்டையான சட்ராஸ் கோட்டையைப் பற்றியும் அதன் வரலாறைப் பற்றியும்தான் இந்த வீடியோவில் நாம பார்க்கப்போறோம்.

எங்க இருக்கு சட்ராஸ்?

சென்னை – பாண்டிச்சேரி மாமல்லபுரம் வழியாப் போறப்ப கல்பாக்கம் பக்கத்துல இருக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழமையான நகரம்தான் சதுரங்கப்பட்டினம். மாமல்லபுரத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த நகரம், பழங்காலத்தில் துறைமுக நகரமாகவும் இருந்திருக்கிறது. சட்ராஸில் சிதிலமடைந்து காணப்படும் கோட்டைகள், டச்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்டவை.

1319-ம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில் இதை ராஜநாராயணன் பட்டினம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பின்னர், சம்பூர்வராயர் பட்டினம் என்றானதாக வரலாறு சொல்கிறது. ஒரு காலகட்டத்தில் சதிரவசகன் பட்டினம் என்று அழைக்கப்பட்டு வந்த இது, பின்னர் சதுரங்கப்பட்டினம் என்று மருவியதாகச் சொல்வார்கள். பல்லவர் காலத்தில் மாமல்லபுரத்துக்கு அடுத்தபடியாக துணை துறைமுக நகராக விளங்கிய பெருமை பெற்றது.

Sadras
Sadras

சட்ராஸ்

1606வாக்கில் இந்தியா வந்த டச்சுக்காரர்கள் பழவேற்காடு ஏரி அருகே தங்கள் குடியிருப்பை அமைத்தனர். அங்கிருந்தபடியே, துணி, நறுமணப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்யத் தொடங்கினர். அதன்பின்னர், கடலோரத்தில் அமைந்திருக்கும் சதுரங்கப்பட்டினத்தின் அமைவிடம் காரணமாக டச்சுக்காரர்கள், 1616 வாக்கில் மிகப்பெரிய கோட்டையைக் கட்டினர். டச்சு ராணியின் ஆணைக்கிணங்கவே இந்தக் கோட்டை கட்டப்பட்டதாகச் சொல்வார்கள். இங்கே தயாரிக்கப்பட்ட மஸ்லின் துணிகள் உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதன் காரணமாகவே சதுரங்கப்பட்டினத்தைச் சுற்றிலும் நெசவாளர்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். டச்சுக்காரர்கள் இந்நகரை சட்ராஸ் என்று அழைத்தனர். தமிழில் சதுரை என்றும் அழைக்கப்படுவதுண்டு.

சட்ராஸ்
சட்ராஸ்

பொருளாதாரரீதியிலான முக்கியத்துவத்தால் இந்நகரைக் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் முயற்சித்திருக்கிறார்கள். 18-ம் நூற்றாண்டு இறுதிவரையில் டச்சுக்காரர்கள் கையே ஓங்கியிருந்தது. 1782-ம் ஆண்டு முதல்முறையாக ஆங்கிலேயர்கள் கடல்வழியாக இந்தக் கோட்டையைத் தாக்கத் தொடங்கினர். டச்சுக்காரர்கள் கோட்டையைக் கட்டும்போதே தாக்குதல்களை எதிர்க்கொள்ளும் வகையில் ஆயுதத் தளவாடங்களுடனே திட்டமிட்டுக் கட்டியிருந்தனர். கோட்டையின் மூன்றுபுறமும் பீரங்கிகள், கோட்டைக்குள் யானை, குதிரை கொத்தளங்கள் என பெரிய திட்டமிடலோடு கட்டியிருந்தனர்.

ஆங்கிலேயர்கள், கடற்படைத் தளபதி சர் எட்வர்டு ஹியூஸ் தலைமையில் 9 கப்பல்களில் வந்து தாக்கினர். ஆனால், டச்சுப் படைகள் 11 கப்பல்களில் நடத்திய தாக்குதலில் ஆங்கிலேயப் படை சேதம் அதிகமானதால், பின்வாங்கியது. அதன்பின்னர், 1796-ம் ஆண்டு முதல் அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி கோட்டையைக் கைப்பற்ற முயற்சித்தனர். ஒருவழியாக 1818-ல் கோட்டை முழுமையாக பிரிட்டீஷ் படைகள் வசம் சென்றது. ஆங்கிலேயர்களின் தொல்லை தாங்க முடியாத டச்சுப் படைகள் மொத்தமாகக் கோட்டையை விட்டு வெளியேறியது.

கடல் வாணிபமும் கட்டடக் கலையும்

டச்சுக்காரர்கள் காலத்தில் மட்டுமல்ல; ஆங்கிலேயர்கள் காலத்திலும் மிகச்சிறந்த துறைமுகமாக சதுரங்கப்பட்டினம் விளங்கியிருக்கிறது. மஸ்லின் துணி தவிர இங்கு தயாரிக்கப்பட்ட செங்கற்கள் உலக அளவில் பிரபலமாக இருந்திருக்கின்றன. அதேபோல், தாவர எண்ணெய், முத்து என அக்காலத்தில் பல்வேறு பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை டச்சு கட்டடக் கலைக்கு சிறந்த சான்றாக இருக்கிறது. கோட்டைக்குள்ளே பெரிய தானியக் கிடங்கு, குதிரை லாயம், யானைகள் கட்டுமிடம், வசிப்பிட அறைகள், சமையல் கூடம், சுரங்க அறைகள், மழைநீர் வடிகால் சிஸ்டம், உணவு உண்ணும் அறை, பார்வையாளர் மாடம் போன்றவற்றை தொல்லியல் துறையின் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

2003-ம் ஆண்டு முதல் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதேபோல், 1620 – 1769-ம் ஆண்டு வரை வசித்தவர்கள் பலரின் கல்லறையும் கோட்டைக்குள் இருக்கிறது. அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கும் அந்தக் கல்லறைகளின் மேல் அரசு முத்திரையும் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல், அகழாய்வின்போது அந்தக் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கண்ணாடி குடுவைகள், மழைநீர் சேமிப்பு அமைப்பு இருந்ததற்கான ஆதாரங்கள் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டன. மேலும், 16-ம் நூற்றாண்டில் நெதர்லாந்து நகரக் கட்டுமானங்களில் பயன்படுத்தப்பட்ட அறுங்கோண வடிவிலான கற்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. 2003-ல் நடந்த அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட நீலம் கலந்த பச்சை நிறத்தாலன கண்ணாடிக் குடுவைகள் எந்தவொரு சேதாரமும் இன்றி மீட்கப்பட்டது.

சுமார் 450 ஆண்டுகளுக்குப் பிறகும் கம்பீரமாக நிற்கும் சதுரங்கப்பட்டினம் கோட்டை பல வரலாற்று நினைவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. நீங்க சதுரங்கப்பட்டினம் கோட்டைக்கு விசிட் அடிச்சிருக்கீங்களா… உங்க அனுபவத்தை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.             

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top