Meenakshi Amman Temple

இந்து சமய அறநிலையத்துறை எப்போது, ஏன் ஆரம்பிக்கப்பட்டது?

இந்து சமய அறநிலையத்துறையின் வரலாறு என்ன?

இந்து சமய அறநிலையத் துறை, ஒரு அரசு துறையாக உருவெடுத்த வரலாறு நெடியது. அதற்கான முன்னெடுப்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே தொடங்குகிறது. மன்னராட்சி முடிவுக்கு வந்தபிறகு அவர்களின் ஆளுகையின் கீழ் இருந்த கோயில் நிர்வாகம் அரசு கைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன் தொடர்ச்சியாக 1817-ம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் கோயில் நிர்வாகங்களைச் சீர்படுத்த சட்டம் இயற்றப்பட்டது. கோயில்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளில் முறைகேட்டில் ஈடுபட்ட தர்மகர்த்தாக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பின்னர், 1849-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் இருந்த 8,292 கோயில்கள் அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இந்து சமய அறநிலையத்துறை

1858-ம் ஆண்டு நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டீஷ் மகராணி கைக்கு மாறியதும் இந்தநிலை மாறியது. இந்திய மக்கள், தங்கள் மீது கொண்டுள்ள வெறுப்பைப் போக்க முயற்சி செய்துகொண்டிருந்த ஆங்கிலேயே அரசு, கோயில் நிர்வாகங்களை பழையபடி தனிநபர்களிடமே ஒப்படைத்தது. மேலும், மத விவகாரங்களில் பிரிட்டீஷ் அரசு தலையிடாது என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.

[infogram id=”76e345ef-bb04-4d81-aceb-908606331562″ prefix=”giy” format=”interactive” title=”HRCE Temples”]

அதன்பின்னர், இந்து சமய நிறுவனங்களின் நிர்வாகத்தை முறையாகப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் 1925-ல் `இந்து அறநிலைய வாரியம்’ ஏற்படுத்தப்பட்டது. மெட்ராஸ் ராஜதானியின் முதல்வராக 1947 முதல் 1949-ம் ஆண்டு வரை இருந்த ஓமந்தூரார் கோயில்கள் பராமரிப்பு விவகாரத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். 1951-ல் இந்து சமய அறநிலைய வாரியம் கலைக்கப்பட்டு தனி அரசு துறையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 1951-ல் மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, கீழிருந்து மேலாக அதிகாரிகள் நியமிக்கவும், தலைமைப் பொறுப்பில் ஆணையர் நியமிக்கவும் வழி ஏற்பட்டது.

1959-ல் காமராஜர் ஆட்சியின்போது அறநிலையத் துறையின் முந்தைய சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட்டு தற்போதைய சட்டமான இந்து சமய அறநிலையத் துறை சட்டம் இயற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டம் 22/1959 என்ற அந்த சட்டம், 1960-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலானது. இந்த சட்டத்தின் மூலம் அதிகாரிகள் நியமனம், அவர்களின் அதிகாரம் வரையறுக்கப்பட்டு முழு அரசுத் துறையாக செயல்படத் தொடங்கியது. இந்த சட்டத்தில் 1996-ம் ஆண்டு (இந்து சமய அறநிலையத் துறை திருத்தச் சட்டம் 39/1996) திருத்தம் கொண்டுவரப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையின் தலைமைப் பொறுப்பில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஒருவரை ஆணையராக நியமிக்க வழிவகை செய்யப்பட்டது. அரசின் தரவுகளின்படி இந்து சமய அறநிலையத் துறையில் 2,409 பணியிடங்கள் இருக்கின்றன. தற்போதைய சூழலில் 1,336 பேர் பணியாற்றி வருகின்றனர்.

[infogram id=”ccc952c3-6bd2-4c33-bf97-a3672b6dd979″ prefix=”0bn” format=”interactive” title=”Copy: HRCE Temples”]

வருவாய் மற்றும் ஊதியம்

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் கட்டிய கோயில்கள் இருக்கின்றன. அதன்படி, தமிழகத்தில் இருக்கும் 44,218 கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வருகின்றன. இந்து சமயக் கோயில்கள் மட்டுமின்றி 19 சமணத் திருக்கோயில்களும் இதன் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றன.

கோயில் உண்டியல்கள் தவிர இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோயில்களுக்கு நிலங்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட ஏராளமான சொத்துகள் இருக்கின்றன. கோயில்கள் மூலம் வரும் வருமானத்தை அரசு எடுத்துக் கொள்வதில்லை. கோயில்கள் அரசுக்குச் செலுத்தும் 14 சதவிகித வரி மூலம், அறநிலையத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அறநிலையத் துறைக்குச் சொந்தமாக 4,78,283 ஏக்கர் நிலம் இருக்கிறது. இவை தரவி பள்ளி, கல்லூரிகள் என 54 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.

[infogram id=”35b7df3e-4f3f-49ce-be7b-1f95e9dbb8bf” prefix=”WAD” format=”interactive” title=”Properties”]

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களை முறையாகப் பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் ஒருபுறம் வைக்கப்படுகிறது. மதச்சார்பற்ற அரசு, கோயில்கள் பராமரிப்பில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை சமீபகாலமாக வலுப்பெற்று வருகிறது. இதுதொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top