ஆல் இந்தியா ரேடியோவின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்கிற பெருமை சரோஜ் நாராயண்சுவாமியையே சாரும். உடல்நலக் குறைவால் மும்பையில் சமீபத்தில் உயிரிழந்த அவருக்கு வயது 87.
சரோஜ் நாராயண்ஸ்வாமி
இந்தியாவில் முதன்முதலில் ரேடியோ ஒளிபரப்பு தொடங்கப்பட்டது 1920களின் இறுதியில்தான். டிவி, சினிமா உள்பட வேறு எந்த பொழுதுபோக்கும் பெரிதாக தலைதூக்காத அந்த காலகட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒலிபரப்பு என்று சொன்னால், மகாத்மா காந்தி உயிரிழந்தபிறகு அவரது இறுதி அஞ்சலி நிகழ்வை சுமார் 7 மணி ரேடியோவில் லைவாக சொன்ன நிகழ்வுதான். பிரபலமான பிராக்கேஸ்டரான Melville de Mellow-வின் மராத்தான் வர்ணனை, காந்தியுடைய இழப்பின் வலியை உணர்வுப்பூர்வமாக இந்தியா முழுமைக்கும் கடத்தியது என்றே சொல்லலாம். அந்த வகையில் இன்றைய பாட் காஸ்ட்கள் தொடங்கி சோசியல் மீடியா ஸ்பேசஸ் வரையில் அத்தனைக்கும் முன்னோடி இந்த ரேடியோ. அவருக்குப் பிறகு ஆங்கிலம், இந்தியில் ஜஸ்தேவ் சிங், விஜய் டேனியல்ஸ், ரோஷன் மேனன், தேவ்கி நந்தன் பாண்டே, லோகிதா ரத்னம், சுரோஜித் சென் உள்ளிட்ட எத்தனையோ பேர் தங்கள் குரல்களால் இந்திய ரசிகர்களை வசீகரித்தனர். அவர்களுக்கெல்லாம் ட்ரம்ப் கார்டு, ஐ.டி கார்டு என எல்லாமே குரல்தான்.

அந்த வகையில் தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது கணீர் குரலால் உலக நடப்புகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை கொண்டு சேர்த்த பெருமை சரோஜ் நாராயண்ஸ்வாமியையே சாரும். காலை 7.15 மணிக்கு ஆல் இந்தியா ரேடியோவை ஆன் செய்தால், `வணக்கம். செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி..’ என்று தொடங்கி அன்றைய நாளுக்கான செய்திகளை புல்லட்டின்களாக வழங்கி, ஆல் இந்தியா ரேடியோவின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்கிற பெருமையைப் பெற்றவர். 80கள், 90களில் இவரது குரலைக் கேட்டால்தான் அன்றைய நாளே பூர்த்தியாகும் என்கிற அளவுக்கு தமிழர்கள் வீடுகளின் செல்லக் குரலுக்குச் சொந்தக்காரர்.
இவரது பூர்வீகம் தஞ்சைதான் என்றாலும், படித்தது வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான். மும்பை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்தார். திருமணம் முடிந்து 1962-ல் ரேடியோ பணியில் சேர்ந்த இவர், அதற்காக மும்பையில் இருந்து டெல்லிக்குக் குடிபெயர்ந்தார். அன்று முதல் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக கணீரென ஒலித்தது இவரது காந்தக் குரல். தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கும் வாழ்ந்து வந்த 80ஸ் கிட்ஸின் செல்லக்குரல் இவரது குரல்தான். இவரது குரலைக் கேட்டு நிச்சயம் இவர் ஆணாகத்தான் இருப்பார் என்று நினைத்துக் கொண்டவர்கள் எத்தனையோ பேர். சமீபத்தில் சரோஜ் நாராயண்ஸ்வாமி மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்த எத்தனையோ பேர், ’இப்போதுதான் இவர் பெண் என்பதே என்று எங்களுக்குத் தெரியும்; இத்தனை நாள் சரோஜ் நாராயண்ஸ்வாமி என்பவர் ஆண்தான் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்’ என்று குறிப்பிட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷனில் பிராக்கேஸ்டிங் ஜர்னலிசத்தில் மாஸ்டர் டிகிரியையும் முடித்த சரோஜ், தமிழ் ஊடக உலகின் முன்னோடிகளில் ஒருவர். ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ் செய்திப் பிரிவில் பணியில் சேர்ந்த இவர், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்தப் பிரிவின் தலைமைப் பொறுப்பிலும் இருந்தார். சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்தவர். டெல்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், நரசிம்ம ராவ் உள்ளிட்ட தலைவர்களை நேர்காணல் எடுத்தவர். இந்திரா காந்தியை அன்னை இந்திரா காந்தி என்று முதல்முறையாக தமிழில் உச்சரித்து பலரது பாராட்டுதல்களையும் பெற்றவர்.
தமிழ் உச்சரிப்பும் கணீர் குரலும்தான் இவரோட ஆகப்பெரும் பலமே. ஒரு மொழியைப் பொறுத்தவரை அதன் எழுத்து நடை ஒரு அழகென்றால், உச்சரிப்பு அழகோ அழகு என்பார்கள். அப்படி, தனது தேர்ந்த உச்சரிப்பால் தமிழுக்கு மேலும் மெருகூட்டியவர். எங்கே பாஸ் கொடுக்கணும்; எந்த செய்தியை எந்த டோனில் பிரசண்ட் பண்ணனும்னு இவர் இன்றைய ஆர்.ஜேக்களுக்கு ஒரு என்சைக்ளோபீடியாகவே வாழ்ந்து காட்டியவர். 1995-ல் ஓய்வுபெற்ற பிறகு தமிழ் திரைப்படங்கள், ஆவணப் படங்களுக்காகக் குரல் கொடுத்து வந்தார். ஒலிபரப்புத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காகக் கடந்த 2008-ல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற பிறகு மும்பையில் குடும்பத்தோடு வசித்து வந்த சரோஜ் நாராயண்ஸ்வாமி, முதுமையால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தமிழ் உள்ளளவும் அவர் குரலும் புகழும் என்றும் மறையாது..!
சரோஜ் நாராயண்ஸ்வாமியோட குரலை உங்களோட எந்த வயசுல முதல்முறையா கேட்டீங்க… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!
0 Comments