கள்ளக்குறிச்சி அருகே மலைக்குறவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் காரணம் எதுவும் சொல்லாமல் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகப் புகார் எழுந்திருக்கிறது. என்ன நடந்தது?
மலைக்குறவர் இன மக்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தில்லை நகர் பகுதியில் மலைக்குறவர் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த 22 வயதான புவனேஷ்வரி என்பவர், தனது கணவர், உறவினர்கள் இருவர் உள்பட 5 பேரை போலீஸார் சட்டவிரோதமான கைது செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தார். ஆட்சியர் பி.என்.ஸ்ரீதரின் நேர்முக உதவியாளர் சுரேஷிடம் அவர் அளித்திருக்கும் புகார் மனுவில், சின்ன சேலம் காவல்நிலைய போலீஸார் சாதாரண உடையில் வந்து தனது கணவர் பிரகாஷ், உறவினர்கள் தர்மராஜ், செல்வம் என 3 பேரை சட்டவிரோதமாக விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். `எவ்வளவோ கெஞ்சியும் விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்கான காரணம் எதையும் போலீஸார் தெரிவிக்கவில்லை. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது கதவைத் தட்டி எழுப்பி, அவர்களைக் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். காவல் நிலையம் சென்றபோது, அவர்கள் காவல் நிலையத்தில் இல்லை. சிறிது நேரம் கழித்து தில்லை நகருக்கு மீண்டும் வந்த போலீஸார், உறவினர்கள் பரமசிவம், சக்திவேல் என்ற இருவரை அழைத்துச் சென்றனர்’’ என புகார் மனுவில் புவனேஷ்வரி குறிப்பிட்டிருக்கிறார். போலீஸார் அவர்களைக் கடந்த 15-ம் தேதி அழைத்துச் சென்றபோதும் இரண்டு நாட்களாக எந்தத் தகவலும் இல்லை எனவும் அவர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
போலீஸார் என்ன சொல்கிறார்கள்?
சட்டவிரோத துன்புறுத்தலால் போலீஸ் காவலில் உயிரிழந்த கடலூர் ராஜாக்கண்ணு வழக்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஜெய்பீம் படம் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவிடம் பா.ம.க, வன்னியர் சங்கம் சார்பில் இழப்பீடு கேட்டிருந்ததும் விவாதமானது. இந்தநிலையில், பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் சட்டவிரோதமாகக் கைது செய்ததாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், அவர்கள் 5 பேரில் இருவர் புதன்கிழமை அதிகாலையில் வீடு திரும்பியிருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி நகரில் வீடு புகுந்து திருடிய புகாரில் மற்ற மூவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வீட்டில் இருந்த கைரேகைகள் இந்த மூவரின் கைரேகைகளோடு ஒத்துப்போவதாகத் தெரிவித்திருக்கும் போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.